முஸ்லிம், தமிழ், சிங்கள, கத்தோலிக்க மக்கள் ஒற்றுமையுடன் வாழுகின்ற கல்முனை மாநகரில் இனக்கலவரம் ஒன்றை தூண்டி இங்கு வாழும் மக்களின் புரிந்துணர்வில் விரிசலை ஏற்படுத்தும் வகையில் அண்மைக் காலமாக கல்முனை விகாராதிபதி ரண்முத்துகல சங்கரத்தின தேரர் செயற்படுவது வேதனையளிப்பதாக மறுமலர்ச்சி மன்றத்தின் முக்கிய செயற்பாட்டாளரான அஹமட் புர்க்கான் குற்றம் சாட்டியுள்ளார்.
கடந்த முப்பது வருட காலங்களுக்கும் மேலாக கல்முனையில் இயங்கிவரும் உப பிரதேச செயலகத்தை தரமுயர்த்தி தருவதாக தமிழ் தேசிய கூட்டமைப்பு தமது போலியான தேர்தல் வாக்குறுதியை வழங்கியது மாத்திரமல்லாது, கடந்த யுத்த காலத்தின் போது சட்டவிரோதமாக ஆயுதமுனையில் கொண்டு செல்லப்பட்டதுதான் கல்முனை தமிழ் பிரதேச செயலகம் என்ற உண்மையை அப்பாவி தமிழ் மக்களிடம் மறைத்து குறித்த தமிழ் பிரதேச செயலகத்தை தரமுயர்த்துவதற்கு முஸ்லிம்கள் தடையாக இருக்கிறார்கள் என்ற அப்பட்டமான பொய்யுரைத்தும் வருகிறார்கள்.
இவ்வாறு தமிழ் மக்களின் மத்தியில் போலியான பரப்புரைகளை கொண்டு சென்று தமிழ் முஸ்லிம் இனக்கலவரம் ஒன்றை ஏற்படுத்தி அடுத்து வரும் தேர்தலில் தமது வெற்றி இலக்கை அடையும் நோக்காகவே தமிழ் தேசிய கூட்டமைப்பின் முக்கிய சில பிரமுகர்கள் பாடுபடுகிறார்கள்.
இதுதொடர்பில் எதுவிதமான தெளிவும் இல்லாத நிலையில் ஊடக அறிக்கைகள் மூலமாக தமிழ் முஸ்லிம் மக்களின் புரிந்துணர்வில் விரிசலை ஏற்படுத்தும் விதமாக அண்மைக்காலமாக கல்முனை விகாராதிபதி ரண்முத்துகல சங்கரெத்தின தேரர் செயற்படுவது அவரது எதிர்கால அரசியல் நோக்கத்தை நிரைவேற்றவே தவிர தமிழ் மக்கள் மீதான அக்கறையல்ல என்பதை தமிழ் மக்கள் புரிந்து செயல்பட வேண்டும்.
எமது கல்முனை மறுமலர்ச்சி மன்றத்தினால் குறித்த சட்டவிரோத பிரதேச செயலகம் தொடர்பிலும் அதனால் தமிழ் முஸ்லிம் மக்களிடையே உள்ள அச்சத்தையும் சந்தேகத்தையும் கலையும் விதமாகவும் ஏற்பாடு செய்த ஊடகவியலாளர் மாநாடை தடை செய்வதில் சில தமிழ் தேசிய கூட்டமைப்பு உறுப்பினர்களுடன் விகாராதிபதி ரண்முத்துகல சங்கரெத்தின தேரரும் அதிக முனைப்புடன் செயல்பட்டார். குறித்த ஊடக மாநாடை நடத்த விடாமல் எமது மன்றத்தின் தலைவருக்கு எதிராக கல்முனை பொலிஸில் முறைப்பாடு செய்து தடுப்பதற்காக தொடர் முயற்சியில் ஈடுபட்டனர்.
சமூக ஒற்றுமை, நல்லிணக்கத்தை விரும்பும் எமது கல்முனை மறுமலர்ச்சி மன்றத்தை இனவாத குழுவாக செயல்படுவதாக சிலர் தமிழ் மக்கள் மத்தியில் உண்மைக்கு புறம்பான விமர்சனம் செய்கின்றனர்.
இவ்வாறான போலி விமர்சனத்தின் ஊடாக ஏற்பட்ட சந்தேகத்தை கலையும் விதமாக நாம் ஊடக மாநாட்டை வேறு இடத்தில் ஏற்பாடு செய்து தெளிவுபடுத்தியுள்ளோம்.
தகவல் அறியும் சட்டமூலத்தின் ஊடாக பெறப்பட்ட தகவல்களை அடிப்படையாக கொண்டு குறித்த சட்ட விரோத தமிழ் பிரதேச செயலகத்திற்கு எதிராக எமது மறுமலர்ச்சி மன்றத்தின் தலைவர் நஸிர் ஹாஜியார் கொழுப்பு உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருக்கிறார்.வழக்கின் தீர்ப்பு எமது மறுமலர்ச்சி மன்றத்தின் தலைமையின் முயற்சிக்கு வெற்றியாக அமையும் எனவும் தெரிவித்தார்.மேலும் ‘ இனவாதம் கருவான கல்முனையில் – கோட்பாடுகளை மீறிய கூப்பாடுகள்’ என்ற புத்தகம் தமிழ் மற்றும் சிங்கள மொழியில் வெளியிடப்பட்டது குறிப்பிடத்தக்கது.