” ரணில் அமைச்சர்மார் பட்டியல் ஒன்றை எடுத்துக் கொண்டு வந்து என்னிடம் நின்றார். நான் அதற்கு அனுமதியை வழங்கவில்லை. சற்று நேரம் என் முகத்தை பார்த்துவிட்டு சென்றுவிட்டார் தேசிய அரசு என்ற பேச்சுக்கே இடமில்லை ”
இவ்வாறு இன்று இரவு ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மூத்த உறுப்பினர்களை சந்தித்துப் பேசியபோது திட்டவட்டமாக தெரிவித்திருக்கிறார் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன. .ஜனாதிபதியின் பெஜெட் வீதி வாசஸ்தலத்தில் இந்த சந்திப்பு நடந்தது. வேறு ஒரு நிகழ்வில் கலந்து கொண்டு சற்று தாமதமாகி வந்த மைத்ரி – சற்று கோபமான தொனியில் இன்றைய கூட்டத்தில் பேசினார்.
வரவு செலவுத்திட்ட இறுதி வாக்கெடுப்பில் என்ன நிலைப்பாட்டை எடுப்பது என்பது பற்றி இன்றைய கூட்டத்தில் பேசப்பட்டது.ஆனால் அதுபற்றி மேலும் ஆராய்ந்து வாக்கெடுப்புக்கு முதல் நாள் அதாவது 4 ஆம் திகதி இரவு கூடி ஆராய்ந்து இறுதி முடிவை எடுப்பதென இன்று தீர்மானிக்கப்பட்டது.
பின்னர் தேசிய அரசு விடயம் நடக்குமா நடக்காதா என்று கூறுமாறு கட்சி முக்கியஸ்தர்கள் ஜனாதிபதியிடம் கேட்டனர். அந்தக் கேள்விக்கு சற்று இறுக்கமான முகத்துடன் பதிலளித்த ஜனாதிபதி மைத்ரி…
”தேசிய அரசு குறித்து ஐக்கிய தேசியக் கட்சி தான் பிரசாரம் செய்து வருகிறது. அமைச்சர்கள் பெயர்கள் என்று கூறி ஒரு பட்டியலை எடுத்துக் கொண்டு பிரதமர் ரணில் என்னிடம் வந்து நின்றார். அமைச்சர்கள் சிலர் பதவி வேண்டும் எனக் கேட்கின்றனர் என்று அவர் சொன்னார்.ஆனால் அப்படி யாரும் என்னிடம் சொல்லவில்லையே என்று நான் கூறினேன்.சற்று நேரம் அமைதியாக இருந்து என் முகத்தை பார்த்துவிட்டு அவர் திரும்பிச் சென்றுவிட்டார். தேசிய அரசு என்ற பேச்சுக்கே இடமில்லை.அப்படியான ஒன்றுக்கு நான் இடமளிக்க மாட்டேன். இந்த கதையை உலாவவிட்டவர்கள் அவர்கள் தான். அப்படி ஏன் செய்கிறார்கள் என்பது எனக்குத் தெரியும் .அதற்கெல்லாம் நான் சம்மதிக்கப் போவதில்லை ” என்றும் மைத்ரி காரசாரமாக தெரிவித்துள்ளார்.
இன்றைய கூட்டத்திற்கு ஈ பி டி பியின் செயலாளர் நாயகமும் எம் பியுமான டக்ளஸ் தேவானந்தாவையும் ஜனாதிபதி பிரத்தியேகமாக அழைத்திருந்ததாக தகவல்கள் தெரிவித்தன.