கல்விக்கொள்கையின் மூலம் பிள்ளைகள் சிறப்பாக பரீட்சைகளில் சித்தியடைவதைப் போன்று அவர்களின் சிறந்த எதிர்காலத்திற்காக வழிகாட்ட வேண்டியதும் அவசியமாகுமென்று ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன தெரிவித்தார்.
இன்று (05) முற்பகல் கடவத்த மகா மாய மகளிர் கல்லூரியில் இடம்பெற்ற புதிய விளையாட்டரங்குடன் கூடிய இரண்டு மாடி கட்டிடத்திற்கு அடிக்கல் நாட்டும் நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே இதனை தெரிவித்தார். கல்லூரிக்கு சென்ற ஜனாதிபதியை பாடசாலை மாணவிகள் மிகுந்த மகிழ்ச்சியுடன் வரவேற்றனர்.
ஜனாதிபதி புதிய இரண்டு மாடி கட்டிடத்திற்கான அடிக்கல்லை நாட்டினார்.
ஜனாதிபதயைின் கோரிக்கையின் பேரில் பாடசாலை மாணவி ஒருவரினால் அதற்கான நினைவுப்பலகை திரைநீக்கம் செய்து வைக்கப்பட்டது.
புலமைப்பரிசில் பரீட்சையை இரத்துச் செய்து புதிய கல்வித்திட்டமொன்றை அறிமுகப்படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டிருப்பது, பிள்ளைகள் தமது திறமைகளுக்கேற்ப எதிர்காலத்தை கட்டியெழுப்புவதற்கான சந்தர்ப்பத்தை ஏற்படுத்திக் கொடுப்பதற்காகவாகும் என ஜனாதிபதி மேலும் தெரிவித்தார்.
ஐந்தாம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சைக்கு பதிலாக எட்டாம் ஆண்டில் பரீட்சை ஒன்றை நடத்தி தமது திறமைகளுக்கேற்ப தெரிவு செய்த பாடத் துறையின் மூலம் பிள்ளைகளுக்கு உயர் கல்வியை கற்பதற்கு இந்த புதிய நிகழ்ச்சித்திட்டத்தின் மூலம் வாய்ப்பு கிடைப்பதுடன், பாடசாலைகளை வகைப்படுத்தி, அப்பாடசாலைகளுக்கான விசேட பாடத் துறைகளை விரிவுபடுத்த எதிர்பார்ப்பதாகவும் ஜனாதிபதி குறிப்பிட்டார்.
புத்தாக்கம் மற்றும் பசுமைப் பொருளாதாரத்திற்கு பொருத்தமான கல்வி முறைகளுக்கு மாணவர்களை வழிகாட்டுவதுடன், பட்டப் படிப்பை முடித்து தொழில் தேடி வீதிகளில் போராட்டங்களை நடாத்தும் யுகத்திற்கு முடிவு கட்டுவது புதிய நிகழ்ச்சித்திட்டத்தின் நோக்கமாகுமென்று ஜனாதிபதி தெரிவித்தார்.
பாடசாலையின் அதிபர் புஸ்பிக்கா பந்துவங்சவினால் ஜனாதிபதிக்கு விசேட நினைவுச் சின்னம் ஒன்று வழங்கி வைக்கப்பட்டது.
மேல் மாகாண முதலமைச்சர் இசுற தேவப்பிரிய, பாராளுமன்ற உறுப்பினர் லசந்த அழகியவன்ன உள்ளிட்ட மக்கள் பிரதிநிதிகளும் பாடசாலையின் அதிபர், ஆசிரியர்கள், பெற்றோர், பழைய மாணவர்கள் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.