Top News

மலரவுள்ள புதிய ஆட்சியில் மலையகத்துக்கே முன்னுரிமை! நாமல் எம்.பி. உறுதி!!


” மலரவுள்ள எமது ஆட்சியில் மலையகத்துக்கே அதிக முக்கியத்துவம் வழங்கப்படும்.” – என்று ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் அம்பாந்தோட்டை மாவட்ட  எம்.பி. நாமல் ராஜபக்ச தெரிவித்தார்.
நாடாளுமன்றத்தில் தற்போது (03) நடைபெற்றுவரும் பெருந்தோட்டக் கைத்தொழில் அமைச்சு, மலையக புதிய கிராமங்கள், உட்கட்டமைப்பு வசதிகள் மற்றும் சமூக அபிவிருத்தி அமைச்சு ஆகியவற்றுக்கான  குழுநிலை விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே நாமல் எம்.பி. இவ்வாறு கூறினார்.
”  தோட்டப்பகுதி மக்கள் குறித்து பலரும் இன்று அன்புகலந்த தொனியில் உரையாடுகின்றனர்.  ஆனால், 150 வருடங்களுக்கு மேலாகியும் அம்மக்களுக்கு இன்னும் உரிய வாழ்வு – வசதிகள் கிடைக்கவில்லை.
கல்வி, சுகாதாரம், ஆசிரியர் பற்றாக்குறை என பலப்பிரச்சினைகள் தோட்டப்பகுதிகளில் நிலவுகின்றன. தோட்ட நிர்வாகத்தால் நடத்தப்படும் வைத்தியசாலையில்தான் சிகிக்கை பெறவேண்டிய சூழ்நிலையும் ஏற்பட்டுள்ளது.
மஹிந்த ராஜபக்சவின் ஆட்சிகாலத்தின்போது மலையகத்தில் உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டது. ஆனால், 2015 ஆம் ஆண்டுடன் அவை கைவிடப்பட்டுள்ளன.
தொழிலாளர்களின் பிள்ளைகள் படித்து, சிறந்த வேலைக்கு சென்றுவிட்டால் தமக்கு அரசியல் நடத்த முடியாது என்ற பிரச்சினையாலா மலையக அரசியல் வாதிகள் இவ்வாறு செயற்படுகின்றனர்?
மலரவுள்ள எமது ஆட்சியின்போது மலையகம்மீது விசேட பார்வை செலுத்தப்படும். கல்வி, சுகாதாரம் ,  வேலையிண்மை பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கு உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.” என்றார்.
Previous Post Next Post