அதாவுல்லாஹ் கட்சியில் கடந்த காலங்களில் கோலோட்சிய அட்டாளைச்சேனை உதுமாலப்பை ( முன்னாள் மாகாண அமைச்சர்) ஹக்கீம் காங்கிரசில் இணையும் தீவிர முயற்சியில் ஈடுபட்டு வருவதாக அறிய வருகின்றது.
இதேவேளை உதுமாலப்பையை அமைச்சர் ரிசாத் அணியில் இணைக்கும் ஒரு நகர்வு நடைபெற்று வருகின்றன.
உதுமாலப்பையை ஹக்கீம் காங்கிரசில் இணைப்பதற்காக பிரதி அமைச்சர் கல்முனை ஹரீஸ், பிரதி அமைச்சர் நிந்தவூர் பைசல் கசீம் மற்றும் சம்மாந்துறை மன்சூர் எம்.பி ஆகியோர் மிகத் தீவிரம் காட்டி வருவதாக மற்றுமொரு செய்தி கிடைத்துள்ளது.
இதேவேளை ஹக்கீம் கட்சியின் அட்டாளைச்சேனை மத்திய குழுவினர் யாரும் உதுமாலப்பை ஹக்கீம் கட்சியில் இணைவதை விரும்பவில்லை என்று அட்டாளைச்சேனை மத்திய குழுவின் பிரமுகர்கள் தெரிவிக்கின்றனர்.
காரணம் அதாவுல்லாஹ் கட்சியில் கோலோட்சிய காலங்களில் உதுமாலப்பை அட்டாளைச்சேனையில் ஹக்கீம் கட்சி தொண்டர்களை, ஆதரவாளர்களை பொலிஸில் சிக்கவைத்து சிறைக்கு அனுப்பியது, வெடி குண்டு தயாரித்தார்கள் என்று பொய்யாக சோடித்து சுமார் 26 பேரை மாதக்கணக்காக சிறையில்அடைக்கப்பட்டு சம்பவம் உள்ளது .
வருடக்கணக்காக வழக்கு நடந்த கதையும், தண்டப்பணம் கட்டிய கதையும் உள்ளது .8 பேர் 133 நாள் மட்டக்களப்பு சிறையில் அடைப்பட்ட கதையும் உள்ளது .இன்னும் பலருக்கு வழக்கு நடந்து வருகின்றன.
சொந்த ஊர் மக்கள் சொந்தங்கள் பந்தகள் என்றும் பாராமல் அதிகாரம் கையில் இருக்கு என்ற மமதையில் ஹக்கீம் தொண்டர்களை கொடுமைபடுத்திய பல சம்பவங்கள் உள்ளன.
இந்த நிலையில் உதுமாலப்பை ஹக்கீம் காங்கிரசில் இணைந்து கொண்டால் ஹக்கீம் காங்கிரசில் இருந்து பலர் வெளியாகலாம் அல்லது ஒதுங்கி கொள்ளும் நிலையும் உள்ளது. அல்லது ஹக்கீம் காங்கிரசுக்கு வாக்களிக்காமல் விடலாம் .
அதாவுல்லாஹ் அணியில் இருந்து பலர் வெளியேறவில்லை
உதுமாலப்பை அதாவுல்லாவை விட்டு வெளியேறினாலும் அட்டாளைச்சேனையில் இருந்து பலர் வெளியேறவில்லை. அதாவுல்லாவிடம் தொழில் பெற்றவர்கள் அதாவுல்லாவின் கொள்கையில் பற்றுக் கொண்டவர்கள் பலர் இன்னும் அதாவுல்லாஹ்விடம்தான் உள்ளார்கள் .
உதுமாலப்பையின் வெளியேற்றம் என்பது அதாவுல்லாஹ்வுக்கு பெரிய தாக்கம் செலுத்தாது. உதுமாலப்பையின் வாக்குப் பலம் என்பது சுமார் இரண்டாயிரம் மூன்றாயிரம் வாக்குகள் மட்டுமே.
அதனால் உதுமாலப்பை எதிர்வரும் மாகாண சபை தேர்தலில் ஹக்கீம் காங்கிரஸ் கட்சி தவிர வேறு எந்தக் கட்சியிலும் வெற்றி பெற முடியாது. அதனால்தான் உதுமாலப்பை ஹக்கீம் கட்சியில் இணைவதில் அதிக முனைப்புக் காட்டி வருகின்றார் .
உதுமாலப்பையின் வெற்றி என்பது அதாவுல்லாஹ்வின் தயவு
கிழக்கு மாகாண தேர்தலில் உதுமாலப்பை இரண்டு தடவைகள் அதாவுல்லாஹ் கட்சியில் இருந்து வெற்றி பெற்றார் அதாவுல்லாஹ்வின் தயவின் மூலமாக கிடைத்த வாய்ப்பு அது.
அக்கரைபற்று மக்கள் முற்றாக உதுமாலப்பைக்கு வாக்களிக்க வேண்டும் என்று அதாவுல்லாஹ் போட்ட கட்டளையின் பிரகாரம் அந்த வெற்றியை அடைய முடிந்தது.
ஆனால் இப்போது அதாவுல்லாவை விட்டு உதமாலப்பை வெளியேறியுள்ளதால் அந்த வாய்ப்பு இல்லை .ஏற்கனவே ஹக்கீம் காங்கிரஸ் அணியினர் உதுமாலப்பை மீது கடுப்பும் வெறுப்பும் கொண்டுள்ளதால் உதுமாலப்பை ஹக்கீம் காங்கிரசுக்குள் வந்தாலும் பாரிய பின்னடைவு உள்ளது.
உதுமாலப்பை போடும் வெற்றிக் கணக்கு
ஹக்கீம் காங்கிரசுக்குள் உதுமாலப்பை உள்வாங்கப்பட்டால் செலவுகள் இன்றி சுமார் 70 வீதமான வாக்குகள் ஹக்கீம் காங்கிரஸ் கட்சி மூலமாக கிடைக்கும் என்ற கணக்கு.
ஆனால் நசீர் எம்.பியின் ஆதரவு கொண்ட வாக்குகள் உதுமாலப்பைக்கு செல்லாமல் அவைகள் பொத்துவில் மற்றும் வேறு ஊருக்கு செல்லும். நசீர் எம்.பியின் ஆதரவின்றி உதுமாலப்பை அட்டாளைச்சேனைக்குள் வெற்றி பெற முடியாது.
கல்முனை ஹரீஸ், அமைச்சர் நிந்தவூர் பைசல் கசீம் மற்றும் சம்மாந்துறை மன்சூர் எம்.பி ஆகியோர் உதுமாலப்பையை உள்வாங்க துடிப்பது அல்லது மிகத் தீவிரம் காட்டுவதானது எதிர்வரும் போது தேர்தலில் நசீர் எம்.பிக்கு வேட்டு வைக்கவாம் என்று மற்றுமொரு செய்தி கிடைத்துள்ளது.
இது குறித்து நாம் உதுமாலப்பையை தொடர்பு கொண்டு கேட்ட போது இன்னும் எந்தவொரு முடிவுமில்லை என்றும் ஹக்கீம் அணி பேசிவருவதாகவும் தெரிவித்தார். கட்சி மாறுவது என்பது எனது தனிபட்ட கருத்தாக இல்லாமல் எனது ஆதரவாளர்களின் முடிவோடு இருக்கும் என்றார்.
நசீர் எம்பியுடன் தொடர்பு கொண்டு கேட்டபோது கட்சிக்குள் யாரும் வரலாம் உதுமாலப்பை எப்போது வேண்டுமாலும் கட்சியில் இணைந்து கொள்ளலாம் என்றார்.
பிரதி அமைச்சர்களான ஹரீஸ், பைசல் கசீம் மற்றும் சம்மாந்துறை மன்சூர் எம்பி ஆகியோரை தொடர்பு கொள்ள முயன்ற போதும் அவர்கள் தொடர்புக்கு வரவில்லை.
இங்கு நாம் இரண்டு வெற்றி தோல்விகளை சொல்லி விடலாம். எதிர்வரும் போது தேர்தலில் அதாவுல்லாஹ் ஹக்கீம் அணி அல்லது ரிசாத் அணி ஆகிய இரண்டு அணிகளில் ஏதாவது ஒரு அணியில் இணைந்து கொண்டால் மட்டுமே அதாவுள்ளஹ்வின் வெற்றி சாத்தியப்படும்.
அதை விட்டு மாற்று அணிகளான சுதந்திரக்கட்சி அல்லது மொட்டுக் கட்சியில் போட்டியிட்டு அதாவுல்லாஹ் வெற்றி பெறும் வாய்ப்பு இல்லை .ரிசாத் அணி அம்பாறைக்கு இறக்குமதி செய்யபட்ட பின்னர் அதாவுல்லாவின் வெற்றி பறிக்கப்பட்டு விட்டது.
அதே போன்று உதுமாலப்பையின் வெற்றி என்பது அக்கரைப்பற்று மக்களின் கையிலும் உள்ளது, அட்டாளைச்சேனை மக்களின் முற்று முழுதான ஆதரவு கிடைக்குமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
NILAMDEEN