ஜனாதிபதி தேர்தல் இந்த வருடத்தின் இறுதியில் நிச்சயமாக நடைபெறும். ஆனால் அதற்கு முன்னர் மாகாண சபைகளுக்கான தேர்தலை நடத்தவேண்டியுள்ளதை அனைவரும் நினைவில் கொள்ள வேண்டும். மாகாண சபைகளுக்கான எல்லை நிர்ணயத்துக்கும் தேர்தல் முறைமை குறித்தும் சகல கட்சிகளும் பொதுவான தீர்வினை பெற்றுக் கொடுக்குமாக இருந்தால் ஜனாதிபதி தேர்தலுக்கு முன்னர் மாகாண சபைகளுக்கான தேர்தல் குறித்து அரசாங்கம் கவனம் செலுத்துமென மகாவலி அபிவிருத்தி மற்றும் சுற்றாடல் இராஜாங்க அமைச்சர் அஜித் மன்னப்பெரும தெரிவித்தார்.
மாகாண சபைத்தேர்தல் மற்றும் தேர்தல்களை உரிய காலத்தில் நடத்துவது தொடர்பில் எழுந்துள்ள சிக்கல் நிலைமைகள் குறித்தும், இந்த தேர்தல்களை நடத்துவது தொடர்பில் அரசாங்கத்தின் நிலைப்பாடு தொடர்பிலும் வினவிய போதே அவர் இதனை குறிப்பிட்டார்.
இது குறித்து அவர் மேலும் குறிப்பிடுகையில், இந்த ஆண்டின் இறுதியில் நிச்சயமாக ஜனாதிபதி தேர்தல் நடத்தப்படும். அதற்கான உரிய காலமும் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. எனவே ஜனாதிபதித் தேர்தலில் இருந்து தப்பிக்கவோ அல்லது தேர்தலை உரிய காலத்தில் நடத்துவதை தடுத்து நிறுத்தவோ எவராலும் முடியாது.
இதேவேளை, ஜனாதிபதித் தேர்தலுக்கு முன்னர் மாகாண சபைத் தேர்தலை நடத்த வேண்டியுள்ளதை மறந்துவிடக் கூடாது. ஜனாதிபதி தேர்தலுக்கு முன்னர் மாகாண சபைகளுக்கான தேர்தலை உரிய காலத்தில் நடத்துவதே அரசாங்கத்தின் எதிர்பார்பார்ப்பாக காணப்படுகின்றது. ஐக்கிய தேசிய கட்சியும் இந்த நிலைப்பாட்டிலேயே உள்ளது.
ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியுடனான தேசிய அரசாங்கத்தின் போதும் மாகாண சபை தேர்தலை நடத்துவதற்கான சகல கட்சிகளுடன் பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட்ட போதிலும் ஒவ்வொரு தரப்பினரும் வெவ்வேறான கருத்துக்களை வெளியிட்டு வந்த நிலையில் எல்லை நிர்ணய அறிக்கை மற்றும் தேர்தல்முறை தொடர்பிலும் எவரும் பொது உடன்பாட்டுக்கு வரவில்லை.
இவ்வாறான நிலையிலேயே அரசியல் நெருக்கடி உருவாகியது. அரசியல் நெருக்கடி நிலைமையின் பின்னர் மாகாண சபைத் தேர்தல் தொடர்பான பேச்சுவார்த்தைகள் தடைப்பட்டு போயிருந்தன. இருப்பினும் தற்போது ஜனாதிபதித் தேர்தலையும் உடனடியாக நடத்த வேண்டியது அவசியமாகும்.
ஜனாதிபதித் தேர்தலுக்கு முன்னரோ அல்லது தேர்தலின் பின்னரோ மாகாண சபைகளுக்கான தேர்தல் இடம்பெறுமாக இருந்தால் அது நிச்சயமாக புதிய முறையில் நடத்தப்பட வேண்டும்.
காரணம் கடந்த உள்ளூராட்சி மன்றங்களுக்கான தேர்தல் புதிய தேர்தல் முறைமைக்கு அமைவாக நடத்தப்பட்டமையினால் உள்ளூராட்சிமன்றங்களின் உறுப்பினர்களின் அதிகரிப்புடன் செலவுகளும் பிரச்சினைகளும் அதிகரித்திருந்தன. இந்த நிலைக்கு எதிர்வரும் மாகாண சபைகளுக்கான தேர்தலின் போது இடமளிக்க முடியாது. ஆகவே தற்போது நடைமுறையில் உள்ள புதிய கலப்பு முறைக்கு மாறாக பழைய விகிதாசார தேர்தல் முறையிலோ அல்லது மாற்று தேர்தல் முறையினூடாகவோ மாகாண சபைகளுக்கான தேர்தலை நடத்த வேண்டும்.
தேர்தலை முறைமையை போன்ற எல்லை நிர்ணய அறிக்கைக்கும் சகல தரப்பினரும் தமது ஒத்துழைப்பினை வழங்கவேண்டும். மாகாண சபைத் தேர்தல் தொடர்பான பேச்சுவார்த்தைகள் சகல கட்சிகளுடனும் இடம்பெற்றே வருகின்றன. அதேபோன்று கடந்த அரசாங்கம் மாகாண சபைகளுக்கான தேர்தலை பகுதியளவில் நடத்தியதால் அரசாங்கத்தின் செலவுகளும் அதிகரித்திருந்தன. தற்போதைய நிலைமைகளுக்கு தேர்தலுக்களுக்கான செலவினை கட்டுபடுத்தி பிரச்சினைகளுக்கு தீர்வினை காணக்கூடிய தேர்தலை முதலில் நடத்த வேண்டி அவசியமும் அரசாங்கத்துக்கு உள்ளது.
அதேபோன்று கடந்த காலங்களில் ஒன்பது மாகாணங்களுக்குமான தேர்தலை ஒரே தினத்தில் நடத்தும் நிலைப்பாடும் காணப்பட்டது. அவ்வாறு ஒரே சந்தர்ப்பத்தில் ஒன்பது மாகாண சபைகளுக்குமான தேர்தல் இடம்பெற வேண்டுமாயின் தேர்தல் முறைமை குறித்து இறுதித் தீர்மானம் கிடைக்க வேண்டும். அதன் பின்னரே ஒன்பது மாகாணங்களுக்குமான தேர்தல் எவ்வாறு நடத்துவது தொடர்பிலும் நடத்தும் தினம் தொடர்பிலும் இறுதி தீர்மானத்தை வழங்க முடியும் என்றார்.