வரவு- செலவுத் திட்டம், 45 மேலதிக வாக்குகளால் நிறைவேற்றப்பட்டதன் மூலம், அரசாங்கம் பலமானதென மீண்டும் நிரூபிக்கப்பட்டுள்ளதெனத் தெரிவித்துள்ள அமைச்சர் லக்ஷமன் கிரியெல்ல, ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி இன்று தனித்துவிட்டது என்றார்.
சூழ்ச்சிகள் மூலமாக, களவான பாதையின் ஊடாக, எங்களுடைய அரசாங்கத்தை அபகரிப்பதற்கு எடுக்கப்பட்ட முயற்சி கைகூடவில்லையெனத் தெரிவித்த அவர், எதிர்க்கட்சியில் இருக்கும் போதே, பொறுமையுடன் இருக்கவேண்டுமென்பதை எதிர்க்கட்சியினர் புரிந்துகொள்ள வேண்டும். ஐக்கிய தேசியக் கட்சி, 10 வருடங்களுக்கும் மேல் எதிர்க்கட்சியில் இருந்தது என்றார்.
கண்டி நகரத்தில் முன்னெடுக்கப்பட்ட பல்வேறான வேலைத்திட்டங்களை ஆரம்பித்துவைத்து உரையாற்றும் போதே, அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அங்கு அவர் தொடர்ந்து உரையாற்றுகையில்,
“ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி, தற்போது தனிமைப்படுத்தப்பட்டுவிட்டது. தங்களுடைய உதவியால், வெளிச்சத்துக்கு வந்து, எங்களது தயவில் அமைச்சு பதவிகளைப் பெற்று, எங்களுடைய முதுகிலேயே குத்தியமைக்கான, பிரதிபலன்களை சுதந்திரக் கட்சி அனுபவித்து கொண்டிருக்கின்றது” என்றார்.
புதிய தேர்தல் முறைமை தொடர்பிலான சட்டம் நிறைவேற்றப்படவில்லை. பழைய முறைமைக்கு, ஐ.தே.க தயார். புதிய தேர்தல் முறைமை தொடர்பில், அமைச்சர் பைசர் முஸ்தபா, சட்டத்தை முன்வைத்தாலும் அதனை எதிர்த்தார் எனத் தெரிவித்த அவர், எவ்வாறாயினும், மக்களுக்கு வழங்கிய வாக்குறுதிகளை நாங்கள் நிறைவேற்றுவோம் என்றார்.
அரசாங்கத்தின் செயற்பாடுகளை விமர்சிப்போர், எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களை முன்னெடுப்போர் இன்றும் உள்ளனர். இவ்வாறானவர்கள், அந்தக் காலத்தில் இருந்திருந்தால், வௌ்ளை வான்களில்தான் சென்றிருக்க வேண்டும். எந்தவோர் எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தையும் முன்னெடுப்பதற்கான சுதந்திரம் வழங்கப்பட்டுள்ளது எனத் தெரிவித்த அவர், அதுதான் ஜனநாயகமாகும் என்றார்.
தங்களுடைய அரசாங்கத்தில் ஊடகச் சுதந்திரம் வழங்கப்பட்டுள்ளது எனத் தெரிவித்த அவர், எதிர்ப்பு நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்கான சுதந்திரமும் வழங்கப்பட்டுள்ளது என்றார்.