அனைத்து தரப்பினருடனும் கலந்துரையாடி சாய்ந்தமருதுக்கான தனியான உள்ளூராட்சி சபைக்கான கோரிக்கையைத் தீர்த்து வைப்பதாக முஸ்லிம் அரசியல் தலைமைகளும், சம்பந்தப்பட்ட அமைச்சரும் வாக்குறுதியளித்து பல மாதங்கள் கடந்துவிட்டபோதும் எவ்வித நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்படவில்லை. அதனால் விரைவில் சத்தியாக்கிரகப் போராட்டங்களை நடத்தவுள்ளதாகவும், நோன்பு காலத்திலும் இப்போராட்டத்தை முன்னெடுக்கவுள்ளதாகவும் சாய்ந்தமருது ஜும்ஆ பள்ளிவாசலின் தலைவர் வை.எம்.ஹனிபா தெரிவித்தார்.
சாய்ந்தமருதுக்கென தனியான உள்ளூராட்சி சபையொன்றினைப் பெற்றுக் கொள்வதற்கான போராட்டம் தொடர்பில் விளக்கமளிக்கையிலே அவர் இவ்வாறு கூறினார். அவர் தொடர்ந்து விளக்கமளிக்கையில், “மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி இராஜாங்க அமைச்சர் எச்.எம்.எம்.ஹரீஸுடன் இவ்விவகாரம் தொடர்பில் பேச்சுவார்த்தை நடாத்துவதற்கு நேரம் ஒதுக்கித் தரும்படி கோரிக்கை விடுத்து பல மாதங்களாகியும் எங்களது கோரிக்கை கவனத்தில் கொள்ளப்படவில்லை. இதனையடுத்தே சத்தியாக்கிரகப் போராட்டங்களையும் கவனயீர்ப்புப் போராட்டங்களையும் நடத்தவுள்ளோம்.
சாய்ந்தமருதுக்கான தனியான உள்ளூராட்சி சபையொன்றினைப் பெற்றுக்கொள்ளும் வரை எமது போராட்டங்கள் தொடரும். இந்தப் போராட்டத்தில் பள்ளிவாசல்களின் நிர்வாகிகள், வர்த்தகசங்கத்தின் பிரநிகதிநிதிகள், உலமா சபை பிரதிநிதிகள் மற்றும் சிவில் சமூக அமைப்புகளின் பிரதிநிதிகள், சுயேச்சைக் குழுவின் உறுப்பினர்கள் என பிரதேசத்தைச் சேர்ந்த அனைவரும் கலந்துகொள்ளவுள்ளனர்.
சாய்ந்தமருது மக்கள் முஸ்லிம் அரசியல் வாதிகளால் நீண்டகாலமாக ஏமாற்றப்பட்டு வந்திருக்கிறார்கள். அவர்கள் பொய்யான வாக்குறுதிகளை வழங்கி ஏமாற்றியிருக்கிறார்கள். சாய்ந்தமருது மக்கள் தொடர்ந்தும் ஏமாறுவதற்குத் தயாராக இல்லை. எமது கோரிக்கை சம்பந்தப்பட்ட அமைச்சராலும், முஸ்லிம் அரசியல் தலைமைகளாலும் நிறைவேற்றித் தரப்படாவிட்டால் நாம் இறுதியாக ஜனாதிபதியைச் சந்தித்து எங்கள் கோரிக்கைகளை முன் வைக்கவுள்ளோம் என்றார்.