* கூட்டமைப்பு ஆதரவு
* ஜே.வி.பி., மஹிந்த அணி எதிர்ப்பு
* நடுநிலை வகிக்க சு.க. தீர்மானம்?
* ஐ.தே.கவின் அதிருப்தியாளர்களுடன் பிரதமர் பேச்சு
ஐக்கிய தேசிய முன்னணி அரசின் 2019ஆம் ஆண்டுக்கான வரவு – செலவுத் திட்டம் மீதான இறுதி வாக்கெடுப்பு நாடாளுமன்றத்தில் இன்று மாலை நடைபெறவுள்ளது.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் 14 உறுப்பினர்களின் ஆதரவுடன் வரவு - செலவுத் திட்டத்தை நிறைவேற்றிவிடலாம் என ஆளுந்தரப்பு நம்பிக்கை வெளியிட்டிருந்தாலும், அரசுக்கு நெருக்கடி கொடுப்பதற்குரிய நடவடிக்கையில் மஹிந்த அணி இறங்கியுள்ளது.
எனவே, இன்று கட்டாயம் சபைக்கு வருமாறு ஆளுங்கட்சி உறுப்பினர்களுக்குப் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவினால் பணிப்புரை விடுக்கப்பட்டுள்ளதுடன், வெளி இடங்களுக்குச் செல்லவும் தடைவிதிக்கப்பட்டுள்ளது.
அத்துடன், அதிருப்தி நிலையிலுள்ள ஐ.தே.கவின் பின்வரிசை எம்.பிக்களைத் திருப்திப்படுத்தும் வகையில் அவர்களுடன் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க பேச்சு நடத்தியுள்ளார். கம்பெரலிய (ஊரெழுச்சி) வேலைத்திட்டத்தின் கீழ் இவர்களுக்குக் கூடுதல் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது என அறியமுடிகின்றது.
அதேவேளை, எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ச தலைமையிலான பொது எதிரணியின் 70 உறுப்பினர்களும், ஜே.வி.பியின் 6 உறுப்பினர்களும் வரவு - செலவுத் திட்டத்துக்கு எதிராக வாக்களிக்கவுள்ளனர்.
இரண்டாம் வாசிப்பு மீதான வாக்கெடுப்பின்போது வாக்கெடுப்பில் கலந்துகொள்ளாது நடுநிலை வகித்த ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் 23 உறுப்பினர்களும், இன்றைய இறுதி வாக்கெடுப்பின்போது எத்தகைய முடிவை எடுப்பார்கள் என்பது குறித்து இன்னமும் அறிவிக்கவில்லை.
எதிர்த்து வாக்களிக்கப்படும் என சு.க. உறுப்பினர்கள் சிலர் அரசியல் மேடைகளில் முழக்கமிட்டிருந்தாலும் இது தொடர்பில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் நாடாளுமன்றக் குழு நேற்று மாலை நாடாளுமன்ற வளாகத்தில் கூடி ஆராய்ந்தது. எனினும், வரவு - செலவுத் திட்டத்துக்கு ஆதரவாக வாக்களிப்பதா? இல்லையா? என்பது குறித்து இன்று முற்பகல் ஜனாதிபதி தலைமையில் கூடி இறுதி முடிவொன்றை எடுப்பதென சு.கவின் நாடாளுமன்றக் குழு முடிவு செய்துள்ளது.
பெரும்பாலும் சு.கவின் 23 உறுப்பினர்களும் இன்றைய வாக்கெடுப்பின்போது நடுநிலை வகிக்கும் வகையில் சபையிலிருந்து வெளியேறி விடுவார்கள் என அத்தரப்பிலிருந்து அறியமுடிந்தது.
இதேவேளை, வரவு - செலவுத் திட்டத்தின் இரண்டாம் வாசிப்புக்கு எதிராக வாக்களித்திருந்த மஹிந்த அணியினர் இறுதி வாக்கெடுப்பின் (மூன்றாம் வாசிப்பு) போதும் எதிராக வாக்களிக்க ஏற்கனவே முடிவெடுத்திருந்தாலும் இன்று முற்பகல் மீண்டும் கூடி அது தொடர்பில் ஆராயவுள்ளது எனத் தெரிவிக்கப்படுகின்றது.
இறுதி வாக்களிப்பு தொடர்பில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுடன் எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ச தலைமையிலான பொது எதிரணியினர் நேற்று மாலை நாடாளுமன்ற வளாகத்தில் பேச்சு நடத்திய போதும் அது இணக்கப்பாடு இல்லாமல் முடிவடைந்தது.
எவ்வாறாயினும் இறுதி வாக்கெடுப்பு குறித்து மைத்திரியும் மஹிந்தவும் பிடிகொடுக்காமல் இறுதி நேரம் வரை காத்திருப்பது அதிரடி முடிவொன்றுக்காக இருக்கலாம் என உள்ளகச் செய்திகள் கூறுகின்றன.
2019ஆம் ஆண்டுக்கான வரவு – செலவுத் திட்டம் கடந்த மார்ச் 5ஆம் திகதி நிதி அமைச்சர் மங்கள சமரவீரவால் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டது.
6ஆம் திகதி முதல் 12 ஆம் திகதிவரை இரண்டாம் வாசிப்பு மீதான விவாதம் நடைபெற்று, 12ஆம் திகதி மாலை வாக்கெடுப்பு நடத்தப்பட்டு நிறைவேற்றப்பட்டது.
அமைச்சுகளுக்கான நிதி ஒதுக்கீடு தொடர்பான குழுநிலை விவாதத்துக்கு கடந்த 13ஆம் திகதி முதல் நடைபெற்று வருகின்றது. இன்று மாலை வரவு - செலவுத் திட்டம் மீது இறுதி வாக்கெடுப்பு நடத்தப்படும்.
ஐக்கிய தேசிய முன்னணி அரசிடம் சாதாரண பெரும்பான்மைகூட இல்லை. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஆதரவுடனேயே ஆட்சியை முன்னெடுத்து வருகின்றது. கூட்டமைப்பின் 14 உறுப்பினர்களின் ஆதரவே வரவு - செலவுத் திட்டத்தின் இறுதி வாக்கெடுப்புக்குக் கிடைக்கும். இந்நிலையில், ஜே.வி.பியின் 6 உறுப்பினர்களும் இறுதி வாக்கெடுப்புக்கு எதிராக வாக்களிக்க முடிவெடுத்துள்ள நிலையில், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் 23 உறுப்பினர்களுடன் அதிருப்தி நிலையிலுள்ள ஐ.தே.கவின் பின்வரிசை உறுப்பினர்களில் 15 பேரை மஹிந்த அணியினர் (70 உறுப்பினர்கள்) வாக்கெடுப்பில் கலந்துகொள்ளாமல் இருக்கவைத்தால்கூட வரவு - செலவுத் திட்டத்தை நிறைவேற்றுவதில் ரணில் அரசுக்கு சிக்கல் ஏற்படும். எனவேதான், ரணில் அரசுக்கு இன்று பலப்பரீட்சையாகவே கருதப்படுகின்றது.