நேற்றைய தாக்குதலின் பின்னணியில் சர்வதேச பயங்கரவாத அமைப்புகள் இருப்பது குறித்து புலனாய்வுப் பிரிவு தேசியப் பாதுகாப்புச் சபை அறிவித்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன் காரணமாக குறித்த பயங்கரவாத அமைப்புக்களை ஒழிக்க, சர்வதேச ஒத்துழைப்புக்களைப் பெற்றுக்கொள்ளத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
தேசியப் பாதுகாப்புச் சபை ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன தலைமையில் இன்று (22) முற்பகல் ஒன்று கூடியபோதே இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டது.
இதற்கமைய இலங்கையில் உள்ள சகல வெளிநாட்டுத் தூதுவர்களையும், உயர் ஸ்தானிகர்களையும் அழைத்து நாட்டின் தற்போதைய நிலைமை தொடர்பில் விளக்கமளிப்பதற்கும் ஜனாதிபதி எதிர்பார்த்துள்ளதுடன், இச்சந்தர்ப்பத்தில் இலங்கைக்கு அவர்கள் அனைவருடைய சர்வதேச ஒத்துழைப்பையும் கோரவுள்ளதாகவும் ஜனாதிபதியின் ஊடகப் பிரிவு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதே நேரம் கத்தோலிக்க தேவாலயங்கள் உள்ளிட்ட பாதுகாப்பு தேவையான அனைத்து இடங்களுக்கும் முறையான பாதுகாப்பு திட்டமொன்றைத் தயாரிக்குமாறும் ஜனாதிபதி பாதுகாப்புத் துறையினருக்கு அறிவுறுத்தியுள்ளார்.
நாட்டில் ஏற்பட்டிருக்கும் நிலைமையைக் கருத்திற்கொண்டு இந்த நடவடிக்கைகளை உடனடியாக மேற்கொள்ளுமாறு பொலிஸாருக்கும் முப்படையினருக்கும் பாதுகாப்பு அமைச்சுக்கும் ஜனாதிபதி பணிப்புரை வழங்கியுள்ளார். (ஸ)