இலங்கையில் முஸ்லிம் மக்களுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்டுவரும் வன்முறைச்சம்பவங்களின் தொடர்ச்சியாக நேற்று முன்தினமிரவு நாத்தாண்டியா பகுதியில் முஸ்லிம் வர்த்தகர் ஒருவர் வெட்டிக்கொல்லப்பட்டிருந்தார். அவரது ஜனாஸா நேற்று -14- படையினரின் பலத்த பாதுகாப்புடன் அடக்கம் செய்யப்பட்டது.
படுகொலை செய்யப்பட்ட நான்கு பிள்ளைகளின் தந்தையான 49 வயதான பௌஸல் அமீனின் குடும்பம் இன்னமும் அதிர்ச்சியிலிருந்து மீள முடியாதவர்களாகவே உள்ளார்கள் என்று அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
நாத்தாண்டிய கொத்தரமுல்ல பகுதியை சேர்ந்த பௌஸல் அமீன் அப்பிரதேசத்தில் அனைவருக்கும் நன்கு தெரிந்த தளவாடக்கடை உரிமையாளர். அவரது கடையில் ஐந்துக்கும் மேற்பட்ட சிங்கள இளைஞர்கள் பணிபுரிகிறார்கள். அவர்களுக்கு நிதி நெருக்கடி ஏற்படும்போதெல்லாம் பண ரீதியாக உதவிசெய்துவந்த அளவுக்கு பெருந்தன்மையுடைய வர்த்தகர் அவர் என்று அவருடன் தொடர்புடையவர்கள் கூறுகிறார்கள்.
சம்பவம் இடம்பெற்ற அன்று திங்கள் மாலை - 6.20 மணியளவில் - நோன்பு துறந்துவிட்டு பௌசல் தனது குடும்பத்தினருடன் வீட்டிலிருந்த சமயம் தீடீரென்று அப்பிரதேசத்தில் தாக்குதல்களை மேற்கொண்டுவந்த இளைஞர் குழு பௌசலின் வீட்டு வளவினுள்ளேயும் புகுந்துள்ளார்கள். கற்களை வீசியும் ஜன்னல்களை உடைத்தும் தாக்குதல் நடத்தியுள்ளார்கள். என்ன செய்வதென்று தெரியாது தனது நான்கு குழந்தைகளையும் அணைத்தவாறு தனது மனைவியுடன் வீட்டிற்குள்ளேயே இருந்திருக்கிறார் பௌசல்.
அப்போது, வீட்டு வளாகத்தில் நிறுத்திவைக்கப்பட்டிருந்த பௌசலின் வாகனத்தின் மீதும் தாக்குதல் நடத்தி அதன் கண்ணாடிகளை அடித்து உடைத்திருக்கிறார்கள். வீட்டிற்குள் நுழைந்து தாக்குதல் நடத்திக்கொண்டிருந்தவர்கள்.
அப்போதுதான், வெளியே ஓடிச்சென்ற பௌசல் தயவுசெய்து வாகனத்தை ஒன்றும் செய்துவிடவேண்டாம் என்றும் தங்களை விட்டுவிடும்படியும் கெஞ்சியிருக்கிறார். அச்சமயம், அவர் மீது பாய்ந்த கும்பல் தாம் கொண்டுவந்த வாளால் சரமாரியாக அவரது கழுத்திலும் முகத்திலும் வெட்டியிருக்கிறது. படுகாயமடைந்த பௌசல் நிலத்தில் விழுந்திருக்கிறார்.
அப்போது அவரது வீட்டு வேலைத்தளத்திலிருந்த turpentine திரவப்பேணியை எடுத்து திறந்து அதிலிருந்து திரவத்தை படுகாயமடைந்து நிலத்தில் விழுந்து கிடந்த பௌசலின் முகத்தில் ஊற்றிவிட்டு அந்தக்கும்பல் அங்கிருந்து வெளியேறியிருக்கிறது.
குடும்பத்தினர் உடனடியாக அவரை மாறவில வைத்தியசாலைக்கு கொண்டுசென்றார்கள். சிகிச்சை பலனின்றி அங்கு அவர் உயிரிழந்தார்.
தங்களது தந்தையின் இறப்பினை ஜீரணிக்கமுடியாத பௌசலின் நான்கு குழந்தைகளும் அதிர்ச்சியில் உறைந்துபோயுள்ளதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் கூறுகின்றன. பௌசலின் நான்கு பிள்ளைகளும் ஆறு வயதுக்கும் 16 வயதுக்கும் இடைப்பட்டவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
SBS