மினுவங்கொடை மற்றும் வடமேல் மாகாணத்தில் நேற்று முன்தினம் இரவு இடம்பெற்ற வன்முறைச் சம்பவங்களுடன் தொடர்புபட்ட 74 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதுடன் இவர்களில் சம்பவங்களுடன் நேரடியாக தொடர்புபட்ட 33 சந்தேக நபர்கள் நீதிமன்றங்களில் ஆஜர்படுத்தப்பட்டதன் பின்னர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸ் ஊடகப் பேச்சாளரும் பொலிஸ் அத்தியட்சகருமான ருவன் குணசேகர தெரிவித்துள்ளார்.
மினுவங்கொடை பிரதேசத்தில் வன்முறையில் ஈடுப்பட்டவர்களில் 9 பேர் நேற்று முன்தினம் இரவும் 5 பேர் நேற்றை தினமும் கைது செய்யப்பட்டுள்ளனர். இவ்வாறு கைது செய்யப்பட்ட 14 சந்தேக நபர்களும் மினுவங்கொடை மஜிஸ்திரேட் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டு மே மாதம் 29ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
அதேபோன்று வடமேல் மாகாணத்தில் வன்முறைகளில் ஈடுப்பட்ட சுமார் 60 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்களில் வன்முறையுடன் நேரடியாக தொடர்புபட்ட 10 சந்தேக நபர்கள் குளியாபிட்டிய மஜிஸ்ட்ரேட் நீதிமன்றத்திலும், 9 சந்தேக நபர்கள் ஹெட்டிபொல மஜிஸ்ட்ரேட் நீதிமன்றத்திலும் ஆஜர்படுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.
இவர்களை எதிர்வரும் 27ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளதாகவும் மேலும் அவர் குறிப்பிட்டுள்ளார்.