சஹ்ரான் குழுவின் பயிற்சி முகாம் நுவரெலியாவில் கண்டுபிடிப்பு..!

Ceylon Muslim
1 minute read


நுவரெலியாவில் பிளக்பூல் பகுதியில் தௌஹித் ஜமாத் அமைப்பினரால் நடத்தப்பட்டு வந்த பயிற்சி முகாம் ஒன்றை நுவரெலியா பொலிஸார் மற்றும் இராணுவத்தினர் இன்று (06) சுற்றிவளைத்துள்ளனர்.

அம்பாறை, கல்முனை, சாய்ந்தமருது பிரதேசத்தில் பாதுகாப்புப் பிரிவினரால் கைது செய்யப்பட்ட ஐ.எஸ் பயங்கரவாதியிடம் நடத்தப்பட்ட விசாரணைகளின் போது கிடைத்த தகவலின் அடிப்படையிலேயே இரண்டு மாடி வீட்டொன்றில் நடாத்திச் செல்லப்பட்ட குறித்த முகாம் பொலிஸாரினால் கண்டுப்பிடிக்கப்பட்டுள்ளது.

குறித்த பயிற்சி முகாமில் 38 பேருக்கு பயிற்சி வழங்கப்பட்டதாகவும் இந்த முகாம்களில் இடம்பெற்ற பயிற்சிகளில் சஹரானும் கலந்து கொண்டிருந்ததாகவும் அறியக்கிடைத்துள்ளது.

மேலும் 21 ஆம் திகதி குண்டுத் தாக்குதல்கள் இடம்பெறுவதற்கு முன்னர் ஏப்ரல் 17 ஆம் திகதி இறுதியாக இந்த இடத்தில் பயிற்சி நடவடிக்கைகள் இடம்பெற்றுள்ளதாகவும் பொலிஸாரின் விசாரணைகள் மூலம் தெரியவந்துள்ளது.

நுவரெலியா பிளக்பூல் பகுதியில் உள்ள பிரபல பாடசாலைக்கு அருகில் உள்ள வீடொன்றை குறுகிய காலத்திற்கு வாடகைக்குப் பெற்றுக் கொண்டே அவர்கள் இந்த பயிற்சி முகாமை நடத்திச் சென்றுள்ளனர்.

பிளக்பூல் பிரதேசத்தில் வசித்து வந்த குறித்த வீட்டு உரிமையாளர் மற்றும் அந்த வீட்டிற்கான வசதிகளை செய்து கொடுத்தவரை நுவரெலியா பொலிஸார் கைது செய்துள்ளனர.

மேலும் குறித்த சம்பவம் தொடர்பில் நுவரெலியா பொலிஸார் மற்றும் இராணுவத்தினர் இணைந்து மேலதிக விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
6/grid1/Political
To Top