நாட்டில் கடந்த சில தினங்களாக உருவாகியுள்ள நெருக்கடி நிலைமையைக் கையாளுவது குறித்து அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமாவும் ஏனைய முஸ்லிம் சிவில் அமைப்புகளும், தொடர்ந்து கலந்தாலோசனைகளை நடத்தி உரிய நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்றன. அதன் தொடரில் அனைத்து இஸ்லாமிய அமைப்புக்கள், முஸ்லிம் சிவில் அமைப்புக்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் இணைப்புக் குழு ஒன்றும் உருவாக்கப்பட்டுள்ளது.
இந்த கூட்டு இணைப்புக் குழுவின் நெறிப்படுத்தலில் நாட்டின் உயர் மட்ட தலைமைகளான ஜனாதிபதி, பிரதமர், பாதுகாப்பு அதிகாரிகள் முதலானோருடன் உடனடியாக தொடர்புகள் ஏற்படுத்தப்பட்டு உரிய நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
கடந்த 21.04.2019ஆம் திகதி பயங்கரவாதிகளால் மேற்கொள்ளப்பட்ட மனிதாபிமானமற்ற மிலேச்சத்தனமான தாக்குதலை ஒட்டுமொத்த இலங்கை முஸ்லிம்களும் ஒருமித்த குரலில் வன்மையாகக் கண்டித்து நிராகரித்ததையும் பாதுகாப்பு நடவடிக்கைகளுக்கு முஸ்லிம் சமூகம் பூரண ஒத்துழைப்பு நல்கி வருவதையும் நாம் அனைவரும் அறிவோம். இஸ்லாம் இவ்வாறான மனிதாபிமானமற்ற தீவிரவாத செயற்பாடுகளை வன்மையாகக் கண்டிக்கும் நிலையில், வழி தவறிய சிலரின் இந்த தீவிரவாத செயற்பாடுகளுக்கு ஒட்டுமொத்த முஸ்லிம்களும் ஒருபோதும் பொறுப்புக் கூறமுடியாது. எனவே இதனை மையமாக வைத்து ஒட்டுமொத்த முஸ்லிம்களையும் குற்றவாளிகளாகப் பார்ப்பதும் முஸ்லிம்களுடன் காழ்ப்புணர்வுடன் நடந்து கொள்வதும் அப்பாவி முஸ்லிம்களையும் அவர்களது உடைமைகளையும் தாக்குவதும் பிழையான செயற்பாடுகளாகும்.
இந்நெருக்கடியான சூழ்நிலையில் இந்நாட்டு முஸ்லிம்கள் பின்வரும் வழிகாட்டல்களைப் பின்பற்றி நடக்குமாறு அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா வேண்டிக் கொள்கின்றது.
1. எவ்வகையான அசாதாரண சூழ்நிலைகள் உருவாகியபோதிலும் முஸ்லிம்கள் வழமை போன்று அல்லாஹ்வுடனான தொடர்பைப் பலமாக வைத்துக் கொள்ளும் அதேநேரம் தொழுகைரூபவ் நோன்பு, தவக்குல், துஆ, இஸ்திஃபார் முதலான இபாதத்களை கடைபிடித்தொழுக வேண்டும்.
2. இந்நெருக்கடியான கட்டத்தில் முஸ்லிம் சமூகம் மனம் தளராமலும் பீதி அடையாமலும் நிலைமைகளை அவதானித்து விழிப்புடனும் தூரநோக்குடனும் நடந்து கொள்ள வேண்டும்.
3. இந்த நாட்டின் பிரஜைகள் என்ற வகையில் முஸ்லிம்களது உயிர் மற்றும் உடைமைகளைப் பாதுகாக்கும் கடப்பாடு அரசாங்கத்திற்கு இருக்கின்றது. இது விடயமாக நாம் அனைவரும் அரசாங்கத்தை வலியுறுத்த வேண்டும். மேலும், முஸ்லிம்கள் அனைவரும் சட்டத்தை மதித்து மிகுந்த அவதானத்துடனும் நிதானத்துடனும் நடந்து கொள்ள வேண்டும்.
4. அவசரக் கால சட்டம் நடைமுறையில் இருப்பதனால் அது தொடர்பான சட்ட வரையறைகளைப் பேணி நடந்து கொள்ள வேண்டும்.
5. நாட்டில் பதற்ற சூழ்நிலை நிலவுவதால் கிடைக்கும் தகவல்கள் அனைத்தையும் பகிர்ந்து விடாமல் முதலில் அவற்றை ஊர்ஜிதம் செய்து கொள்ளும் அதேநேரம், அவற்றைப் பகிர்ந்து கொள்வதனால் ஏற்படக்கூடிய பின்விளைவுகளைக் கவனத்திற் கொண்டு செயற்பட வேண்டும்.
6. எந்த அசாதாரண சூழ்நிலையிலும், அந்தந்த பிராந்தியங்களின் தலைமைகளுக்குக் கட்டுப்பட்டு ஒத்துழைப்பு நல்க வேண்டும்.
7. நாட்டில் தொடரும் அசாதாரண நிலையைக் கருத்திற் கொண்டு ஐவேளை தொழுகையில் குனூத் அந்நாஸிலாவை தொடர்ந்தும் ஓதிவரும் அதேநேரம், அதில் ஜம்இய்யாவினால் வழங்கப்பட்ட துஆக்களுடன் சுருக்கிக் கொள்ள வேண்டும்.
8. இந்நாட்டு மக்களில் பெரும்பான்மையானோர் சமய நல்லிணக்கத்தையும் சுகவாழ்வையும் விரும்புபவர்கள் என்ற உண்மையைப் புரிந்து கடந்த காலங்களில் நடந்து கொண்டதைப் போலவே தொடர்ந்தும் அவர்களுடன் நல்லிணக்கத்துடனும் சமாதானமாகவும் நடந்து கொள்ள வேண்டும்.
9. தத்தமது பிரதேசங்களிலுள்ள சமய, சமூக தலைமைகளோடு கலந்துரையாடி பிரதேசத்தில் சுமுகமான நிலை உருவாகுவதற்கான முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும்.
ஹஸ்புனல்லாஹு வனிஃமல் வகீல்.
அல்லாஹ்வே எமக்கு போதுமானவன், அவனே எமக்குச் சிறந்த பாதுகாவலன்!
வஸ்ஸலாம்.
அஷ்ஷைக் ஏ.சி. அகார் முஹம்மத்
பிரதித் தலைவர்
அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா