சஹ்ரானின் மனைவியின் முக்கிய வாக்குமூலம் - பல விடயம் அம்பலம்

Ceylon Muslim
ஸஹ்ரானின் மனைவி பாத்திமா காதியா பொலிஸாரிடம் வாக்குமூலம்

கட்டுவாபிட்டிய குண்டுதாரியின் மனைவி 'சாரா' வழங்கிய உத்தரவுப்படியே வெள்ளைநிற ஆடை வாங்கியதாகவும் தெரிவிப்பு

கிரியுல்ல பகுதியிலுள்ள கடையொன்றிலிருந்து ஒன்பது வெள்ளை நிற ஆடைகளை கொள்வனவு செய்ததாக பிரதான தற்கொலை குண்டுதாரியான சஹ்ரானின் மனைவி அப்துல் காதர் பாத்திமா காதியா பொலிஸாரிடம் தெரிவித்துள்ளார்.

அவசியம் ஏற்பட்டால் பயன்படுத்தும் நோக்கிலேயே அவற்றை கொள்வனவு செய்ததாகவும் அவர் தனது வாக்குமூலத்தில் கூறியுள்ளார்.

அம்பாறை வைத்தியசாலையில் சிகிச்சைப் பெற்று வரும் சஹ்ரானின் மனைவியை நேற்று விசேட பொலிஸ் குழுவொன்று விசாரணைக்குட்படுத்தியபோதே அவர் பொலிஸாரிடம் வாக்குமூலம் அளித்தார்.

கட்டுவாப்பிட்டிய தேவாலயத்தில் குண்டை வெடிக்கச் செய்த தற்கொலை குண்டுதாரியான மொஹமது ஹஸ்துன் என்பவரது மனைவியான சாரா எனப்படும் புலஸ்தினி ராஜேந்திரனின் அறிவுறுத்தலுக்கமையவே தான் ஏப்ரல் 19 ஆம் திகதியன்று ஒன்பது வெள்ளை நிற மேற்சட்டைகள், பாவடைகள் மற்றும் உள்ளாடைகளை கொள்வனவு செய்ததாகவும் அவர் கூறினார்.

"உனக்கு எதிர்காலத்தில் இது தேவைப்படும்," என சாரா கூறியதன் காரணமாகவே தான் அவற்றை கொள்வனவு செய்ததாகவும் காதியா பொலிஸாரிடம் தெரிவித்திருந்தார்.

அந்த வெள்ளைத் துணிகளை வாங்கச் சொன்னதற்கான காரணம் சாராவுக்கு மட்டுமே தெரியுமென அவர் தெரிவித்திருந்தபோதும், சாரா ஏப்ரல் 26 ஆம் திகதியன்று கல்முனை சாய்ந்தமருது பிரதேசத்தில் இடம்பெற்ற குண்டு வெடிப்புச் சம்பவத்தில் உயிரிழந்துள்ளார்.

இதேவேளை தனது கணவர் சஹ்ரான் அவரது மதத்துக்காக உயிரை மாய்த்துக் கொள்வேன் என அடிக்கடி கூறி வந்தாலும்

அவர் தற்கொலை குண்டுத் தாக்குதல் நடத்துவாரென தனக்குத் தெரிந்திருக்கவில்லையென்றும் பாத்திமா காதியா பொலிஸாரிடம் தெரிவித்தார். அத்துடன் அவர் தனது கணவரை கடந்த 19 ஆம் திகதி சம்மாந்துறைக்குச் செல்லும் வழியிலேயே கண்டதாகவும் அதன்போதே வெள்ளை நிற ஆடைகளை கொள்வனவு செய்ததாகவும் அவர் கூறினார்.

இறுதியாக தனது கணவரை சந்தித்த தினத்தன்று சஹ்ரான் அவரிடம் ஒரு பை நிறைய பணத்தை கையளித்ததாகவும் அதில் சாய்ந்தமருது செல்வதற்கு வேனுக்கு செலுத்த வேண்டிய பணம் இருப்பதாக தன்னிடம் கூறியதாகவும் தெரிவித்த காதியா, அந்த பணத்திலிருந்தே 29 ஆயிரம் ரூபாவுக்கு வெள்ளை நிற துணிகளை கொள்வனவு செய்ததாகவும் ஆனால் அப்பையில் மொத்தமாக எவ்வளவு பணம் இருந்ததென தனக்குத் தெரியாதென்றும் கூறினார்.


எனினும் குண்டுவெடிப்புச் சம்பவம் இடம்பெற்ற வீட்டுக்குள்ளிருந்து 9,00,000 ரூபா கண்டெடுக்கப்பட்டதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

வத்தளை, கொள்ளுப்பிட்டி, கல்கிசை, பாணந்துறை, கட்டான ஆகிய பிரதேசங்களிலுள்ள பல வீடுகளில் தான் தங்கியிருந்ததாகவும் ஏப்ரல் 20 ஆம் திகதி முதல் 26 ஆம் திகதிக்குட்பட்ட காலப்பகுதியில் தான் நிந்தவூரில் ஒரு வாடகை வீட்டில் தங்கியிருந்ததாகவும் காதியா பொலிஸாரிடம் கூறினார்.

சம்மாந்துறையில் வெடிப்பொருட்கள் மீட்கப்பட்டதையடுத்து பொலிஸார் தங்களைத்தேடி நிந்தவூருக்கு வரலாம் என்ற அச்சம் காரணமாகவே ஏப்ரல் 26 ஆம் திகதி அந்த வீட்டை விட்டு அவர்கள் வெளியேறியதாகவும் அவர் குறிப்பிட்டார். பின்னர் சஹ்ரானின் இரண்டு சகோதரர்கள், சகோதரி, அவருடைய கணவர்,பெற்றோர் மற்றும் பிள்ளைகளுடன் தானும் நிந்தவூரிலிருந்து வேன் ஒன்றின் மூலம் கல்முனையிலுள்ள சாய்ந்தமருதை வந்தடைந்ததாகவும் அவர்கள் அங்கு வந்து சிறிது நேரத்துக்குள்ளாகவே அங்கு குண்டுவெடிப்புச் சம்பவம் இடம்பெற்றதாகவும் அவர் பொலிஸாரிடம் தெரிவித்தார்.

இதேவேளை,நாட்டின் பாதுகாப்பைஉறுதிப்படுத்தும் பொருட்டு நாடு முழுவதிலும் பொலிஸாருக்கு மேலதிகமாக 15 ஆயிரம் முப்படையினர் விஷேட தேடுதல் நடவடிக்கைகளை மேற்கொண்டுவருவதாகவும் அவர்களில் இராணுவம் மாத்திரம் சுமார் பத்தயிரத்திற்கும் அதிகமானோர் ஈடுப்படுத்தப்பட்டுள்ளதாக இராணுவ ஊடகப் பேச்சாளரும் பாதுகாப்புஅமைச்சு ஊடகமையத்தின் பணிப்பாளருமான பிரிகேடியர் சுமித் அதபத்து தெரிவித்தார்.

பாதுகாப்புப்படையினர் கடந்த 48 மணித்தியாலத்திற்குள் மேற்கொண்ட பாரியசுற்றிவளைப்பு தேடுதல் நடவடிக்கையின் போது 120 சந்தேக நபர்களை கைது செய்துள்ளதுடன் பெருந்தொகை வெடிபொருட்கள்,வெடிக்க வைக்கும் கருவிகள்,வாள்கள் மற்றும் தொழில்நுட்ப கருவிகளை கைப்பற்றியுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

அடுத்துவரும் சிலவாரங்களுக்குள் மக்கள் மத்தியில் முழுமையான இயல்பு நிலைமையை ஏற்படுத்தும் நோக்குடனேயே பாதுகாப்பு நடவடிக்கைகளை திட்டமிட்ட அடிப்படையில் முப்படையினரும் பொலிஸாரும் முன்னெடுத்துவருவதாக அவர் சுட்டிக்காட்டினார்.

நாட்டின் தற்போதைய பாதுகாப்பு நிலைமை மற்றும் பாதுகாப்பு தரப்பினர் தொடர்ச்சியாக முன்னெடுத்துவரும் நடவடிக்கைகள் தொடர்பாக ஊடகங்களுக்கு முப்படை மற்றும் பொலிஸாரினால் விளக்கமளிக்கும் விஷேட செய்தியாளர் மாநாடு பாதுகாப்பு அமைச்சு ஊடக மையத்தில் நேற்றுமாலை இடம்பெற்றது.

இந்த செய்தியாளர் மாநாட்டில் இராணுவ ஊடகப் பேச்சாளர் மேலும் விளக்கமளிக்கையில்

வெடிமருந்துகள் நிறப்பப்பட்ட சந்தேகத்திற்கிடமான 20 வாகனங்கள் வடக்கிற்கு வந்துள்ளதாக சில ஊடகங்கள் தகவல்களை வெளியிட்டுள்ளன. அந்த தகவலுக்கும் பாதுகாப்பு தரப்பினருக்கும் தொடர்பில்லை, அந்த தகவல் தொடர்பில் நாம் உடன்படவில்லை ஏனெனில் மக்களுக்கு தேவையான பாதுகாப்பு நடவடிக்கைகளை நாம் திட்டமிட்ட அடிப்படையில் மேற்கொண்டுள்ளோம். எனவே,எக்காரணத்தைக் கொண்டும் பொது மக்கள் வீணாக அச்சம் கொள்ள தேவையில்லை என்றும் இராணுவ ஊடகப் பேச்சாளர் மேலும் தெரிவித்தார்.
TK
6/grid1/Political
To Top