Top News

கைது செய்யப்பட்டுள்ள அப்பாவி முஸ்லிம்களின் துயரில், துஆக்களோடு பங்குகொள்வோம் (ஒரு உருக்கமான பதிவு)



- Rauf Hazeer -

கைது செய்யப்பட்டுள்ள அப்பாவிகளை விடுதலை செய்வதற்கான தகவல் திரட்டலை சில தினங்களாக செய்து வருகிறோம்.

இன்றைய சம்பவம் : 1

தனது மகனது கைது சம்பந்தமான விபரங்களுடன் இன்று அக்குறனையை சேர்ந்த ஒருவர் வந்தார் .
SLTJ அங்கத்தவறான 22 வயதேயான அந்த இளைஞன், SLTJ பயிற்சி முகாம்களில் தான் பெற்ற நற்சான்றிதழ்கள் ,

வெளியீடுகள் போன்றவற்றை வீட்டில் வைத்திருப்பதன் ஆபத்தை உணர்ந்து அவற்றை இயக்கக் காரியாலயத்தில் வைக்க எடுத்துக் கொண்டு போயுள்ளார்.

வழியில் , அவருக்கான விதி காத்துக்கொண்டிருந்திருக்கிறது.

சோதனைக்காக இடைவழியில் மறிக்கப்பட்ட அவர் ஆவணங்களுடன் கைது செய்யப்பட்டு, நீதிமன்றத்தில் ஆஜர்செய்யப்பட்டு இப்போது விளக்க மறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

போலீசாரல் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட குற்றப்பத்திரிகையை வாசித்துப் பார்த்தேன்.

தான் தௌஹீத் ஜமாஅத் அங்கத்தவர் , பல பயிற்சி முகாம்களில பங்கேற்றுள்ளேன் ,

என்பதுடன் தற்போது மாவனல்லையில் பிரத்யேக நிறுவனம் ஒன்றில் தொழிற்பயிற்சி பெறுவதாகவும் அவர் தனது வாக்குமூலத்தில் தெரிவித்துள்ளார்.

இங்கே தான் பிரச்சினை சிக்கலாகி உள்ளது.

அவர் SLTJ வேறு NTJ வேறு என்பதை தெளிவுபடுத்துகிறவிதத்தில் வாக்குமூலம் அளிக்காததனால் ,
வெறுமனே தௌஹீத் ஜமாஅத் என இவர் குறிப்பிட்டுள்ளதை வைத்து இவ் இளைஞன் NTJ என்று வழக்கு பதிவாகியுள்ளது. போதாக்குறைக்கு பிரத்யேக வகுப்புக்காக செல்வது மாவனல்லை என்பது சந்தேகத்தை மேலும் பலப்படுத்தியுள்ளது.

இன்றைய சம்பவம் : 2

இன்று மாலை எமது முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் அஸ்லம் அவர்கள் ஒரு file ஐக் கொண்டு வந்தார்.

பள்ளிவாயல் என சந்தேகிக்கும் ஓர் இடத்தை தாம் சோதனையிட்டபோது மூவரை கைது செய்ததாக அப் போலீஸ் அறிக்கை தெரிவிக்கிறது.

பதிவு செய்யப்படாத பள்ளிவாயல் என்கிற கட்டிடத்தில் இவர்கள் இருந்ததாகவும் , பயங்கரவாத இயக்கத்தின் பிரசுரங்கள் , நிதி சேகரித்ததற்கான ரசீதுகள் சகிதம் இந்த NTJ உறுப்பினர்களை கைது செய்ததாக மேலும் அவ்வறிக்கை நீள்கிறது.

அவ் அறிக்கையுடன் நமது அஸ்லம் ( மு.பா.உ) அவர்கள் தந்த எமது விபரத்திரட்டுப் படிவத்தில் இருந்த சந்தேக நபர் ஒருவரின் மனைவியை தொலைபேசியில் தொடர்புகொண்டு அவரின் கணவரும் மற்ற இருவரும் NTJ உறுப்பினர்களா என விசாரித்தேன்.

இல்லை, அவர்கள் CTJ என்றார்.

அவரின் கணவர் இந்துவாக இருந்து இஸ்லாத்தை தழுவிய ஒருவர் என்றும் SLTJ யிலிருந்து CTJ ஆக பிரிந்தவர்கள் என்பதனால் பள்ளிவாசலை பதிவு செய்து கொள்ள கால அவகாசம் இருக்கவில்லை என்றும் அறியமுடிந்தது .

இதனை ஏன் இங்கே பதிவிவிடுகிறேன் எனக் கேட்பீர்கள்!

போலீசாரை பொறுத்தவரை 

ACTJ , SLTJ ,CTJ எல்லாமே NTJ என்கிற மனப்பான்மைதான் உள்ளது . 

எனவே இவ் இயக்க உறுப்பினர்கள் எவராவது முறைப்பாடொன்றை பதிவு செய்ய நேர்ந்தால் தாம் எவ்விதத்திலும் NTJ உடன் சம்பந்தப் படாதவர்கள் , தம் இயக்கம் முற்றிலும் வேறானதென்பதை போலீசாருக்கு தெளிவாக சொல்வதுடன் தமது இயக்கப் பெயரையும் அதன் பதிவிலக்கத்தையும் முறைப்பாட்டில் பதிந்து கொள்வதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள்.

நாமோ அல்லது உங்கள் வழக்கறிஞர்களோ அப்போதுதான் உதவ முடியும்.

நான் SLTJ தலைமைக்கு இதனை இன்று தெரிவித்தேன். CTJ ரஸ்மின் சகோதரரின் தொலைபேசி மூன்று தடவைகளும் பிஸியாக இருந்ததனால் கூற முடியாது போய்விட்டது.

இன்ஷா அல்லாஹ் CTJ ,ACTJ மற்றும் அமைப்புகளுக்கு நாளை கதைப்பேன்.

( மனதை வருத்தும் பின் குறிப்பு : அளுத்கமையில் கைதாகியுள்ள அந்த CTJ சகோதரருக்கு 4 பிள்ளைகள். மூத்தவனுக்கு 4 வயதே ஆகிறது .கடைசிக் குழந்தைக்கு வயது 18 நாட்களே. தந்தை கைதான பிறகுதான் மகன் பிறந்திருக்கிறான்.

அந்த சகோதரியின் துன்பத்திலும் துயரிலும் துஆக்களோடு பங்குகொள்வோமாக )
Previous Post Next Post