“ஐ.எஸ்.ஐ.எஸ். தீவிரவாதிகளின் தாக்குதல் எமக்குச் சவால் அல்ல. நாட்டில் எவ்வகையான நெருக்கடிகள் காணப்பட்டாலும் அனைத்தையும் வெற்றிகொண்டு ஆட்சியை நிச்சயம் கைப்பற்றுவோம்.”
– இவ்வாறு சூளுரைத்தார் எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ச.
ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியினர் ஏற்பாடு செய்த மே தினக் கூட்டம் நேற்று கோட்டை நகர சபை பிரதான மண்டபத்தில் நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.
அவர் மேலும் தெரிவித்ததாவது:-
“தொழிலாளர்கள் தொடர்பில் ஐக்கிய தேசியக் கட்சி ஆரம்பத்தில் இருந்து அக்கறை கொள்ளவில்லை. இவர்கள் மேற்கத்தைய தொழில் கலாசாரத்துக்கு அடிபணிந்து செயற்படுவதே பல விளைவுகளை ஏற்படுத்தியுள்ளது.
நாட்டில் தற்போது கொள்கையற்ற அரசு ஆதிக்கம் செலுத்துவதால் தேசிய பொருளாதாரம் வீழ்ச்சியடைந்துள்ளது.
அரச தலைவர்களுக்கிடையில் காணப்படுகின்ற போட்டித்தன்மை இன்று சர்வதேச தீவிரவாதம் நாட்டுக்குள் ஊடுருவதற்கு வழிமுறைகளை ஏற்படுத்தியுள்ளது.
எனினும், நாம் கொண்ட கொள்கையில் உறுதியாக உள்ளோம். ஐ.எஸ்.ஐ.எஸ். தீவிரவாதிகளின் தாக்குதல் எமக்குச் சவால் அல்ல. நாட்டில் எவ்வகையான நெருக்கடிகள் காணப்பட்டாலும் அனைத்தையும் வெற்றிகொண்டு அரசை நிச்சயம் கைப்பற்றுவோம். அடுத்த வருடம் மே தினம் உழைப்பாளிகளுக்கு பல சலுகைகளைப் பெற்றுக் கொள்ளும் தினமாகக் காணப்படும்” – என்றார்.