முஸ்லிம்கள் மக்காவை நோக்கி வழிபட்டால் பிரச்சினையில்லை. ஆனால் அவர்கள் எமது மண்ணில் காலூன்றி நிற்கவேண்டும். எமக்கு இவ்வாறான முஸ்லிம் சமூகமே தேவைப்படுகிறது. எந்தவோர் சமயத்துக்கும் வேறு மதங்களை நிந்தனைக்கு உட்படுத்த முடியாது.
குர்ஆனின் பெயரில் ஏனைய மதங்களுக்கு எதிராக மேற்கொள்ளப்படும் தீவிரவாத பிரசாரங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட வேண்டும். இதற்கென சட்டங்கள் கொண்டுவரப்பட வேண்டும். இதேபோன்று பௌத்தத்தின் பெயரால் ஏனைய சமயங்களை துன்பங்களுக்குட்படுத்தும் வகையில் எவருக்கும் செயற்பட உரிமையில்லை என பாரிய நகரங்கள் மற்றும் மேல்மாகாண அபிவிருத்தி அமைச்சர் சம்பிக்க ரணவக தெரிவித்தார்.
மாதிவெல, கிம்புலாவெலயில் நிர்மாணிக்கப்பட்ட தேசிய பௌத்த மத்திய நிலையத்தின் திறப்பு விழாவில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலே அவர் இவ்வாறு கூறினார். நேற்று முன்தினம் நடைபெற்ற இந்நிகழ்வில் அவர் தொடர்ந்தும் உரையாற்றுகையில், ‘‘எமக்குத் தேவை அரோபிய கலாசாரங்களைப் பின்பற்றும் முஸ்லிம்களல்ல. இலங்கைக்கான முஸ்லிம் சமூகமொன்றே தேவை. பயங்கரவாதத்தைத் தடுப்பதற்கு எமது நாட்டில் அமுலிலிருக்கும் சட்டம் போதுமானதாக இல்லை. அதனால் புதிதாக சட்டத்தில் திருத்தங்கள் கொண்டுவரப்பட வேண்டும்.
சட்டத்தில் திருத்தங்களைக் கொண்டுவருவதற்காக நாம் கட்சிபேதமின்றி பொறுப்புடன் செயற்பட வேண்டும். ஷரீஆ பல்கலைக்கழகம் என்ற பெயரிலோ அல்லது வேறு பெயரிலோ தனியார் பல்கலைக்கழகங்கள் இயங்குவதை ஒருபோதும் அனுமதிக்கமுடியாது.
அமைச்சர் ரிசாத் பதியுதீனுக்கு எதிராக முன்வைக்கப்பட்டுள்ள நம்பிக்கையில்லாப் பிரேரணை தொடர்பில் ஆராய்வதற்கு பாராளுமன்றத் தெரிவுக்குழு நியமித்து அவருக்கு எதிரான குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டால் அவர் பதவி விலக்கப்படுவதுடன் நாட்டின் சட்டத்துக்கு அமைய தண்டிக்கப்பட வேண்டும். எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் குடும்ப செல்வாக்குக்கு இடமளிக்காமல் நாட்டின் எதிர்காலம் கருதி ஜனநாயகத்தை உறுதிசெய்யும் தரப்புக்கு ஆதரவுவழங்க வேண்டும்’’ என்றார்.