முஸ்லிம் மக்களை இலக்கு வைத்து கட்டவிழ்த்துவிடப்பட்டுள்ள இன வன்முறைகள் காரணமாக முஸ்லிம்கள் தமது பாதுகாப்பு தொடர்பில் எழுந்துள்ள சந்தேகங்களை அடுத்து தமது கிராமங்களுக்குள்ளேயே முடங்கிக்கிடக்கின்ற துர்பாக்கிய நிலை ஏற்பட்டுள்ளது.
முஸ்லீம் மக்கள் மத்தியில் ஏற்படுத்தப்பட்டுள்ள இந்த அச்ச நிலை காரணமாக இன வன்முறைகளில் படுகாயமடைந்த சிறுவர்கள் உட்பட பலர் சிகிச்சைகளுக்காக வைத்தியசாலைகளுக்கும் செல்லாது வீடுகளிலேயே முடங்கியிருப்பதையும் அங்கு சென்ற எமது செய்தியாளர்களால் காண முடிந்தது.
இவ்வாறான கொடூரங்கள் உட்பட இன வன்முறைகளால் பாதிக்கப்பட்ட முஸ்லிம் கிராமங்களின் தற்போதைய நிலமைகள் தொடர்பில் எமது கொழும்பு அலுவலக செய்தியாளர் சிரியான் சுஜித் வழங்கும் மேலதிகத் தகவல்களாவன,மே மாதம் 12 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை சிலாபம் மற்றும் குளியாபிட்டிய பகுதிகளில் வாழும் முஸ்லிம்களின் வர்த்தக நிலையங்கள், பள்ளிவாசல்கள் மற்றும் வீடுகளை இலக்கு வைத்து கட்டவிழ்த்துவிடப்பட்ட இன வன்முறைகள் மறுநாள் வடமேலடமாகாணத்தின் குருநாகல் மற்றும் புத்தளம் ஆகிய மாவட்டங்களின் பல இடங்களுக்கு பரவியிருந்தன.
ஆயிரத்திற்கும் மேற்பட்ட சிங்கள இனவாதிகளால் ஆயுதங்கள், பொல்லுகள் இரும்புக் கம்பிகள் சகிதம் நூற்றுக் கண்க்கான மோட்டார் சைக்கிள்கள், முச்சக்கர வண்டிகள் மற்றும் வாகனங்களில் சென்று திட்டமிட்ட இந்த இன வன்முறைகளை முன்னெடுத்தனர்.
இதனால் முஸ்லிம்களின் ஏராளமான வீடுகள், வர்த்தக நிலையங்கள் மற்றும் மத வழிபாட்டுத் தலங்களான பள்ளிவாசல்கள் தாக்கப்பட்டும் தீ வைத்தும் கொளுத்தப்பட்டுள்ளன. இந்த இன வன்முறைகளில் மோசமான அழிவையும் சந்தித்த மற்றும் உயிர்ப்பலியொன்றும் பதிவாகிய புத்தளம் மாவட்டத்தின் நாத்தண்டிய பிரதேச செயலகத்திற்குட்பட்ட தும்மோதர பிரதேசத்தின் தற்போதைய நிலமைகளை பார்வையிட பயணித்த ஐ.பி.சி தமிழ் செய்திப் பிரிவினராக எமக்கு காணக்கிடைத்த காட்சிகள் இனவன்முறைகளின் கோரத்தாண்டவத்தை மிகத் தெளிவாக எடுத்துரைத்தது.
தும்மோதர பிரதேசத்தில் கடந்த 13ஆம் திகதியான திங்கட்கிழமை மாலை முதல் ஸ்ரீலங்கா படையினரது கண்முன்னே சிங்கள இனவாதக் கும்பல் முஸ்லிம் வீடுகள்,வர்த்தக நிலையங்கள் மற்றும் பள்ளிவாசல்கள் மீது தாக்குதல்களை நடத்தியதோடு தீ வைத்தும் கொளுத்தியுள்ளனர்.
இந்த சம்பவத்தில் தீக்கு இரையாகிய வீடொன்றில் அகப்பட்டுக் கொண்ட 16 வயதுடைய சிறுவன் தப்பிச் செல்ல வழியின்றி தனது அறையிலிருந்த கட்டிலுக்குக் கீழ் ஒளிந்துகொண்டு உயிரை பாதுகாத்துக் கொண்டுள்ளார். அவருடன் சேர்த்து முழுவீட்டிற்கும் தீ வைத்துக் கொளுத்திய இனவாதிகள் அங்கிருந்து சென்றபோதிலும் அவர்களால் ஏற்படுத்திய வடுக்கள் அப்பாவி சிறுவனின் வாழ்க்கையையே கேள்விக் குறியாக்கிவிட்டுள்ளது.
மிக மோசமான எரிகாயங்களுடன் காணப்படும் இந்த சிறுவன் இன்னமும் சிகிச்சைகளுக்காக வைத்தியசாலைக்கு செல்லாது உள்ளான. இது குறித்து நாம் சிறுவனிடமே கேட்டபோது எந்த நம்பிக்கையில் சென்று சிகிச்சையைப் பெற்றுக்கொள்வது என்ற கேள்வியையையும் அந்த சிறுவன் எழுப்பினான்.
முகம்மட் நஜ்மின் மாத்திரமன்றி இன வன்முறைகளின் போது படுகாயமடைந்த மேலும் பலர் நாத்தண்டிய தும்மோதர மற்றும் அருகிலுள்ள முஸ்லீம் கிராமங்களில் இருக்கின்ற போதிலும் பாதுகாப்பு அச்சுறுத்தல்கள் காரணமாக அவர்கள் சிகிச்சைகளுக்காக அருகிலுள்ள வைத்தியசாலைகளுக்கு செல்லாது தமது கிராமங்களுக்குள்ளேயே முடங்கிக் கிடக்கின்றனர்.
சிங்கள கிராமங்களைத் தாண்டியே வைத்தியசாலைகளுக்கு செல்ல வேண்டியிருப்பதாலேயே இவர்கள் தமது கிராமங்களுக்குள் சிகிச்சையின்றி முடங்கியுள்ளனர். இந்த துர்ப்பாக்கிய நிலமைகள் தொடர்பில் அங்கு சென்ற நாம் பாதுகாப்பு தரப்பினருக்கு தெரியப்படுத்தியதுடன், அவர்கள் இனவன்முறைகளில் காயமடைந்தவர்களுக்கு சிகிச்சை பெற்றுக்கொடுக்க தேவையானவர்களை வைத்தியசாலைகளுக்கும் அழைத்துச் செல்ல நடவடிக்கை எடுப்பதாக ஐ.பீ.சீ தமிழுக்கு உறுதியளித்தனர்.