நாட்டின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் வகையில் தேசிய பாதுகாப்பு ஆலோசனை சபை ஒன்றை உருவாக்கப் போவதாக அறிவித்திருக்கிறார் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன.
20.05.2019 ஸ்ரீ லங்கா சுதந்திரக்கட்சியின் உறுப்பினர்களை ஜனாதிபதி செயலகத்தில் சந்தித்து பேச்சு நடத்தியபோது அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். சுமார் மூன்று மணிநேரம் நடைபெற்ற இந்த சந்திப்பில் நாட்டின் தற்போதைய நிலைமைகள் குறித்து விரிவாக பேசப்பட்டுள்ளன. அங்கு ஜனாதிபதி மேலும் கூறியிருப்பதாவது ,
நாட்டின் பாதுகாப்பு நிலைமையை கருத்திற்கொண்டு தேசிய பாதுகாப்பு சபைக்கு அப்பால் தேசிய பாதுகாப்பு ஆலோசனை சபை ஒன்று அமைக்கப்படவுள்ளது. அதில் பிரதமர் ,சபாநாயகர் ,எதிர்க்கட்சித் தலைவர் மற்றும் முக்கியஸ்தர்கள் அங்கம் வகிப்பார்கள். பாதுகாப்பமைச்சர் என்ற ரீதியில் நானும் அதில் இருப்பேன்.அந்த சபை அடிக்கடி கூடி ஆராயும்.
இப்போது எல்லோரும் முஸ்லிம் அரசியல்வாதிகள் சிலரை கைது செய்யுமாறு கோருகின்றனர்.அப்படியெல்லாம் செய்துவிட முடியாது.அவர்கள் முஸ்லிம் மக்களை பிரதிநிதித்துவப்படுத்துகின்றனர். அப்படி செய்தால் முஸ்லிம்களை தீவிரவாதத்திற்குள் நாங்கள் தள்ளுவதாகவே அமையும். அமைச்சர் ரிஷார்ட் பதியுதீனுக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை இன்னமும் பாராளுமன்றத்திற்கு வரவில்லை .அது விவாதிக்கப்படும் திகதி தீர்மானிக்கப்பட்டால் அது தொடர்பில் நாங்கள் தீர்மானம் எடுப்போம். – என்றும் மைத்ரி குறிப்பிட்டாரென அறியமுடிந்தது.