இலங்கையில் ஈஸ்டர் நாளில் மார்ச் 21ம் தேதி நடைபெற்ற குண்டு தாக்குதல்கள் உலக அளவில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளன.
253 பேர் கொல்லப்பட்ட இந்த கொடிய தாக்குதல்களுக்கு பின்னர், இலங்கை மெதுவாக இயல்பு நிலைக்கு மீண்டு வருகிறது.
இந்த தாக்குதல் பற்றி இலங்கை ராணுவ தளபதி லெப்டினென்ட் ஜெனரல் மகேஷ் சேனா நாயக்கவை பேட்டி கண்டார் பிபிசியின் செய்தியாளர் சிக்கந்தர் கெர்மானி.
இந்த பேட்டியின்போது, லெப்டினென்ட் ஜெனரல் மகேஷ் சேனாநாயக்க கருத்து தெரிவிக்கையில், எங்களுடைய உளவு அதிகாரிகள், ராணுவ உளவு அதிகாரிகள் ஆகியோர் காவல்துறை மற்றும் பிற உளவு அமைப்புகளுடன் சேர்ந்து, சந்தேக நபர்களை கைது செய்யும் பணியில் ஈடுபட்டுள்ளார்கள்.
தற்போதை நிலையில், தீவிரவாத குழுக்களின் உறுப்பினர்கள் பலரை கைது செய்துள்ளோம். ரகசியமாக இயங்கும் அடையாளம் காணப்படாத சிலர் இருக்கலாம். எனவே பிடிபட்ட நபர்களின் எண்ணிக்கை, விசாரணை போக்கை வைத்து, இயன்றவரை வேகமாக இதை நாங்கள் கையாள்வோம் என்ற நம்பிக்கை எங்களுக்கு உள்ளது என்று கூறினார்.
மேலும் அவர் பேட்டியில் இருந்து:
கேள்வி: இன்னும் தாக்குதல் நடத்தப்படலாம் என்று உளவுத்துறை கண்டுபிடித்திருக்கிறதா?
பதில்: இல்லை. ஆனால், இது பலரால் அனுமானிக்கப்பட்டுள்ளது. உறுதியான உளவுத்தகவல்கள் இல்லாமல், மக்கள் தங்கள் விரும்பம்போல அனுமானங்களை தெரிவிக்கக்கூடாது என்று கேட்டுக்கொள்கிறேன்.
கேள்வி: இந்த தற்கொலை குண்டுதாரி முன்னதாக சிரியாவுக்கு செல்ல முயற்சித்துள்ளார் என்று புலனாய்வாளர்கள் கண்டுபிடித்துள்ளார்கள். மற்றவர்களோ, வேறு பிராந்தியத்தில் உள்ள கடும்போக்குவாதிகளுடன் தொடர்பு ஏற்படுத்தியதாகத் தோன்றுகிறது.
பதில்: அவர்கள் இந்தியாவுக்கு சென்றுள்ளார்கள். காஷ்மீர், பெங்களுரூ மற்றும் கேரளாவுக்கு அவர்கள் பயணம் செய்துள்ளார்கள். எங்கள்வசம் தற்போதுள்ள தகவல் இதுதான்.
கேள்வி: காஷ்மீர் மற்றும் கேரளாவில் அவர்கள் என்ன செய்து கொண்டிருந்தார்கள் என்று தெரியுமா? எடுத்துக்காட்டாக...
பதில்: தெளிவாக தெரியவில்லை. ஆனால், நிச்சயமாக அவர்கள் ஏதாவது ஒருவகை பயிற்சியில் ஈடுபட்டிருப்பார்கள் அல்லது நாட்டுக்கு வெளியே மற்ற அமைப்புகளுடன் தொடர்புகளை அவர்கள் ஏற்படுத்தியிருப்பார்கள்.
கேள்வி: இதுவரை தெரியவந்த வரையில், இலங்கையில் நடத்தப்பட்ட தொடர் குண்டு தாக்குதல்கள் இலங்கைக்குள் திட்டமிடப்பட்டு நடத்தப்பட்டதா? அல்லது இந்த குழுவை ஒருங்கிணைக்க நினைக்கும் சிரியாவில் உள்ளவர்களால் திட்டமிட்டு நடத்தப்பட்டதா?
பதில்: தாக்குதல் நடத்தியுள்ள முறையையும், தலைமைகள் பயணம் மேற்காண்டுள்ள இடங்களையும் பார்க்கிறபோது, வெளியிலுள்ள ஏதாவது ஒரு தலைமையின் ஈடுபாடு அல்லது அறிவுறுத்தல் இருந்திருக்க வேண்டும்.
கேள்வி:குண்டுவெடிப்பு சம்பவங்களுக்கு முன்பு, தாக்குதலுக்கான சாத்தியம் குறித்த தொடர்ச்சியான எச்சரிக்கைகளை இந்திய உளவு அமைப்புகள் விடுத்தன. அந்த எச்சரிக்கைகளை இலங்கை ஏன் தீவிரமாக எடுத்துக் கொள்ளவில்லை என்பது பற்றிய கேள்விகள் உள்ளன.
பதில்: எங்களிடம் சில தகவல்கள் இருந்தன. உளவுத் தகவல் பகிர்வு சூழ்நிலைகள் மற்றும் வெவ்வேறு கோணத்தில் ராணுவ உளவுப் பிரிவினரும் மற்றவர்களும் கவனம் செலுத்தினார்கள். இன்றைய நிலையில், அனைவரும் பார்ப்பது போல, அதில் இடைவெளி நிலவியது.
கேள்வி: இந்த உளவுத்துறை பகிர்தல் தோல்வியடைந்ததற்கு யார் காரணம்?
பதில்: இது பிறரை குறைகாணும் விளையாட்டல்ல. அரசியல் அதிகார வரிசையில் உள்ளவர்கள் உள்பட உளவுத்துறை தகவல்களை சேகரித்தல், அதற்கான தயாரிப்பு, திட்டமிடல்கள், தேசிய பாதுகாப்புக்கு பொறுப்பானவர்கள் அனைவரும் காரணமானவர்கள்.
கேள்வி: இலங்கை ஏன் இலக்கு வைக்கப்பட்டதாக நினைக்கிறீர்கள்?
பதில்: நான் இவ்வாறு விடை அளிக்கலாம். கடந்த 10 ஆண்டுகளாக அதிக சுதந்திரம். அதிக அமைதி நிலவியது. 30 ஆண்களாக என்ன நடந்தது என்பதை மக்கள் மறந்து விட்டனர். மக்கள் அமைதியை அனுபவித்தார்கள். ஆனால், பாதுகாப்பை கண்டுகொள்ளவில்லை.
கேள்வி: இப்போது, சர்வதேச சுற்றுலா பயணிகளுக்கு இலங்கை பாதுகாப்பான நாடு என்று உலக நாடுகளிடம் நீங்கள் உறுதியாக கூற முடியுமா?
பதில்: இலங்கை 36 ஆண்டுகளாக போர் நடத்திய நாடு. அந்நாட்களில் நாங்கள் எதிர்கொண்ட சம்பவங்கள், இன்று நாங்கள் எதிர்கொள்வதைவிட மிகவும் கடினமானவை. அதி பயங்கரமானவை. பொது மக்களுக்கு நம்பிக்கை அளிக்கவும், வன்முறை அல்லது இந்நாட்டில் வகுப்புவாத கலகம் அதிகரிக்காமல் இருப்பதை உறுதி செய்யவும் நாங்கள் பணியமர்த்தப்பட்டுள்ளோம். இலங்கையில் விரைவில் இயல்புநிலையை கொண்டு வருவதில் படைப்பிரிவுகள் மற்றும் காவல்துறையினரிடம் எனக்கு நம்பிக்கையுள்ளது.