சம்மாந்துறையில் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டு பொலிஸ் தடுப்பில் வைக்கப்பட்டுள்ள தனது சாரதியின் விடுதலை தொடர்பில் தான் பொலிஸாருக்கு எவ்வித அழுத்தங்களையும் கொடுக்கப் போவதில்லை. சட்டம் அதன் கடமையைச் செய்யப்பட்டும். எனது சாரதி நிராபதி என உறுதிப்படுத்தப்பட்டால் அவர் விடுதலை செய்யப்படுவார் என அம்பாறை மாவட்ட ஐக்கிய தேசிய முன்னணி (ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ்) நாடாளுமன்ற உறுப்பினர் எம். ஐ.எம். மன்சூர் தெரிவித்தார்.
சம்மாந்துறை, மல்கம்பிட்டியில் நேற்று (01) இராணுவத்தினரும் பொலிஸாரும் மேற்கொண்ட சோதனை நடவடிக்கையின்போது வெற்றுக் காணி ஒன்றிலிருந்து பெருந்தொகையான வெடிபொருட்கள், ஆயுதங்கள் மீட்கப்பட்டன. இதனையடுத்து எனது சாரதி குறித்த காணிக்கு அண்மித்தான அவரது உறவினர் ஒருவரின் வீட்டில் வைத்து பாதுகாப்புப் படையினரால் கைது செய்யப்பட்டு சம்மாந்துறை பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.
மீட்கப்பட்ட வெடிபொருட்கள், ஆயுதங்கள் தொடர்பில் அவர் ஒரு சந்தேக நபராகவே கைது செய்யப்பட்டுள்ளார். இது தொடர்பில் அவர் சம்மாந்துறை பொலிஸாருக்கு தான் ஒரு நிரபராதி என்பதனை நிரூபிக்கு வகையில் அவர் வாக்குமூலத்தை வழங்கியதாக அறிகிறேன்.
இந்த நிலையில், அவர் தொடர்ந்தும் மேலதிக விசாரணைகளுக்காக பொலிஸில் தடுத்து வைக்கப்பட்டுள்ளார். இருப்பினும் அவரைப் பொலிஸார் விடுவிப்பார்கள் என்றே நான் நம்புகிறேன். இன்றேல் நீதிமன்றத்தில் ஆஜர் செய்து மேலதிக நடவடிக்கைகளை முன்னெடுக்கலாம்.
இருப்பினும், எனது சாரதியின் விடுதலை விடயத்தில் பொலிஸார் மீது நான் எவ்வித அழுத்தங்களையும் பிரயோகிக்கப் போவதில்லை. சட்டம் அதன் கடமையைச் செய்யட்டும்.
மேலும், தற்போதுள்ள நிலைமையில் பொலிஸார், பாதுகாப்புப் படையினர் சுற்றிவளைப்பு, சோதனைகளுக்கு பிரதேச மக்கள் தங்களது முழுமையான ஒத்துழைப்பை வழங்க வேண்டும். அதன்மூலமே இவ்வாறான தீவிரவாத்தை முற்றாகத் துடைத்தெறிய முடியும் என்றும் மன்சூர் எம்.பி தெரிவித்தார்.
மெட்ரோ நியூஸுக்கு