Top News

19வது: திருத்தியவரே மீண்டும் திருத்த வேண்டும் என்கின்றார்

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கூறியதை போன்று, அரசியலமைப்பின் 19 ஆவது திருத்தச் சட்டத்தில் பாரிய சர்ச்சைகள் காணப்படுவதை தான் ஏற்றுக் கொள்வதாக ஐக்கிய தேசியக் கட்சி பாராளுமன்ற உறுப்பினர் ஜயம்பத்தி விக்ரமரத்ன தெரிவிக்கின்றார். 

19 ஆவது அரசியலமைப்பு திருத்தத்தில் சர்ச்சைகள் காணப்படுவதாக வெளியிடப்பட்ட கருத்துக்கள் குறித்து, 19ஆவது திருத்தச் சட்டமூலத்தை தயாரித்த பாராளுமன்ற உறுப்பினர் ஜயம்பத்தி விக்ரமரத்ன ஊடக சந்திப்பு ஒன்றை ஏற்பாடு செய்து, தெளிவூட்டிய போதே இதனைக் குறிப்பிட்டார். 

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவினால் கொண்டு வரப்பட்ட 18 ஆவது திருத்தச் சட்டத்தை இல்லாது செய்வதாக மக்களுக்கு வழங்கிய உறுதிமொழிக்கு அமையவே 19 ஆவது திருத்தச் சட்டமூலம் தயாரிக்கப்பட்டதாகவும் அவர் கூறினார். 

இந்த சட்டமூலம் தயாரிக்கப்பட்டு பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படுவதற்கு முன்னர், ஜனாதிபதி செயலகத்தில் விசேட கூட்டம் ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டு, சட்டமூலம் தொடர்பில் விவாதிக்கப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டார். 

இதன்போது எதிர்க்கட்சி உறுப்பினர்களின் அழுத்தங்களின் பிரகாரம், 19 ஆவது திருத்தச் சட்டத்தில் உள்வாங்கப்பட்ட பல முக்கியமான சரத்துக்கள் வலுவிழக்கச் செய்யப்பட்டதாகவும், அதனாலேயே நாட்டில் தற்போது பிரச்சினைகள் எழுந்துள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார். 

நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமையில் காணப்படுகின்ற அதிகாரங்களை குறைக்க முயற்சித்த போதிலும், அதனை உரிய முறையில் முன்னெடுக்க முடியாது போனதாகவும் அவர் குறிப்பிட்டார். 

ஜனாதிபதியின் அதிகாரங்கள் குறைக்கப்பட்டு, பாராளுமன்றத்திற்கு அதிகாரங்கள் வழங்கப்பட்டிருக்கும் பட்சத்தில், 19 ஆவது அரசியலமைப்பு திருத்தம் சிறந்த முறையில் அமைந்திருக்கும் எனவும் அவர் நம்பிக்கை வெளியிட்டார். 

ஜனாதிபதிக்கும், பாராளுமன்றத்திற்கும் இடையில் பிரச்சினைகள் காணப்படும் வகையில் அரசியலமைப்பின் 19 ஆவது திருத்தம் அமையப் பெற்றுள்ளதாகவும் ஜயம்பத்தி விக்ரமரத்ன சுட்டிக்காட்டுகின்றார். 

நிறைவேற்று அதிகாரத்தை இல்லாதொழிக்கும் வகையில் மக்கள் விடுதலை முன்னணியினால் தயாரிக்கப்பட்டுள்ள அரசியலமைப்பின் 20 ஆவது திருத்தச் சட்டமூலத்தின் ஊடாகவே, தற்போதுள்ள பிரச்சினைகளை நிறைவுக்கு கொண்டு வர முடியும் என அவர் சுட்டிக்காட்டினார். 

இயலுமான விரைவில் அரசியலமைப்பின் 19 ஆவது திருத்தச் சட்டத்தை ரத்துசெய்து, 20 ஆவது திருத்தச் சட்டமூலத்தை நிறைவேற்றுதன் ஊடாக, நாட்டில் எழுந்துள்ள பிரச்சினைகளை முடிவுக்கு கொண்டு வர முடியும் என பாராளுமன்ற உறுப்பினர் ஜயம்பத்தி விக்ரமரத்ன நம்பிக்கை வெளியிடுகின்றார்.

Post a Comment

Previous Post Next Post