உயிர்த்த ஞாயிறு தின தாக்குதலின் பின்னர், அரச அதிகாரிகளின் ஆடை தொடர்பில் பொது நிர்வாக அமைச்சின் செயலாளரினால் வெளியிடப்பட்ட சுற்றுநிரூபம், தனக்கு அறிவிக்கப்பட்டே வெளியிடப்பட்டதாக பொது நிர்வாக அமைச்சர் ரஞ்சித் மத்தும பண்டார தெரிவித்துள்ளார்.
குறித்த சுற்றுநிரூபம் தொடர்பில் கடந்த தினம் நாடாளுமன்ற தெரிவுக்குழுவில் கருத்து முரண்பாட்டு நிலைமை ஏற்பட்டது.
ஏப்ரல் 21 பயங்கரவாத தாக்குதல் தொடர்பில் ஆராய்வதற்காக நியமிக்கப்பட்டுள்ள நாடாளுமன்ற விசேட தெரிவுக்குழு முன்னிலையில், சாட்சியமளிப்பதற்காக பொது நிர்வாக அமைச்சின் செயலாளர் ஜே.ஜே.ரத்னசிறி மற்றும் முன்னாள் ஆளுநர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் ஆகியோர் நேற்று முன்தினம் அழைக்கப்பட்டிருந்தனர்.
இந்த நிலையில், பொது நிர்வாக அமைச்சின் செயலாளர் சாட்சியமளித்தபோது, தெரிவுக்குழுவின் உறுப்பினர்களுக்கும், செயலாளருக்கும் இடையில் கருத்து முரண்பாடு ஏற்பட்டது.
இந்த நிலையில், குறித்த விடயம் தொடர்பில் நேற்று கருத்து தெரிவித்துள்ள பொது நிர்வாக அமைச்சர் ரஞ்சித் மத்தும பண்டார, தனக்கு அறிவிக்கப்பட்டே சுற்றுநிரூபம் வெளியிடப்பட்டதாக குறிப்பிட்டுள்ளார்.
ஏப்ரல் 21 தாக்குதலின் பின்னர், ஆள் அடையதளத்தை வெளிப்படுத்துவது தொடர்பில் சுற்றுநிரூபம் வெளியிடப்பட்டதாக அவர் தெரிவித்துள்ளார்.