கல்முனையில் தற்போது எழுந்துள்ள நிலைமைகள் தொடர்பில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரான ரவூப் ஹக்கீம் தலைமையிலான குழுவினர் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவை நேற்று (21) மாலை சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர். பிரதமருடனான நேற்றையச் சந்திப்பில் முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் எம.பி, அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவர் ரிஷாத் பதியுதீன் எம்.பி மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்களான எச்.எம்.எம். ஹரீஸ், ஏ.எச்.எம். பௌஸி, பைசல் காசிம், எம்.எஸ். தௌபீக், முஜிபுர் ரஹ்மான், இஷாக் ரஹ்மான் ஆகியோர் கலந்து கொண்டனர்.
கல்முனை வடக்கு பிரதேச செயலகத்தைத் தரமுயர்த்தும் விடயத்தில் முஸ்லிம்கள் பாதிக்கப்படக் கூடாது என்றும் இது தொடர்பில் அனைத்துத் தரப்பினர்களுடனும் பேச்சுவார்ததை நடத்தியே நியாயாமான தீர்வைக் காண வேண்டும் என்றும் அவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
இது தொடர்பில் நாடாளுமன்ற உறுப்பினர் எச்.எம். எம். ஹரீஸ் மெட்ரோ நியூஸுக்குத் தெரிவிக்கையில், கல்முனை விவகாரம் தொடர்பில் ஆராய்ந்து அனைவரும் உடன்பாட்டுக்கு வந்து தீர்வுகளைக் காணும் வகையில் ஏலவே குழு ஒன்று நியமிக்கப்பட்டு அதன் செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. இந்தப் பிரச்சினைகள் விரைவாகத் தீர்க்கப்பட வேண்டும் என்பதும் எமது விருப்பமாகும்.
இவ்வாறானதொரு நிலையில், கல்முனையில் அசாதாரண நிலைமைகளைத் தோற்றுவித்து பிரச்சினைகளை ஏற்படுத்தி தங்களுக்குத் தேவையான சில விடயங்களை செய்து கொள்ள ஒரு தரப்பினர் முயற்சிக்கின்றனர். இதனை ஒருபோது நாங்கள் அனுமதிக்கப் போவதில்லை.
இந்த விவகாரம் தொடர்பில் நேற்று பிரதமர் ரணில் விக்கிரமவைச் சந்தித்து எமது தரப்பு நியாயங்களை அவருக்கு விளக்கியுள்ளோம். அதனைப் பிரதமரும் ஏற்றுக் கொண்டார்.
இது தொடர்பில் கல்முனையின் எந்தத் தரப்பும் பாதிக்கப்படாத வகையில் தான் நடவடிக்கை எடுப்பதாகப் பிரதமர் எமக்கு வாக்குறுதி வழங்கியுள்ளார்.
இதன்படி பிரதமர் அலுவகத்திலிருந்தோ அல்லது துறைசார் அமைச்சின் ஊடாகவோ இன்று (21) அறிக்கை ஒன்று வெளியிடப்படும் என் நம்புகிறோம் என்றார்.