இலங்கையில் கடந்த ஆண்டு ஒக்ரோபர் மாதம் ஆரம்பித்த அரசியல் நெருக்கடியும், அரசியல் முரண்பாடுகளும் உயிர்த்த ஞாயிறுத் தாக்குதலின் பின்னரான சூழலில் மேலும் அதிகரித்துள்ளன. குறிப்பாக இலங்கை ஒற்றையாட்சியின் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஆகிய இருவருக்குதிடையேயும் ஏற்பட்டுள்ள மோதல்கள், முரண்பாடுகள், ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான அரசாங்கத்தின் செயற்பாடுகளை முடக்கியுள்ளதாக கொழும்பு அரசியல் தகவல்கள் கூறுகின்றன.
இந்த நிலையில் தஜிகிஸ்தான் நாட்டிற்குச் சென்றுள்ள மைத்திரிபால சிறிசேன கொழும்பு திரும்பியதும் நாடாளுமன்றத்தைக் கலைத்து பொதுத் தேர்தலை நடத்துவதற்கு சர்வஜன வாக்கெடுப்பொன்றைக் கோரவுள்ளதாக மகிந்த தரப்பு உறுப்பினர் ரோஹித அபேகுணவர்த்தன தெரிவித்துள்ளார்.
பத்தரமுல்லலையில் உள்ள ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் அலுவலகத்தில் இன்று சனிக்கிழமை இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் இவ்வாறு கூறியுள்ளார். மைத்திரிபால சிறிசேன, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஆகிய இருவருக்குதிடையேயான முரண்பாடுகள், மோதல்கள் நாளுக்கு நாள் அதிகரித்துள்ளதால் அரசாங்கத்தை தொடர்ந்து நடத்த முடியாதெனவும், இதனால் சர்வஜன வாக்கெடுப்பொன்றை நடத்தி அதன் மூலம் நாடாளுமன்றத் தேர்தலுக்குச் செல்வதற்கான ஏற்பாடுகளில் மைத்திரிபால சிறிசேன ஈடுபட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
ஆனால் மைத்திரிபால சிறிசேன, மகிந்த ராஜபக்சவை மையப்படுத்திய ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியுடன் உறவை முறித்துள்ளாரென்றும், ஜனாதிபதித் தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சியில் ரணில் விக்கிரமசிங்க தவிர்ந்த வேறு வேட்பாளர் ஒருவருக்கு ஆதரவு வழங்கவுள்ளதாகவும் ஏலவே செய்திகள் வெளியாகியிருந்தன.
எனினும் ரணில் விக்கிரமசிங்கவுடன் ஏற்பட்டுள்ள மோதலினால் ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதித் தலைவர் சஜித் பிரேமதாசவை மையப்படுத்திய ஐக்கிய தேசியக் கட்சி உறுப்பினர்கள் மற்றும் அந்தக் கட்சியுடன் கூட்டுச் சேர்ந்துள்ள ஏனைய சிறிய கட்சிகளையும் இணைத்துக் கொண்டு புதிய அரசியல் அணி ஒன்றை உருவாக்க மைத்திரிபால சிறிசேன முற்படுவதாகவே உள்ளகத் தகவல்கள் கூறுகின்றன.
இவ்வாறானதொரு நிலையில், சர்வஜன வாக்கெடுப்பு நடத்தி அதில் வெற்றி பெற்றபின்னர் நாடாளுமன்றத்தைக் கலைத்து பொதுத் தேர்தலுக்குச் செல்ல மைத்திரிபால சிறிசேன திட்டமிட்டுள்ளாரென உள்ளகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இலங்கை ஒற்றையாட்சி அரசியலமைப்பின் 19 ஆவது திருத்தச்சட்டத்தின் பிரகாரம் ஐந்து வருடங்கள் உள்ள நாடாளுமன்றத்தின் பதவிக்காலத்திற்கு முன்னர், அதனைக் கலைக்க வேண்டுமானால், குறைந்தது நான்கு ஆண்டுகளும் ஆறு மாதங்களும் பூர்த்தியடைந்திருக்க வேண்டும்.
ஆனால், இந்த நாடாளுமன்றம் எதிர்வரும் ஓகஸ்ட் மாத்தத்துடனேயே நான்கு அண்டுகள் பூர்த்தியடைகின்றன. ஆகவே மேலும் ஆறு மாதங்கள் காத்திருக்க வேண்டும் என்பதால் சர்வஜன வாக்கெடுப்பை நடத்தி நாடாளுமன்றத்தைக் கலைத்து பொதுத் தேர்தலை நடத்த மைத்திரி திட்டமிட்டுள்ளதாகக் கூறப்படுகின்றது.
ஜனாதிபதித் தேரல்தல் அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் நடத்தப்பட வேண்டும். அதற்கிடையே இந்த ஆண்டு முடிவடைவதற்குள், மாகாண சபைத் தேர்தல்களையும் நடத்த வேண்டும்.
ஆகவே சர்வஜன வாக்கெடுப்பு நடத்தி நாடாளுமன்றத் தேர்தலுக்குச் செல்ல முற்பட்டால், மாகாண சபைத் தேர்தல்கள் இந்த ஆண்டு நடத்தப்படன் கூடிய வாய்ப்புகள் இல்லையென கொழும்பு அரசியல் தகவல்கள் கூறுகின்றன.
மாகாண சபைத் தேர்தல்களை இந்த ஆண்டு யூன் மாதம் அல்லது ஆண்டு முடிவடைதற்குள் நடத்த வேண்டுமென்றும், இல்லையேல் 19 ஆவது திருத்தச் சட்டத்தின் பிரகாரம் மாகாண சபைத் தேர்தல்களை நடத்தச் சட்டச் சிக்கல்கள் ஏற்படுமெனவும் இலங்கைத் தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மகிந்த தேசப்பிரிய ஏலவே எச்சரிக்கை விடுத்திருந்தார்.