ஈஸ்டர் ஞாயிறு குண்டுத் தாக்குதல்கள் மற்றும் அதனைத் தொடர்ந்து இடம்பெற்ற வன்செயல்கள் தொடர்பான சோதனை நடவடிக்கைகளின்போது கைதுசெய்யப் பட்டவர்களது விசாரணைகளைத் துரிதப்படுத்தும்படி பிரதமர் ரணில் விக்கிரமசிங்க பொலிஸாருக்கும் சட்டமா அதிபர் திணைக்களத்துக்கும் ஆலோசனை வழங்கி யுள்ளார்.
குறிப்பிட்ட சம்பவங்களை அடுத்து தற்போது 2400 க்கும் அதிகமானோர் சிறை வைக்கப்பட்டிருக்கின்றமையையடுத்து பிரதமர் இந்தப் பணிப்புரையை விடுத்துள்ளார். அண்மையில் உயர் பொலிஸ் அதிகாரிகளுடனான கூட்டமொன்றில் கலந்துகொண்டபோதே பிரதமர் இந்தப் பணிப்புரையை விடுத்துள்ளார். இக்கூட்டம் பதில் பொலிஸ் மா அதிபர் சி.டி. விக்கிரமசிங்க மற்றும் சட்டமா அதிபர் டப்புல டி லிவேரா ஆகியோரின் தலைமையில் நடைபெற்றது. இந்தக்கூட்டத்தில் வெளிவிவகார அமைச்சர் திலக் மாரப்பன, நீதியமைச்சர் தலதா அத்துகோரள மற்றும் அமைச்சர் லக் ஷ்மன் கிரியெல்ல ஆகியோரும் கலந்துகொண்டிருந்தனர்.
தற்கொலை குண்டுத் தாக்குதல் சம்பவங்களுடன் நேரடியாகத் தொடர்பு கொண்டு சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளவர்கள் மீதான விசாரணைகள் சி.ஐ.டி. மற்றும் ரி.ஐ.டி. பிரிவினரால் எவ்வித தங்குதடைகளுமின்றி முன்னெடுக்கப்பட வேண்டும்.
அதேவேளை, சோதனை நடவடிக்கைளின்போது கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டிருப்பவர்களது விசாரணைகள் துரிதப்படுத்தப்படவேண்டும் என பிரதமர் ரணில் விக்கிரமசிங்க பணித்துள்ளதாக பிரதமர் அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதாவது சோதனை நடவடிக்கையின்போது புராதன ஆயுதங்கள், பல்வகையான ஆடைகள், சந்தேகத்துக்கு இடமான இலக்கிய நூல்கள், புத்தகங்கள், கத்திகள், வாள்கள் என்பவற்றுடன் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டவர்களின் விசாரணைகள் துரிதப்படுத்தப்பட வேண்டும். விசாரணைகளைத் துரிதப்படுத்தி சாட்சிகள் உறுதிப்படுத்தப்படாவிட்டால் அவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை மேற்கொள்ள முடியாவிட்டால் அவர்களை விடுதலை செய்யுமாறு வேண்டப்பட்டுள்ளது.
இராணுவத்தினரால் கைது செய்யப்பட்டு பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளவர்களை தொடர்ந்தும் தடுத்து வைத்திருக்க வேண்டுமா இல்லையா? என்பது தொடர்பில் சட்டமா அதிபர் திணைக்களத்திடம் சட்ட ஆலோசனை கோரியுள்ளதாக பொலிஸ் சட்ட விவகாரத்துக்குப் பொறுப்பான பணிப்பாளர் தெரிவித்தார்.