அமைச்சர்.மனோ கணேசன் இலங்கையில் அரபு மொழியை தடை செய்து விட்டதாக அறியாமல்,புரியாமல் கூச்சல் இட்டு திரியும் ஒரு சிலரின் கருத்து தொடர்பில் சற்று முன் அமைச்சர்.மனோ கணேசன் அவர்களிடம்
நான் கேட்டதற்கு அமைச்சர் என்னிடம் கூறிய பதில் பின்வருமாறு.
முதலில் எனது அமைச்சு மொழி தொடர்பான எந்தவொரு சுற்று நிருபத்தையும் இதுவரை வெளியிடவில்லை என்பதை அறிந்துக்கொள்ளுங்கள். இந்த விடயம் பற்றி முதலில் பேசியது பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஆகும்.
அவர்தான், இந்நாட்டில் பொது இடங்களில் அரபு மொழி பாவிக்கப்படுவதை தவிர்த்து, இலங்கை அரசியலமைப்பு ஏற்றுக் கொண்டுள்ள மூன்று மொழி கொள்கையை கறாராக முன்னெடுக்கும்படி கூறியுள்ளார்.
பிரதமரின் இந்த கருத்தை கடைபிடிக்குமாறும், கண்காணிக்குமாறும் எனது அமைச்சின் மொழி விவகார அதிகாரிகளை நான் அறிவுறுத்தியுள்ளேன். அவ்வளவுதான்.
உங்களை போன்ற சிலருக்கு "புரியாமை" என்ற தொற்று நோய் மோசமாக பிடித்தாட்டுகிறது என நினைக்கிறேன். அல்லது சமூக ஊடகங்களை பயன்படுத்தி மலினத்தனமான விளம்பரம் தேடும் நோயோ எனவும் தெரியவில்லை.
மேலும் உங்களை போன்றோர் தூங்குகிறீர்களா அல்லது தூங்குவதை போன்று நடிக்கிறீர்களா என்றும் எனக்கு தெரியவில்லை.
இங்கே பிரதமரும், நானும் கூறுவதை முதலில் தெளிவாக புரிந்துக்கொள்ள முயலுங்கள். அரச நிறுவனங்கள், வீதிகள், சாலைகள் ஆகிய பொது இடங்கள் ஆகியவற்றில் சிங்களம், தமிழ், ஆங்கிலம் ஆகிய மூன்று மொழிகளில் மாத்திரமே பெயர்பலகைகள் இடம்பெற வேண்டும்.
இது கொள்கை மட்டுமல்ல, இந்நாட்டு சட்டம்.
அரபு மொழியும் இந்த அரசு சார்நத பொது இடங்களில் இடம்பெற வேண்டுமென்றால் அதனை அரசியல் கோரிக்கையாக முன்வைத்து, போராடி, வெற்றி பெற்று, அரசியலமைப்பில் இடம்மபெற செய்து, இலங்கையின் மொழி சட்டத்தை "மூன்று மொழி" என்பதிலிருந்து "நான்கு மொழி" என மாற்றுங்கள்.
மற்றபடி, உங்கள் வீடுகளிலும், தனியார் நிறுவனங்களிலும், பள்ளிவாசல்களிலும் உங்களுக்கு விருப்பமான மொழிகளை நீங்கள் பயன்படுத்த எந்தவொரு தடையும் கிடையாது.
அந்த மொழி அரபுவோ, பாரசீகமோ, உருதுவோ, மலாயோ எதுவாகவும் இருக்கலாம். அதுபற்றி அரசாங்கம் அக்கறை கொள்ளவில்லை.
ஆகவே ஏதோ அரபு மொழி பாவனையை அரசாங்கம் தனியார் இல்லங்களிலும், பள்ளிவாசல்களிலும் தடை செய்து விட்டது போன்ற இல்லாத போலி பிரமையை உருவாக்க வேண்டாம்.
உண்மையில் சொல்லப்போனால் அரபு மொழியின் தாயகமான, சவுதி அராபியா வில் இருப்பதை விட நூறு மடங்கு அதிக சுதந்திரமும், உரிமையும் சகோதர மொழிகளுக்கும், மதங்களுக்கும் இலங்கையில் வழங்கப்பட்டுள்ளது.
இந்த உண்மையை மனசாட்சியுடன் சிந்திக்கும் ஒவ்வொரு இலங்கையரும் அறிவார். உங்களுக்கு இது தெரியாவிட்டால் நீங்கள் இலங்கையராக இருக்க முடியாது.
இந்த அடிப்படை உண்மையை புரிந்துக் கொண்டு இலங்கையில் இலங்கையராக தாய் மண்ணையும், தாய் மொழியையும் நேசித்து வாழ பழகுங்கள்.
தேவையற்ற பிரச்சினைகளை கிளப்பி இந்நாட்டில் இன்றுள்ள கொதிநிலை சமூக உணர்வுகளை மேலும் தூண்டி விட்டு, தேசிய ஒருமைப்பாட்டை இன்னமும் குழி தோண்டி புதைத்து அப்பாவி பாமர மக்களை ஆபத்தில் தள்ளாதீர்கள்.