அகில இலங்கை ஜம்யதுல் உலமாவின் வழிகாட்டலை மீறி இலங்கை முஸ்லிம்கள் எவரும் எதிர்காலத்தில் செயற்படுவதற்கு அனுமதிக்கப்படமாட்டார்கள் என்று மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் எம்.எஸ்.எஸ்.அமீர் அலி தெரிவித்தார்.
சமகால அரசியல் தொடர்பாக பிரதேச மக்களுக்கு விளக்கம்; அளிக்கும் கூட்டம் நேற்று (14) வாழைச்சேனை அந் நூர் தேசிய பாடசாலை பிரதான மண்டபத்தில் எம்.எஸ்.கே.ரஹ்மான் தலைமையில் இடம் பெற்றபோது அதில் கலந்து கொண்டு உரையாற்றம் போதே பாராளுமன்ற உறுப்பினர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அங்கு அவர் தொடர்ந்து உரையாற்றுகையில்,
முஸ்லிம்கள் அகில இலங்கை ஜம்யதுல் உலமாவின் வழிகாட்டலை மீறி எதிர்காலத்தில் எந்தவித மத ரீதியான செயற்பாடுகளையும் செய்ய முடியாது அவர்களின் வழிகாட்ல்களில்தான் மத ரீதியான செயற்பாடுகள் இடம் பெறும் என்பதில் மாற்றுக் கருத்துக்கு இடமில்லை.
இன்று இலங்கையில் உள்ள முஸ்லிம்கள் ஒவ்வொருவரும் கண்காணிக்கப்பட்டுக் கொண்டுதான் இருக்கின்றார்கள் என்பதனை அனைவரும் தெளிவாக விளங்கிக் கொள்ள வேண்டும் எமது ஒவ்வொரு செயற்பாட்டையும் இறைவன் கண்காணிக்கின்றான் என்பதனைப்போன்று எமது செயற்பாடுகள் அனைத்தும் கண்காணிக்கப்படகின்றன.
சட்டத்தை மதிக்கின்ற மக்களாக நாம் எப்போதும் இருக்க வேண்டும். மோட்டார் சைக்கிள் செலுத்தும் போது தலைக்கவசத்தை அணிவதற்குக்கூட நாங்கள் தயாரானவர்களாக இல்லை. அவ்வாறிருக்காமல் இனி வரும் காலங்களில் எமது நாட்டின் சட்டத்தை முழுமையாக மதிக்கின்றவர்களாக நாம் இருக்க வேண்டும். அண்மையில் தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் ரவூப் ஹக்கீமிடம் ‘உங்களது சமூகத்தை சார்ந்த மக்கள் சட்டத்தை மதிக்கின்ற மக்கள் அல்ல.. குறைந்தது தலைக்கவசத்தை அணிந்து செல்வதற்குக் கூடத் தயாராக இல்லையே அது ஏன்’ என்று கேள்வி கேட்ட போது ரவூப் ஹக்கீம் பதில் சொல்வதிலே சங்கடப்பட்ட நிலையை அந்த நிகழ்ச்சியை பார்த்தவர்கள் அவதானித்திருப்பீர்கள்.
இன்று நாட்டிலே உள்ள சகோதர இன மக்கள் எங்களை இலஞ்சம் கொடுக்கின்ற சமுகமாக பார்க்கின்றார்கள் அனாச்சாரங்கக்கு மிகவும் விலை போனவர்களாக எங்களை பார்க்கின்றார்கள்.
இஸ்லாமிய மார்க்கம் அழகாக சொல்லியிருக்கின்றது மற்றைய மதப்பளியுங்கள் என்றும் ஏனைய மத பெரியார்களை மதியுங்கள் என்றும். எனவே அதனை எமது பிரதேச இளைஞர்கள் கடைப்பிடித்து நடக்க வேண்டும் என்று இச்சந்தர்ப்பத்திலே கேட்டுக் கொள்கிறேன் என்றும் தெரிவித்தார்.