Top News

சாய்ந்தமருதுவை சிலர் பிழையாக வழிநடத்துகின்றனர் -நான் களத்தில் குதிப்பேன் - ஜெமீல்

(அஸ்லம் எஸ்.மெளலானா, எம்.வை.அமீர்)

சாய்ந்தமருது மக்களை பிழையாக வழிநடத்துபவர்கள் விடயத்தில் அனைவரும் விழிப்படைய வேண்டும் என அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் பிரதித் தலைவரும் முன்னாள் கிழக்கு மாகாண சபை குழுத் தலைவருமான கலாநிதி ஏ.எம்.ஜெமீல் தெரிவித்தார்.

சாய்ந்தமருது பௌசி விளையாட்டு மைதானத்தில் இன்று ஞாயிறு (23) மாலை மிஸ்ரோ அமைப்பின் தலைவர் இஸ்மாயில் இக்தார் தலைமையில் இடம்பெற்ற பிரதேச விளையாட்டு விழாவின் பரிசளிப்பு நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்து கொண்டு உரையாற்றியபோதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.

அங்கு கலாநிதி ஏ.எம்.ஜெமீல் மேலும் தெரிவிக்கையில்;

தமது சுயநல அரசியலுக்காக சமூகத்தை புறந்தள்ளி, ஊரை நட்டாற்றில் விடுபவர்களை நம்பி எமது சாய்ந்தமருதை அவர்களிடம் விட்டுவிட முடியாது. ஆகையினால் எதிர்காலத்தில் எந்த தேர்தல் வந்தாலும் சாய்ந்தமருதை பிரதிநிதித்துவபடுத்தி நான் களமிறங்குவேன்.

1987 ஆம் ஆண்டு முதல் மாணவப் பருவத்தில் சமூக சேவை சார்ந்த செயற்பாடுகளில் இணைந்து செயற்பட்டதன் ஊடாக பெற்ற அனுபவமே அரசியல் நீரோட்டத்தில் இணைய காரணமாக அமைந்தது. அதனால் எமது பிரதேசத்திற்கும் சமூகத்திற்கும் நாட்டுக்கும் எம்மால் சேவையாற்ற முடிந்தது.

இப்போது தென்கிழக்குப் பல்கலைக்கழகம் பிரமாண்டமாக நிமிர்ந்து நிற்பதற்கு எமது அர்ப்பணிப்பே பிரதான காரணமாக அமைந்தது.

நான் கிழக்கு மாகாண சபை உறுப்பினராக இருந்த காலப்பகுதியில் சாய்ந்தமருது உள்ளுராட்சி மன்றத்துக்காக, பலத்த எதிர்ப்புகளுக்கு மத்தியில் தனிநபர் பிரேரணை ஒன்றைக் கொண்டு சென்று, நிறைவேற்றி, கிழக்கு மாகாண சபையின் பரிந்துரையை பெற்றுக் கொடுத்தேன். சாய்ந்தமருது நகர சபையை உருவாக்குவதற்கான உள்ளூராட்சி அமைச்சின் ஆவணக்கோவையில் முதலிடம் பெற்றிருப்பது கிழக்கு மாகாண சபையின் தவிசாளர் கையொப்பமிட்ட அந்தப் பரிந்துரை தொடர்பான ஆவணமே.

2017 ஒக்டோபர் மாதம் சாய்ந்தமருது சபைக்கான மக்கள் எழுச்சிப் போராட்டம் ஆரம்பித்தபோது என்னுடைய அனைத்து அரசியல் செயற்பாடுகளையும் நிறுத்தி விட்டு சுற்றியிருந்த ஆதரவாளர்களை போராட்டத்தில் இணைந்து செயற்படுமாறு பணித்து, ஒத்துழைப்பு வழங்கியிருந்தேன்.

நான் பிறந்த மண், சமூகம் என்று வரும்போது அதற்காக அனைத்தையும் துறந்து, உயிரையும் துச்சமாக மதித்து போராட ஒருபோதும் தயங்கியதில்லை.

எமது பிரதேசத்தின் முன்னேற்றத்தை கருத்தில் கொண்டு சாய்ந்தமருது- மாளிகைக்காடு இளைஞர் பேரவை என்ற அமைப்பு தற்போது களத்தில் இறங்கியுள்ளது. அதற்கு என்னால் முடிந்த அத்தனை உதவிகளையும் ஒத்துழைப்புக்களை வழங்குவேன்.

எதிர்காலத்தில் உள்ளுராட்சி மன்றத் தேர்தல் ஒன்று நடைபெறும்போது சாய்ந்தமருது தனியான நகர சபையிலேயே அத்தேர்தல் நடைபெறும் என்பதில் சந்தேகம் கிடையாது.

அதேவேளை முஸ்லிம் சமூகத்துக்கு எதிராக, விசேடமாக கல்முனையை கபளீகரம் செய்ய எத்தனிக்கும் இனவாத துறவிகளுக்கும் எமது உறவுகளது ஊயிர்களையும் உடமைகளையும் காவுகொண்ட கருணா போன்ற பயங்கரவாதிகளுக்கும் எதிராக எங்களது ஒற்றுமையை காட்டுவதனூடாக சமூகத்தை பாதுகாக்க வேண்டிய தேவையிருப்பதை எல்லோரும் உணர்ந்து கொள்ள வேண்டும் என்று குறிப்ட்டார்.

இந்நிகழ்வில் அம்பாறை மாவட்ட இளைஞர் சேவைகள் பிரதிப் பணிப்பாளர் எஸ்.எம்.ஏ.லத்தீப், கல்முனை மாநகர சபை உறுப்பினர் நஸ்ரின் அமீன், காரைதீவு பிரதேச சபை உறுப்பினர் முஹம்மட் பஸ்மிர், சாய்ந்தமருது இளைஞர் சேவை உத்தியோகத்தர் எம்.ரீ.எம்.ஹாறூன், ஆசிரியர் அலியார் பைசர், முன்னாள் இளைஞர் பாராளுமன்ற உறுப்பினர்களான ஏ.எம்.தில்சாத், எப்.எம்.தில்ஷாத் உட்பட சாய்ந்தமருது பிரதேச செயலக உத்தியோகத்தர்களும் கலந்து கொண்டனர். இதன்போது போட்டிகளில் வெற்றியீட்டிய வீரர்கள் வெற்றிக் கின்னங்கள் வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.
Previous Post Next Post