Top News

அரபு மொழி என்பது தொன்மையான ஒரு மொழி. வளமான ஒரு மொழி : மனோ கணேசன்



சிங்கள மொழி மற்றும் தமிழ் மொழி என இரண்டும் நாட்டின் தேசிய மொழிகள், ஆட்சி மொழிகள் என அமைச்சர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.

கொழும்பு - வத்தளை, கலைமகள் தமிழ் வித்தியாலயத்தில் இன்று -14- இடம்பெற்ற 13 வருட உத்தரவாத கல்வி நிகழ்ச்சித்திட்டத்தின் ஆரம்ப நாள் நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

மேலும் அவர் உரையாற்றுகையில்,

நாட்டில் அதிகாரப்பூர்வமான மொழிகள் இருக்கின்றன. ஒன்று சிங்கள மொழி, அடுத்தது தமிழ் மொழி. இவை இரண்டும் தேசிய மொழிகள். ஆட்சி மொழிகள். அது தவிர ஆங்கில மொழி இருக்கின்றது. இந்த மூன்று மொழிகள் தான் இலங்கையிலேயே பயன்படுத்தப்பட வேண்டும் என கூறி உள்ளனர்.

அரசாங்கம் மற்றும் அரசாங்கம் சார்ந்த கட்டிடங்களிலே உள்ளேயும் வெளியேயும் இன்றைக்கும் பாடசாலைகள் உட்பட எல்லா இடத்திலேயுமே, பொது இடங்களிலே, வீதிப் பெயர்பலகைகளிலே எல்லா இடத்திலும் சிங்கள மொழியும், தமிழ் மொழியும், ஆங்கில மொழியும் இருக்க வேண்டும்.

தவிர வேறு எந்த மொழிகளும் இருக்கக் கூடாது என கூறி இருக்கின்றார்கள். சில இடங்களில் தவிர்க்க முடியாமல் அரபு மொழி இருக்கின்றது.அது இந்த நாட்டிலே பெரும் பிரச்சினையை ஏற்படுத்தியிருக்கின்றது.

அரபு மொழி என்பது தொன்மையான ஒரு மொழி. வளமான ஒரு மொழி. ஆனால் இந்த நாட்டின் மொழி அல்ல அது.

ஆகவே அந்த மொழியை அத்தியாவசியமாக பயன்படுத்துவதினால் எதிர்ப்புக்கள், விரோதங்கள் ஏற்படுகின்றது. இந்த மொழியை பயன்படுத்துபவர்கள் புரிந்து கொள்ள வேண்டும் என அவர் தெரிவித்துள்ளார்.
Previous Post Next Post