தனது நாட்டில் 40 பயங்கரவாதக் குழுக்கள் இருப்பதாகவும், 30 ஆயிரம் தொடக்கம் 40 ஆயிரம் வரையான பயங்கரவாதிகள் ஆயுதங்கள் சகிதம் இயங்கிக்கொண்டிருப்பதாகவும் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் வொஷிங்டனில் செவ்வாய்க்கிழமை அதிர்ச்சிகரமான தகவலை வெளியிட்டுள்ளார்.
அமெரிக்காவுக்கு உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டிருக்கும் அவர் அமெரிக்க காங்கிரஸின் பாகிஸ்தான் விவகாரக் குழுவின் தலைவியான ஷீலா ஜக்சன் லீயினால் கெப்பிட்டல் ஹில்லில் அளிக்கப்பட்ட விருந்துபசாரத்தில் உரையாற்றுகையிலேயே இவ்வாறு குறிப்பிட்டிருக்கிறார்.
“பயங்கரவாதத்துக்கு எதிரான அமெரிக்காவின் போரை நாம் நடத்திக்கொண்டிருக்கின்றோம். 9/11 பயங்கரவாத தாக்குதல்களுடன் பாகிஸ்தானுக்கு எந்தச் சம்பந்தமும் இல்லை. அல் – குவைதா இயக்கம் ஆப்கானிஸ்தானிலேயே இருந்தது. பாகிஸ்தானில் தீவிரவாத தலிபான்கள் இல்லை.
ஆனால், நாம் அமெரிக்காவின் போரில் இணைந்துகொண்டோம். துரதிஷ்டவசமாக, நிலவரங்கள் எல்லாம் தவறாகப்போய்விட்டன. எனது அரசாங்கத்தை நான் குற்றஞ்சாட்டுகிறேன். பாகிஸ்தானில் உள்ள உண்மை நிலவரங்களை நாம் அமெரிக்காவுக்கு சொல்லவில்லை. பாகிஸ்தானில் நிலவரங்கள் அரசாங்கங்களின் கட்டுப்பாட்டில் இருக்கவில்லை என்பதே உண்மையாகும்.
எனது நாட்டில் 40 வேறுபட்ட பயங்கரவாதக் குழுக்கள் இயங்குகின்றன. உயிர் தப்பி வாழுவோமா என்ற கவலையுடன் எம்மைப்போன்ற ஆட்கள் காலத்தைக் கடத்திவந்திருக்கிறோம். நாம் இன்னும் கூடுதலாக செயற்படவேண்டும் என்று அமெரிக்கா எதிர்பார்த்தது. போரை அமெரிக்கா வெல்வதற்கு நாம் உதவவேண்டும் என்று எதிர்பார்க்கப்பட்டது. அந்த நேரத்தில் எனது நாடு அதன் சொந்த இருப்புக்காக போராடிக்கொண்டிருந்தது.
எனது இந்த விஜயத்தின்போது ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்புடனும் ஏனைய உயர்மட்ட தலைவர்களுடனும் முக்கியமான சந்திப்புகளை நடத்தினேன். முதலில் எமக்கிடையிலான உறவுமுறை பரஸ்பர நம்பிக்கையின் அடிப்படையில் அமையவேண்டும். சமாதானச் செயன்முறைகளைப் பொறுத்தவரை பாகிஸ்தானினால் செய்யக்கூடியது என்ன என்பதை நேர்மையாக அமெரிக்காவுக்கு நாம் சொல்லவேண்டும்.
பேச்சுவார்த்தையை தொடங்குவதற்கு தலிபான்களை மேசைக்கு கொண்டுவருவதற்கு பாகிஸ்தான் தன்னால் இயன்றவரை முயற்சித்துக்கொண்டிருக்கிறது. இதுவரை, நாம் சிறப்பாகவே செயற்பட்டிருக்கின்றோம். சமாதான செயன்முறைகள் சுலபமானவை அல்ல என்பதை அமெரிக்கா புரிந்துகொள்ளவேண்டும்” என அவர் தெரிவித்தார்.
அதேவேளை, பிரதமர் இம்ரான் கான் வாஷிங்டனில் உள்ள சமாதானத்துக்கான அமெரிக்க நிறுவனத்தில் ஆற்றிய பிறிதொரு உரையில் பாகிஸ்தானில் இன்னமும் 30,000 தொடக்கம் 40,000 வரையான பயங்கரவாதிகள் இருக்கிறார்கள் என குறிப்பிட்டிருக்கிறார்.
“நாம் ஆட்சிக்கு வரும்வரை, அரசாங்கங்களிடம் அரசியல் துணிவாற்றல் இருக்கவில்லை. ஏனென்றால் தீவிரவாதக்குழுக்கள் என்று வரும்போது ஆயதபாணிகளான 30 ஆயிரம் தொடக்கம் 40 ஆயிரம் உறுப்பினர்கள் அந்த குழுக்களில் அங்கம் வகித்து செயற்பட்டுக்கொண்டிருக்கிறார்கள். அவர்கள் ஆப்கானிஸ்தான் அல்லது காஷ்மீரின் பகுதிகளில் பயிற்சிபெற்று சண்டையில் ஈடுபடுகிறர்கள்.
எமது அரசாங்கமே தீவிரவாதக்குழுக்களை நிராயுதபாணிகளாக்கும் நடவடிக்கைகளை ஆரம்பித்த முதல் அரசாங்கமாகும். முதல் தடவையாக இது நடைபெறுகின்றது. தீவிரவாதிகளின் நிறுவனங்களை, மத போதனை நிலையங்களை நாம் சுவீகரித்தோம். இப்போது எமது நிர்வாகிகள் அவற்றை பரிபாலனம் செய்கிறார்கள்” என்று அவர் தனதுரையில் மேலும் கூறினார்.
Post a Comment