முஸ்லிம் விவாகம், விவாக ரத்து மற்றும் தனியார் சட்டம் தொடர்பான திருத்தங்களை இறுதிப்படுத்துவது, அமைச்சரவைக்கு அடுத்தவாரம் சமர்ப்பிக்கப்படவிருக்கும் மத்ரஸா சட்டமூலம், ஏப்ரல் 21 தாக்குதலின் பின்னர் கைதுசெய்யப்பட்டு தடுத்துவைக்கப்பட்டுள்ள அப்பாவி முஸ்லிம்கள் மற்றும் கல்முனை வடக்கு பிரதேச செயலக விவகாரம் உள்ளிட்ட சமகால நெருக்கடிகள் தொடர்பில் கலந்துரையாடுவதற்காக நேற்றுமுன்தினம் முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்களை பிரதமர் ரணில் விக்கிரமசிங்க அலரி மாளிகைக்கு அழைத்து பேச்சு நடத்தினார்.
இதில் அமைச்சர் அப்துல் ஹலீம், பாராளுமன்ற உறுப்பினர்களான ஏ.எச்.எம்.பௌஸி, ரிஷாத் பதியுதீன், முஜிபுர் ரஹ்மான், எச்.எம்.எம்.ஹரீஸ், அலிசாஹிர் மௌலானா, பைஸர் முஸ்தபா, இஸ்மாயில், எஸ்.எம்.மரிக்கார், காதர் மஸ்தான், மஹ்ரூப் உள்ளிட்ட பாராளுமன்ற உறுப்பினர்களும் சட்டமா அதிபர் திணைக்கள அதிகாரிகள், பொலிஸ் அதிகாரிகள் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர்.
முஸ்லிம் தனியார் சட்டம்
முஸ்லிம் தனியார் சட்ட விவகாரம் தொடர்பில் இறுதித் தீர்மானமொன்று எடுக்கவேண்டியிருக்கிறது. எனினும், குறித்த திருத்தங்கள் தொடர்பாக மேலும் சில கலந்துரையாடல்கள் நடத்தப்பட்டே இறுதி முடிவுக்கு வரமுடியுமென முஸ்லிம் சமய விவகார அமைச்சர் அப்துல் ஹலீம் பிரதமரிடம் கேட்டுக்கொண்டார்.
இதுதவிர முஸ்லிம் தனியார் சட்டத்தில் மேற்கொள்ளப்பட வேண்டிய திருத்த விடயங்கள் குறித்து மீளவும் பேச்சு நடத்த வேண்டுமென அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா கேட்டுக்கொண்டமை குறித்தும் முஸ்லிம் எம்.பி.களால் பிரதமரிடம் சுட்டிக்காட்டப்பட்டது.
மத்ரஸா சட்டமூலம்
அரபுக் கல்லூரிகள் மற்றும் குர்ஆன் மத்ரஸாக்கள் என்பன கல்வி அமைச்சின் கீழ் விசேட சபை ஊடாக கொண்டுவருவது குறித்த சட்டமூலம் அடுத்தவாரம் அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்படவிருக்கிறது. இதில் திருத்தகள் ஏதும் முன்னெடுக்கப்பட வேண்டியுள்ளதா என பிரதமர் முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்களிடம் வினவியதுடன், குறித்த யோசனை தொடர்பிலான கருத்துகளையும் கேட்டுக்கொண்டார். இதற்கமைய சிறு சிறு மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளதுடன் அடுத்தவாரம் அமைச்சரவையில் சமர்ப்பிப்பதற்கான ஒப்புதலையும் முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்களிடம் பிரதமர் பெற்றுக்கொண்டார்.
கைதிகள் விடுதலை
ஏப்ரல் 21 ஆம் திகதி நட்சத்திர ஹோட்டல்கள் மற்றும் கிறிஸ்தவ தேவாலயங்கள் மீது பயங்கரவாதிகளால் தாக்குதல் நடத்தப்பட்டதையடுத்து, நாடுமுழுவதும் பாதுகாப்புத் தரப்பினரால் முன்னெடுக்கப்பட்ட சோதனை நடவடிக்கைகளின்போது கைது செய்யப்பட்ட முஸ்லிம்களின் விடுதலை குறித்தும் இதன்போது அவதானம் செலுத்தப்பட்டது. இது குறித்து சட்டமா அதிபர் திணைக்கள அதிகாரிகளின் ஆலோசனை பெறப்பட்டதுடன் பொலிஸாருக்கு விளக்கமளிக்கப்பட்டது.
பயங்கரவாத நடவடிக்கைகளுடன் தொடர்பில்லாத ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்ட நிலையில் பலர் விடுவிக்கப்பட்டுள்ளனர். எனினும் தற்போது 300 பேர்வரையில் தொடர்ந்தும் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் சுட்டிக்காட்டினார்.
கல்முனை விவகாரம்
கல்முனை வடக்கு தமிழ் பிரதேச சபை கோரிக்கை விடயம் வலுப்பெற்றிருப்பதுடன் முறுகல் நிலையொன்று தோற்றுவிக்கப்பட்டுள்மை குறித்து பிரதமரின் கவனத்திற்கு பாராளுமன்ற உறுப்பினர்கள் கொண்டுவந்தனர். இதனை யடுத்து தமிழ் தேசியக் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் முஸ்லிம் பாராளுமன்ற பிரதிநிதிகளுக்குமிடையில் கலந்துரையாடிய பின்னர் இதற்கு சுமுக தீர்வை எட்ட முடியுமென பிரதமாரால் ஆலோசனை வழங்கப்பட்டது. இதற்கமைய நேற்றை தினம் சந்திப்பொன்று இடம்பெற்றதாக பாராளுமன்ற உறுப்பினர் ஹரீஸ் தெரிவித்தார்.
(எஸ்.என்.எம்.ஸுஹைல்) விடிவெள்ளி
Post a Comment