Top News

ஷாபிக்கு விளக்கமறியல் வழங்கிய நீதவானுக்கு எதிராக முறைப்பாடு!

குருநாகல் வைத்தியசாலையின் வைத்தியர் ஷாபி ஷிஹாப்தீனின் வழக்கு விசாரணையின் போது குருநாகல் நீதவானின் நடத்தைகள் தொடர்பில் விசாரணை ஒன்றை மேற்கொள்ளுமாறு நீதிமன்ற சேவைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடு ஒன்று மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இளம் ஊடகவியலாளர் சங்கத்தினால் இந்த முறைப்பாடு மேற்கொள்ளப்பட்டுள்ளது.

குருநாகல் பொலிஸின் குற்ற விசாரணை பிரிவால் கைது செய்யப்பட்ட வைத்தியர் ஷாபி குருநாகல் வைத்தியசாலையின் வைத்தியர் எனவும், அவர் தொடர்பில் விசாரணை மேற்கொள்ளுமாறு ஆலோசனை வழங்கியதாக கூறப்படும் குருநாகல் பிரதி பொலிஸ் மா அதிபர் கித்சிறி ஜயலத்தின் மனைவியும் அதே வைத்தியசாலையின் வைத்தியர் எனவும், ஷாபியை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்ட நீதவானின் மனைவியும் அதே வைத்தியசாலையின் வைத்தியர் எனவும் குறித்த முறைப்பாட்டில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

வைத்தியர் ஷாபி தொடர்பான வழக்கு குருநாகல் நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட வேளையில் வழக்கின் வாதி, பிரதிவாதி மற்றும் பாதிக்கப்பட்டவர்கள் சார்பில் பிரதிநிதித்துவப்படாத குருநாகல் வைத்தியசாலையின் பணிப்பாளருக்கு நீதிமன்றத்தில் சாட்சியமளிக்க வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளதாக குறித்த முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேவேளை எச் எஸ் ஜி பரிசோதனை தொடர்பில் கருத்து தெரிவிக்க வைத்தியசாலையின் பணிப்பாளர் பெண்ணோயியல் மற்றும் மகப்பேற்று வைத்தியர் இல்லை எனவும் அவர் ஒரு பல் வைத்தியர் எனவும் பணிப்பாளர் நீதிமன்றத்தில் தெரிவித்த கருத்துக்கள் வழக்கின் அட்டவணைகளில் இருந்து நீக்கப்பட்டுள்ளதாகவும் இரகசிய போலிஸார் அறிக்கை விடுத்துள்ளதாக முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த விடயங்கள் காரணமாக வழக்கின் வாதி, பிரதிவாதி மற்றும் பாதிக்கப்பட்டவர்களுக்கு அநீதி இழைக்கப்படுவதற்கான வாய்ப்பு இருப்பதாகவும், பொதுமக்களுக்கு நீதிமன்றத்தின் மீது அவநம்பிக்கை ஏற்பட வாய்ப்புள்ளதாகவும் அதனால் இது தொடர்பில் சரியான விசாரணை ஒன்றை மேற்கொள்ளுமாறும் இளம் ஊடகவியலாளர் சங்கம் நீதிமன்ற சேவைகள் ஆணைக்குழுவிடம் வேண்டுகோள் விடுத்துள்ளது.

Post a Comment

Previous Post Next Post