அரசியலமைப்பின் 19ஆவது திருத்தம் நிறைவேற்றப்பட்டதன் பின்னர் தனது பதவிக்காலம் ஆரம்பித்து முடிவடையும் தினம் தொடர்பில் உச்சநீதிமன்றத்திடம் வியாக்கியானத்தைக் கோருவது பற்றி ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஆராய்ந்து வருவதாகத் தெரியவருகிறது.
இதன் ஊடாக தனது பதவிக்காலம் முடிவடையும் சரியான தினத்தை, அவர் அறிந்துகொள்ளவிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
19ஆவது திருத்தச்சட்டமூலம் பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட பின்னர் 2015 மே 15ஆம் திகதியே சபாநாயகர் கரு ஜயசூரிய தனது கையொப்பத்தையிட்டு அதனை உறுதிப்படுத்தியிருப்பதாக ஜனாதிபதியின் சட்ட ஆலோசகர்கள் சுட்டிக்காட்டியிருப்பதாக ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.
தேசிய தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய, மைத்திரிபால சிறிசேனவை ஜனாதிபதியாக அறிவித்த 2015 ஜனவரி 8ஆம் திகதி அவருடைய ஆட்சிக்காலம் ஆரம்பித்தாலும், 19ஆவது திருத்தம் நிறைவேற்றப்பட்ட பின்னரான திகதியிலிருந்தே பதவிக்காலம் குறைக்கப்பட்டுள்ளது என்றும் அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
அரசியலமைப்புக்கு அமைய ஆறு வருடகால பதவிக்காலத்துக்கே அவர் ஜனாதிபதியாகத் தெரிவுசெய்யப்பட்டார். எனினும், 19ஆவது திருத்தத்தின் பின்னரே அவருடைய பதவிக்காலம் ஐந்து வருடங்களாகக் குறைக்கப்பட்டது. தனது பதவிக்காலம் 2015ஆம் ஆண்டு ஜனவரி 8ஆம் திகதியிலிருந்து ஆறு வருடங்களா என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உச்சநீதிமன்றத்தின் வியாக்கியானத்தைக் கேட்டிருந்தார். எனினும், ஐந்து வருடங்களே அவருடைய பதவிக்காலம் என அறிவித்திருந்தது. அப்போதைய பிரதம நீதியரசர் பிரியசாத் டெப் தலைமையிலான ஐவர் அடங்கிய நீதியரசர்கள் குழு இந்த வியாக்கியானத்தை வழங்கியிருந்தது. ஆறு வருடங்களுக்குத் தெரிவுசெய்யப்பட்ட ஜனாதிபதியின் பதவிக்காலத்தை ஐந்து வருடங்களாகக் குறைப்பதற்கான அதிகாரம் பாராளுமன்றத்துக்கு இல்லையென ஜனாதிபதியின் ஆலேசாகர்கள் ஜனாதிபதிக்குச் சுட்டிக்காட்டியுள்ளனர். சர்வஜன வாக்கெடுப்பு நடத்தப்படாமல் அவ்வாறு பதவிக்காலத்தைக் குறைக்க முடியாது. 19ஆவது திருத்தச்சட்டமூலம் நிறைவேற்றப்பட்டபோதும் 2015 மே 15ஆம் திகதியே சபாநாயகர் அதில் கையொழுத்திட்டுள்ளார். அதற்கமைய ஜனாதிபதியின் பதவிக்காலம் 2020 மே 15ஆம் திகதியே முடிவடைகிறது என அவர்கள் குறிப்பிடுகின்றனர்.
ஜனாதிபதி தனிப்பட்ட விஜயத்தை மேற்கொண்டு வெளிநாடு செல்வதால் நாடு திரும்பியதும் உச்சநீதிமன்றத்தின் வியாக்கியானத்தைக் கோரவிருப்பதாகவும் தெரியவருகிறது.
இது தொடர்பில் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் செயலாளர் தயாசிறி ஜயசேகரவிடம் வினவியபோது, ஜனாதிபதியின் பதவிக்காலம் தொடர்பில் மாறுபட்ட கருத்துக்கள் நிலவி வருகிறது. இப்பிரச்சினையைத் தீர்ப்பதாயின் ஜனாதிபதி உச்சநீதிமன்றத்தை நாடவேண்டிய தேவை உள்ளது. ஜனாதிபதியின் பதவிக்காலம் தொடர்பில் பல்வேறு தினங்கள் கூறப்படுகின்றன. இருந்தபோதும் உச்சநீதிமன்றத்தை நாடுவது தொடர்பில் ஜனாதிபதி சுதந்திரக்கட்சிக்குள் எந்தவித கலந்துரையாடலையயும் நடத்தவில்லையென்று குறிப்பிட்டார்.
Post a Comment