கல்முனை விவகாரத்தில் சாதகமான பதில் வழங்கப்படாவிட்டால் கூட்டமைப்பு அரசுக்கு எதிராக வாக்களிக்கும் என அழுத்தம் திருத்தமாக கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.
இதனையடுத்து, குறித்த விடயம் தொடர்பில் முறைப்படியான நடவடிக்கைகளை உடன் ஆரம்பிப்பதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க கூட்டமைப்பிற்கு வாக்குறுதியளித்தார்.
அரசாங்கத்திற்கு எதிராக மக்கள் விடுதலை முன்னணி கொண்டு வந்திருந்த நம்பிக்கையில்லா பிரேரணை நேற்று முன்தினம் நாடாளுமன்றில் வாக்கெடுப்பிற்கு விடப்பட்டிருந்தது.
இந்த அவநம்பிக்கை பிரேரணை 27 மேலதிக வாக்குகளால் தோற்கடிக்கப்பட்டது. இதன்போது பிரேரணைக்கு 92 பேர் ஆதரவாகவும் எதிராக 119 பேரும் வாக்களித்தனர். தமிழ் தேசிய கூட்டமைப்பு அரசாங்கத்திற்கு ஆதரவாக வாக்களித்திருந்தது.
இந்நிலையில், நம்பிக்கையில்லா பிரேரணைக்கு ஆதரவாக வாக்களிப்பதற்காக உறுதியான உத்தரவாதங்கள் தேவையென கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் வலியுறுத்தினர்.
இதனடிப்படையில், ரணில் விக்ரமசிங்க, கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் இடையில் சந்திப்பொன்று நடந்தது. இதன்போது நிதியமைச்சர் மங்கள சமரவீர, உள்நாட்டலுவல்கள் அமைச்சர் வஜிர அபேவர்த்தனவும் உடனிருந்தனர்.
இந்த சந்திப்பின் போது கல்முனை விவகாரம் முக்கிய இடம்பிடித்திருந்தது. அந்த வகையில், முறைப்படியான நடவடிக்கைகள் மேற்கொண்டு, கணக்காளரை நியமிப்பதற்கு இதன்போது வாக்களிக்கப்பட்டது.
அத்துடன் அமைச்சின் செயலாளர்களிற்கும், கணக்காளர் நியமிக்கப்பட வேண்டியுள்ளதை அறிவித்தார். கணக்காளர் நியமிக்கப்பட்டு கல்முனை பிரதேச செயலகத்திற்கு தனியான வங்கிக்கணக்கு ஆரம்பிப்பதற்கு திறைசேரி செயலாளரின் அனுமதி தேவையாக இருந்தது.
நேற்று முன்தினம் மாலை 6 மணிக்கு மங்கள சமரவீர அதற்கான அனுமதியை பெற்றுக் கொடுத்தார். இதேவேளை, கல்முனை விவகாரத்திற்கு தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வந்த முஸ்லிம் காங்கிரசின் ஹரீஷ் எம்.பியும் பிரதமர் செயலகத்திற்கு அழைக்கப்பட்டிருந்தார்.
முஸ்லிம் பிரமுகர்கள் அடங்கிய குழுவொன்றுடன் அவர் வந்திருந்தார். அந்த குழுவுடனும் பேச்சு நடத்தப்பட்டு, கல்முனை வடக்கு பிரதேச செயலகத்திற்கு கணக்காளரை நியமிக்க அவர்களின் ஆதரவும் பெறப்பட்டது.
முதற்கட்டமாக கணக்காளரை நியமித்து, அடுத்த கட்டமாக எல்லை நிர்ணயத்தை மேற்கொள்ள தீர்மானிக்கப்பட்டுள்ளது. மேலும் இரண்டு விடயங்களில் கூட்டமைப்பின் நிபந்தனைகள் இந்த சந்திப்பின் போது நிறைவேற்றப்பட்டுள்ளன.
கன்னியா வெந்நீர் ஊற்றில் இன்று (நேற்று) பிள்ளையார் ஆலயம் இடிக்கப்படுவதாக வெளியான செய்தியை பிரதமரிடம் குறிப்பிடப்பட்டது.
இதையடுத்து, தொலைபேசி வழியாக அந்த பணிகளை உடனடியாக நிறுத்தும் படி பிரதமர் உத்தரவிட்டார்.
ஓமந்தையில் சிங்கள பகுதிகளை உள்ளடக்கி தனியான சிங்கள பிரதேச செயலகத்தை அமைக்க அரசாங்கம் நடவடிக்கையெடுத்து வந்தது.
அதை உடனடியாக நிறுத்தும் படி கூட்டமைப்பு வலியுறுத்தியது. உடனடியாக அந்த பணிகளையும் நிறுத்துவதற்கு பிரதமர் உடன்பட்டார்.
இந்நிலையிலேயே, தமிழ் தேசியக் கூட்டமைப்பு அரசாங்கத்திற்கு ஆதரவாக வாக்களித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
Post a Comment