தமிழ் மக்களுக்காக உண்ணாவிரதம் இருந்து தமிழ் மக்களுடைய மனதை வென்றவர் நீங்கள் என புகழாரம் சூட்டினார் முன்னாள் நீதியரசரும் தமிழ் மக்கள் கூட்டணியின் செயலாளர் நாயகமுமான சி.வி.விக்னேஸ்வரன்.
செவ்வாய்க்கிழமை(23) அம்பாறை மாவட்டத்திற்கு விஜயம் செய்த நிலையில் கல்முனை வடக்கு உப பிரதேச செயலகத்தை தரமுயர்த்த கோரி உண்ணாவிரதம் மேற்கொண்டிருந்த கல்முனை சுபத்திரா ராமய விகாராதிபதி ரன்முத்துகல சங்கரத்ன தேரரை சந்தித்த வேளை மேற்கண்டவாறு கூறினார்.
இச்சந்திப்பு கல்முனையில் அமைந்துள்ள சுபத்திரா ராமய விகாரை வளாகத்தில் இடம்பெற்றதுடன் சுமார் 1 மணி நேரம் இடம்பெற்றது.
இதன் போது கல்முனை சுபத்திரா ராமய விகாராதிபதி ரன்முத்துகல சங்கரத்ன தேரர் சிங்கள மகா வித்தியாலய நிலைமை தற்போது மோசமாக இருப்பதாக கூறியதுடன் கிழக்கில் விதவை பெண்களின் வாழ்வாதாரம் இளைஞர் யுவதிகளின் வேலைவாய்ப்பு வேலையற்ற பட்டதாரிகளின் பிரச்சினை கல்முனை உப பிரதேச செயலக பிரச்சினைகள் உள்ளிட்டவைகளை ஆழமான விளக்கத்துடன் முன்வைத்தார்.
இதனை செவிமடுத்த முன்னாள் முதல்வர் சி.வி விக்னேஸ்வரன் மதிப்பிற்குரிய சங்கரத்ன தேரர் நன்றாகத் தமிழ் பேசக் கூடியவர் என்ற வகையில் இப்பகுதி மக்களின் பிரச்சினைகளை ஆழமாக புரிந்து கொண்டுள்ளதை வரவேற்பதாகவும் சிங்கள மகா வித்தியாலம் தொடர்பாக உரிய நடவடிக்கைகளை மேற்கொள்வதாகவும் அங்கு சகல விதமான இன மத மொழிசார் பிள்ளைகள் அப்பாடசாலையில் கல்வி கற்கின்ற படியினால் உரிய தரப்பினரிடம் தெரியப்படுத்துவதாகவும் குறிப்பிட்டார்.
மேலும் அப்பகுதி மக்களின் குறைநிறைகளை கேட்டறிந்து கொண்டதுடன் எதிர்காலத்தில் சகல வளங்களுடன் அப்பிரதேசங்களை அபிவிருத்தி அடைய முயற்சிகளை மேற்கொள்வதாக தெரிவித்தார்.
Post a Comment