முஸ்லிம் சமூகத்தின் நலனுக்காக குரல் கொடுக்கும் அனைவரும் சஹ்ரான்வாதிகளாக குறிவைக்கப்பட்டு, அவர்களை அடையாளப்படுத்துகின்ற ஒரு அபாயகரமான சூழ்நிலையை முஸ்லிம் சமூகம் இன்று எதிர் நோக்கியுள்ளது என சிரேஷ்ட சட்டத்தரணி எம்.எம்.பஹீஜ் தெரிவித்தார்.
‘எதிர்காலம்’ எனும் தலைப்பிலான கலந்துரையாடல் ஒன்று அக்கரைப்பற்றில் நேற்று முன்தினம் இரவு இடம்பெற்றது. இந்நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
இன்று முஸ்லிம் சமூகத்தினுடைய மத கலாசார விடயங்கள், பொருளாதாரம், கல்வி, பாதுகாப்பு, காணி உரிமைகள், நிர்வாக அதிகார எல்லைகள் தொடர்பில் பேசுகின்ற அனைவரும் குறிவைக்கப்பட்டு எல்லா வகையிலும் முஸ்லிம்கள் எதிரியாக சித்திரிக்கப்படுகின்ற ஒரு அபாயகரமான சூழ்நிலையை முஸ்லிம் சமூகம் தற்போது இலங்கையில் எதிர்கொண்டுள்ளது.
தமிழ் சமூகத்தின் உரிமைப் போராட்டத்திற்காக தமிழ் இயக்கங்கள் ஆயுதமேந்தி போராடிய போது, தமிழ் சமூகம் பொது எதிரிகளாகப் பார்க்கப்பட்டு பல்வேறுபட்ட சொல்லொணா துயரங்களை அனுபவித்து வந்தது. இன்று அந்த நிலை மாறி முஸ்லிம் சமூகத்தை குறிவைத்து பொது எதிரிகளாகப் பார்க்கப்படும் அபாயம் தோற்றம்பெற்று வருகின்றது.
இலங்கையுடைய எதிர்காலம் இன்று கேள்விக்குறியாக உள்ளது. சர்வதேச சக்திகள் மூலம் தீர்மானிக்கப்படவிருக்கின்ற ஒரு சூழ்நிலையில், இலங்கையில் வாழுகின்ற முஸ்லிம் சமூகம் இன்று பொது எதிரியாக குறித்துக்காட்டப்படுகின்றது. இவ்வாறு முஸ்லிம் சமூகத்தை பொது எதிரியாக அடையாளம் காட்டி அடக்கி ஒடுக்குவதற்கு எத்தனிக்கப்படுகின்றது.
எதிர்வரும் காலம் தேர்தல் காலமாக அமையப் போகின்றது. இத்தேர்தல்களில் முஸ்லிம்களின் அரசியல் பலம் பரீட்சிக்கப்படவிருக்கின்றது. நாங்கள் சுயாதீனமாக உரிமைகள் சார்ந்து எங்களுடைய முடிவுகளை எடுக்கப் போகின்றோமா? அல்லது வன்முறைகளுக்கும், அடக்கு முறைகளுக்கும் பயந்து நாங்கள் எங்களுடைய முடிவுகளை எடுக்கப் போகின்றோமா? என்ற கேள்வி இருக்கின்றது.
இலங்கையில் இருப்பது முஸ்லிம் தனியார் சட்டமாகும். அதனை சிலர் ஷரீஆ சட்டமென விளக்கமில்லாமல் கூறுகின்றனர். இந்த முஸ்லிம் சட்டமானது 1800 ஆம் ஆண்டு காலப்பகுதியில் இலங்கையில் வாழ்ந்த முஸ்லிம்கள் தங்களுடைய விடயங்களை தீர்மானித்துக் கொள்வதற்காக அவர்களுக்கிடையில் பயன்படுத்திய வளர்ப்பு முறைகளில் அடிப்படையாக வைத்து தயாரிக்கப்பட்ட சட்டமாகும். அதிலும் குறைபாடுகள் உள்ளன. திருத்தங்கள் தேவைப்படுகின்றன. அது முழுமைபெற்ற சரியான சட்டம் அல்ல என்பதை புரிந்துகொள்ள வேண்டும்.
இவ்வாறான பிரச்சினைகளை எதிர்கொள்ளும் வகையில் சமூக, அரசியல், சட்ட ரீதியில் எங்களுடைய சமூகம் சார்ந்த ஏனைய செயற்பாடுகள் ஊடாக நாங்கள் உழைக்க வேண்டி இருக்கின்றது என்றார்.
Post a Comment