ஐக்கிய தேசியக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் மற்றும் அக்கட்சியைப் பிரதானமாகக் கொண்ட புதுக் கூட்டமைப்பு தொடர்பில் எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் உத்தியோகபூர்வமாக அறிவிக்க ஐ.தே.க. தீர்மானித்துள்ளது.
நேற்று அலரி மாளிகையில் ஐ.தே.மு.வில் அங்கம் வகிக்கும் கூட்டுக் கட்சிகளுடன் இடம்பெற்ற விஷேட கலந்துரையாடலை அடுத்து இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
ஐ.தே.மு.வின் கூட்டுக் கட்சிகளின் கூட்டம் நேற்று அலரி மாளிகையில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையில் நடைபெற்றது. இதில் ஐ.தே.க.வை பிரதிநிதித்துவம் செய்து, அமைச்சர்களான ரவி கருணாநாயக்க, ராஜித்த சேனாரத்ன, அகில விராஜ் காரியவசம், மலிக் சமரவிக்ரம மற்றும் மங்கள சமரவீர ஆகியோர் பங்கேற்றனர்.
ஐ.தே.மு. கூட்டணியில் அங்கம் வகிக்கும் கூட்டணிக் கட்சிகள் சார்பில், தமிழர் முற்போக்கு கூட்டணியின் தலைவர் மனோ கணேசன், பிரதித் தலைவர் திகாம்பரம், அமைச்சர் சம்பிக்க ரணவக்க, மு.கா. தலைவர் ரவூப் ஹக்கீம், அ.இ.ம.கா. தலைவர் ரிஷாத் பதியுதீன் ஆகியோர் பங்கேற்றனர்.
இதன்போது நடப்பு அரசியல் விவகாரம் மற்றும் நாட்டு நிலைமை தொடர்பில் விரிவாக ஆராயப்பட்டுள்ளது. இதன்போதே எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலை எதிர்கொள்வது தொடர்பில் கலந்துரையாடப்பட்டுள்ளது.
ஜனாதிபதித் தேர்தல் தொடர்பில் அமைக்கப்படவுள்ள பரந்த பொதுக் கூட்டமைப்பு தொடர்பில் நீண்ட கலந்துரையாடல்கள் இடம்பெற்றுள்ளதுடன் அதன் சின்னம், ஜனாதிபதி வேட்பாளர் தொடர்பிலும் அவதானம் செலுத்தப்பட்டுள்ளது.
இந் நிலையிலேயே பொதுக் கூட்டமைப்பு மற்றும் ஜனாதிபதி வேட்பாளரை எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் அறிவிப்பது என முடி வெடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Post a Comment