மட்டக்களப்பு பல்கலைக்கழகத்தை அரசாங்கத்தின் கீழ் கொண்டுவர வேண்டுமென பாராளுமன்ற துறைசார் மேற்பார்வைக்குழு அரசாங்கத்துக்கு பரிந்துரை செய்துள்ளபோதும் அமைச்சரவை உபகுழு அதனை பட்டப்படிப்பு சான்றிதழ் வழங்கும் தனியார் நிறுவனமாக நடத்த ஹிஸ்புல்லாஹ்வுக்கே வழங்க பரிந்துரை செய்ய தீர்மானித்திருப்பதாகத் தெரியவருகின்றது. அதனால் அதுதொடர்பாக பாராளுமன்றத்தில் ஒரு நாள் விவாதம் ஒன்றை கோரவிருக்கின்றோமென மக்கள் விடுதலை முன்னணி பாராளுமன்ற உறுப்பினர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார்.
மக்கள் விடுதலை முன்னணி கட்சி காரியாலயத்தில் நேற்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார்.
அவர் அங்கு தொடர்ந்து தெரிவிக்கையில்,
கிழக்கு மாகாணத்தில் அமைந்துள்ள பல்கலைக்கழகம் சட்டவிரோதமானது. அது ஆரம்பிக்கும்போது இளைஞர்களுக்கு இலவசமாக தொழில் பயிற்சி வழங்க கட்டடம் அமைக்க மகாவலிக்கு சொந்தமான 35ஏக்கர் காணி குத்தகை அடிப்படையில் பெறப்பட்டிருந்தது. பின்னர் அந்தக் காணி தனியார் பல்கலைக்கழகம் அமைக்கவெனத் தெரிவித்து பணம்கொடுத்து வாங்கப்பட்டிருக்கின்றது. இதனால் காணி வாங்கப்பட்ட நோக்கத்தை பின்னர் மாற்றியமைத்து பல்கலைக்கழகம் அமைக்க எடுத்த நடவடிக்கையானது சட்டவிரோதமானதாகும். பல்கலைக்கழகம் ஒன்றை அமைப்பதாக இருந்தால் அதற்கு பின்பற்றவேண்டிய விடயங்கள் இருக்கின்றன.
அத்துடன் இந்தக் கட்டடத்தை அமைக்க பிரதேச செயலகத்தின் அனுமதி பெறப்படவில்லை. பிரதேச செயலகத்தின் அனுமதி பெறாமல் இதனை எவ்வாறு அமைக்க முடியும். இதற்கு யார் அனுமதி வழங்கினார்கள். அத்துடன் அரச சார்பற்ற நிறுவனம் ஒன்றினால் இது அமைக்கப்படுவதாக இருந்தால் அந்த நிறுவனம் பதிவு செய்யப்படவேண்டும். ஆனால் இந்த பல்கலைக்கழகத்தை அமைத்த ஹிரா பவுண்டேஷனே அரச சார்பற்ற நிறுவனமாக பதிவு செய்யப்பட்டதில்லை.
மேலும் இந்த நிறுவனம் எந்த நோக்கத்தில் ஆரம்பிக்கப்பட்டதோ அந்த நோக்கத்தை மாற்றி அடிப்படைவாதக் கொள்கையை வளர்க்கவே நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இந்த நிறுவனத்துக்கு பணம் வந்த இடங்களை பார்க்கும்போது அதனை உணர்ந்துகொள்ள முடிகின்றது. அதன் பாடநெறிகளும் அவ்வாறே அமைந்திருக்கின்றன. அதனால் இதற்கு அனுமதி வழங்கினால் எதிர்காலத்தில் தமிழ் புலம்பெயர் அமைப்புக்களும் பணம் அனுப்பி தமிழ் அடிப்படைவாத பல்கலைக்கழகங்கள் அமைக்க இடமிருக்கின்றது.
அதனால்தான் இந்த பல்கலைக்கழகம் தொடர்பாக ஆராய்ந்த பாராளுமன்ற துறைசார் மேற்பார்வைக்குழு, இதனை அரசாங்கம் முற்றாகப் பொறுப்பேற்று அந்தக் கட்டிடத்தை சுற்றுலா கல்வி போதிக்கும் மத்திய நிலையமாக மாற்றியமைக்க பரிந்துரை செய்தது. என்றாலும் இதுதொடர்பாக அமைச்சரவையில் கருத்து முரண்பாடுகள் ஏற்பட்டபோது அதுதொடர்பாக ஆராய்ந்து 6மாதத்துக்குள் இறுதி அறிக்கை சமர்ப்பிக்க உபகுழுவொன்று அமைக்கப்பட்டுள்ளது.
என்றாலும் இந்த அமைச்சரவை உபகுழு மட்டக்களப்பு பல்கலைக்கழகத்தை எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ்வுக்கே வழங்கி, பட்டப்படிப்பு சான்றிதழ் வழங்கும் தனியார் நிறுவனமாக அனுமதியளிக்க சிபார்சு செய்துள்ளதாகத் தெரியவருகின்றது. அரசாங்கத்தின் இந்த நடவடிக்கையை ஏற்றுக்கொள்ள முடியாது. அதனால் பல்கலைக்கழகம் தொடர்பில் பாராளுமன்ற துறைசார் மேற்பார்வை குழுவின் அறிக்கை தொடர்பில் ஒருநாள் விவாதம் நடத்தப்பட வேண்டுமென அடுத்த கட்சித் தலைவர்கள் கூட்டத்தின்போது மக்கள் விடுதலை முன்னணி கோர இருக்கின்றது என்றார்.
Post a Comment