இஸ்லாமியர்களுக்கான சட்டமான ஷரியா சட்டத்தில் மாற்றங்களை செய்ய எவருக்கும் இடமளிக்க போவதில்லை என மேல் மாகாண முன்னாள் ஆளுநர் அசாத் சாலி தெரிவித்துள்ளார்.
கொழும்பில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனை கூறியுள்ளார்.
மேலும் கூறுகையில், ஷரியா சட்டம் குறித்து புரிந்து கொள்ள வேண்டும்.
அதனை தவறாக புரிந்து கொள்ளக் கூடாது. அந்த சட்டம் என்பது முஸ்லிம் மக்களுக்குரிய சட்டம். அதனை வேறு இனத்தவர்களுக்கு அமுல்படுத்துவதில்லை. அந்த சட்டம், வேறு எவரையும் பாதிக்காது.அந்த சட்டத்தை நாங்கள் பின்பற்ற வேண்டுமே அன்றி, அரசாங்கமோ, அமைச்சர்களோ பின்பற்ற வேண்டிய சட்டமல்ல.
இதனால், ஷரியா சட்டத்தில் கைவைக்க நாங்கள் இடமளிக்க மாட்டோம். மருத்துவர் சேகு சிஹாப்தீன் மொஹமட் ஷாபிக்கு எதிராக குருணாகல் நகரசபை ஊழியர்களை பயன்படுத்தி ஆர்ப்பாட்டம் நடத்தியுள்ளனர்.
அத்துடன் பெண்களின் கர்ப்பப்பையின் பலோப்பியன் குழாய் தொடர்பான நிபுணராக நாடாளுமன்ற உறுப்பினர் அத்துரலியே ரதன தேரர் மாறியுள்ளார்.பலோப்பியன் குழாய் எப்படி முறுக்கப்பட்டது என்பதை அவர் அறிவார். அத்துடன் விமல் வீரவங்ச பலோப்பியன் சம்பந்தமான விடயத்தில் பி.எச்.டி பட்டம் பெற்றுள்ளார்.மிகப் பெரிய பண்டிதரான உதய கம்மன்பில, மருத்துவர் ஷாபியை தூக்கிலிட்டு கொல்ல வேண்டும் என்கிறார்.
என்ன செய்ய வேண்டும் என்பதை நீதிமன்றம் தீர்மானிக்கும் முன்னர், அனைவரும் அதனை தீர்மானித்து விட்டனர்.இதனால், நீதிமன்றத்தினால் வழக்கொன்றை நடத்தி செல்ல முடியாத நிலைமை ஏற்பட்டுள்ளது. அரசாங்கம் அப்பாவி மக்களை கடந்த மூன்று மாதங்களாக தடுத்து வைத்துள்ளது.
அவர்களை விடுதலை செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும். அவர்களை விடுதலை செய்ய முடியாதவர்கள் மீது இடி விழும். அத்துரலியே ரதன தேரரை ஏன் கைது செய்ய முடியாது.
அவர் வரலாறு முழுவதும் அரசாங்கங்களுக்கு தவறு செய்துள்ளார் எனவும் அசாத் சாலி குறிப்பிட்டுள்ளார்.
Post a Comment