குருநாகல் போதனா வைத்தியசாலையின் சிரேஷ்ட வைத்தியர் சேகு சிஹாப்தீன் மொஹம்மட் ஷாபி விவகாரத்தின் பின்னணியில், அந்த வைத்தியசாலையின் பணிப்பாளர் வைத்தியர் சரத் வீரபண்டார உள்ளதாக சந்தேகிப்பதாகவும், அது தொடர்பில் உரிய விசாரணையொன்றை முன்னெடுத்து நியாயத்தைப் பெற்றுத்தருமாறு கோரி பதில் பொலிஸ்மா அதிபருக்கு முறைப்பாடொன்று அளிக்கப்பட்டுள்ளது.
வைத்தியர் சேகு சிஹாப்தீன் மொஹம்மட் ஷாபியின் மனைவியான, 42 வயதுடைய குருநாகல் வைத்தியசாலையின் வைத்தியர் மொஹம்மட் நஸீர் பாத்திமா இமாரா இந்த முறைப்பாட்டைப் பதிவு செய்துள்ளதாக பொலிஸ் தலைமையகம் விடிவெள்ளிக்குத் தெரிவித்தது.
சட்டத்தரணி எம்.என்.எம்.ஷைனாஸ் மற்றும் ஆர்.எம்.இன்ஷான் ஆகியோருடன் பொலிஸ் தலைமையகத்துக்கு சென்றுள்ள வைத்தியர் பாத்திமா இமாரா, பொலிஸ்மா அதிபரின் நிவாரணப் பிரிவில் எழுத்துமூலம் இம்முறைப்பாட்டை பதிவு செய்துள்ளதுடன், அம்முறைப்பாட்டுடன் அதுகுறித்த சாட்சியாக ஆவணங்கள் சிலவற்றையும் இணைத்துக் கொடுத்துள்ளதாக அறியமுடிகின்றது. நேற்று முன்தினம் பதிவு செய்யப்பட்டுள்ள இந்த முறைப்பாடு தொடர்பில், பதில் பொலிஸ்மா அதிபர் சி.டி. விக்ரமரத்ன அவதானம் செலுத்தியுள்ள நிலையில், அதனை பொருத்தமான விசாரணைப் பிரிவொன்றிடம் கையளிக்க இன்று அல்லது நாளை நடவடிக்கை எடுக்கப்படலாம் என பொலிஸ்மா அதிபருக்கு நெருக்கமான வட்டாரங்கள் ஊடாக அறிய முடிகின்றது.
இலக்கம் 6/1, வீரசிங்க மாவத்தை, குருநாகல் எனும் முகவரியில் வசிக்கும் தனக்கோ அல்லது தனது கணவரான வைத்தியர் ஷாபிக்கோ குருநாகல் போதனா வைத்தியசாலையின் பணிப்பாளருடன் எந்த தனிப்பட்ட குரோதங்களும் தான் அறிந்தவரை இல்லையென முறைப்பாட்டில் சுட்டிக்காட்டியுள்ள வைத்தியர் பாத்திமா இமாரா, தனது கணவருக்கு எதிராக மிகப் பாரதூரமான குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்ட நிலையில், அது குறித்த விசாரணைகளுக்கு பணிப்பாளர் சரத் வீரபண்டார பல வகையிலும் இடையூறு ஏற்படுத்தியுள்ளதாக சுட்டிக்காட்டியுள்ளார். வைத்தியசாலைக்கு உள்ளேயும் வெளியேயும், குற்றப் புலனாய்வுப் பிரிவின் விசாரணைகளுக்கும் அவரால் இடையூறு ஏற்படுத்தப்பட்டுள்ளதாக வைத்தியர் பாத்திமா இமாராவின் முறைப்பாட்டில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
அத்துடன் அந்த முறைப்பாட்டில், வைத்தியசாலைப் பணிப்பாளர் நீதிமன்றில் சுயேச்சையாக ஆஜராகி தனது கணவருக்கு எதிராகப் பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்ததாகவும், அவை அத்தனையும் பொய்யென விசாரணைகளில் தெரியவந்துள்ள நிலையில், தனது கணவருக்கு எதிராக கருத்தடை குற்றச்சாட்டு உள்ளிட்ட இந்த சோடிக்கப்பட்ட விவகாரத்தின் பின்னணியில் வைத்தியசாலை பணிப்பாளர் சரத் வீரபண்டாரவே உள்ளதாகத் தாம் சந்தேகிப்பதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.
VV
Post a Comment