தீவிரவாத குழுக்கள் மற்றும் உள்நாட்டு மத அடிப்படைவாதக் குழுக்களின் அச்சுறுத்தலை கண்காணிப்பதற்கும், எதிர்கொள்வதற்குமாற சிறப்பு பிரிவு ஒன்று உருவாக்கப்படவுள்ளது.
சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவின் உத்தரவுக்கு அமைய, பாதுகாப்பு அமைச்சின் கீழ் இந்த சிறப்பு கண்காணிப்பு பிரிவு அமைக்கப்படவுள்ளதாக மூத்த இராணுவ அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
இந்த சிறப்புப் பிரிவுக்கு பொறுப்பாக, மேஜர் ஜெனரல் தர்ஷன ஹெற்றியாராச்சி நியமிக்கப்பட்டுள்ளார். யாழ். படைகளின் தளபதியாக இருந்த இவர், இந்தப் புதிய பதவியை பொறுப்பேற்றுக் கொள்வதற்காக கொழும்புக்கு மாற்றப்பட்டுள்ளார்.
சிறிலங்கா இராணுவம், கடற்படை மற்றும் விமானப்படையைச் சேர்ந்த சுமார் நூற்றுக்கும் அதிகமான சிறப்புப் பயிற்சி பெற்றவர்கள், மதிப்பீடுகளைச் செய்வதற்கும், எதிர் நடவடிக்கைகளை எடுப்பதற்கும் இந்தப் பிரிவுக்கு நியமிக்கப்படவுள்ளனர் என, மேஜர் ஜெனரல் தர்ஷன ஹெற்றியாராச்சி தெரிவித்துள்ளார்.
இந்த சிறப்பு பிரிவுக்கான அதிகாரங்கள் தொடர்பான அரசிதழ் அறிவிப்பு விரைவில் வெளியிடப்படவுள்ளது.
ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல்களை அடுத்து, இந்த சிறப்பு பிரிவு உருவாக்கப்படவுள்ளது.
Post a Comment