எத்தகைய காரணமுமின்றி பொலிஸார் தன்னைக் கைது செய்து, பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் தடுத்து வைத்துள்ளமையால் தனது அடிப்படை உரிமை மீறப்பட்டுள்ளதாகவும் அதனால் தன்னை உடனடியாக விடுவிக்கக்கோரியும் குருநாகல் போதனா வைத்தியசாலையின் பிரசவ வைத்திய நிபுணர் மொஹம்மட் ஷாபி கடந்த 25 ஆம் திகதி அடிப்படை உரிமை மீறல் மனுவொன்றை உயர் நீதிமன்றில் தாக்கல் செய்துள்ளார்.
ஆப்தீன் அசோஸியேட் சட்டத்தரணிகள் நிறுவனத்தின் ஊடாகவே மேற்படி மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. கருத்தடை சத்திரசிகிச்சை செய்துள்ளதாக தன் மீது போலிக்குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளமை சட்டவிரோதமானது என்றும் சிங்களப் பெண்களை மகப்பேற்றுக்கான அறுவைச் சிகிச்சை செய்யும் போது கர்ப்பத்தடை செய்துள்ளதாக முன்வைக்கப்பட்டுள்ள முறைப்பாடுகளை நிராகரிப்பதாகவும் குறிப்பிட்டுள்ள அம்மனுவில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது;
சாதாரணமாக மேற்படி அறுவைச் சிகிச்சையின் போது, குறிப்பிட்ட அறையில் ஆறு பேர்கள் கடமையில் இருப்பர். விடுதி வைத்தியதிகாரி, மேற்பார்வை வைத்தியதிகாரி, விடுதியின் சிரேஷ்ட வைத்தியதிகாரி, சிறுவர் நோயியல் மருத்துவத் தாதி, சிறுவர் நோய் மருத்துவ அதிகாரி, குடும்ப சுகாதார மருத்துவ தாதி ஆகிய ஆறு பேர்களுடன் சில சமயம் இதற்கு மேலும் உதவியாளர்கள் இருப்பர். சிரேஷ்ட வைத்திய நிபுணர் அறுவைச்சிகிச்சையில் ஈடுபடும் போது அவ்வறையிலுள்ள அனைவரும் கண்காணித்துக் கொண்டிருப்பர். எதிர்பாராத ஆபத்துகள் நிகழும்போது தாயினதும் சேயினதும் உயிரைக் காப்பாற்றுவதில் இவர்கள் அனைவரும் தம் அபரிமிதமான பங்களிப்பைச் செய்வர்.
சாதாரணமாக கருத்தடை அறுவையெனும் எல்.ஆர்.ரீ.சிகிச்சை மேற்கொள்ளும்போது, மகப்பேற்றுக்கான அறுவைச் சிகிச்சைக்கான நேரத்தை விடவும் 10–20 நிமிட நேரம் மேலதிகமாக எடுக்கும். பெலோபியன் குழாயைத் துண்டிப்பதற்கு அல்லது இறுகக்கட்டுவதற்கு (Clamping) சிசேரியன் சிகிச்சையின்போது பயன்படுத்தும் கருவிக்குப் புறம்பாக மேலதிகமாக (Clamp) கருவிகள் தேவைப்படுகின்றன. இவை மேலதிகமாக வேண்டப்படுவதோடு இவற்றை மருத்துவத்தாதியால் மாத்திரமே அறுவைச் சிகிச்சையில் ஈடுபடும் வைத்தியருக்கு கையளிக்க முடியும். இதற்காக அழைப்பு மணி எழுப்பியே குறித்த தாதியிடம் மேற்படி கருவி வரவழைக்கப் படுகிறது.
சாதாரணமாக சிசேரியன் சிகிச்சைத் தொகுதியில் இரண்டு (Clamp) கருவிகளே உள்ளன. இவையிரண்டையும் பொதுவாக தாதி அதிகாரியே வைத்திருப்பார். அவை குறிப்பிட்ட சிகிச்சையில் ஈடுபடும் டாக்டரிடம் ஒப்படைக்கப்படுவது குழந்தை பிரசவித்தவுடனேதான். காரணம் குழந்தையின் தொப்புள் கொடியை அகற்றவும் அதனை இறுகக்கட்டிக் கொள்ளவுமே அவை கையளிக்கப்படுகின்றன.
இதற்கு முன்னர் டாக்டருக்கு அக்கருவிகள் அவசியப்படுவதாயின் அவர் முன்னறிவித்தல் கொடுக்கவேண்டும். சிசேரியன் சிகிச்சை, தாயின் அடிவயிற்றைக் கீறுவதன் மூலமே ஆரம்பிக்கப்படுகிறது. அதனைத் தொடர்ந்து சிசுவின் தலைப்பாகமே முதலில் வெளியே எடுக்கப்படுகிறது. அதன்போது பெலோபியன் குழாய் மேலும் உள்ளே சென்று விடுகிறது. இச் சந்தர்ப்பத்தில் பொதுவாக பெலோபியன் குழாய் புலப்படாது போகிறது. இந்நிலையில் எவர் கண்களுக்கும் தெரியாமல் பெலோபியன் குழாயை மேலே எடுத்து Clamp கருவியைப் பிரயோகிக்க முடியாது. அவ்வாறு செய்யும் போது யாரும் கண்டுகொள்வர்.
இந்த சந்தர்ப்பத்தில் யாரும் பெலோபியன் குழாயை நசுக்கி அதனைச் சிதைவுறச் செய்வாராயின் அப்போது பெரிய குருதிப் பெருக்கெடுக்கும். இந்நிலையில் பத்துத் தினங்களுக்குள் தாய் நோய்க்கு இலக்காவார். இதனால் மீண்டும் சிகிச்சைக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கவேண்டிய நிலை உருவாகும். பெலோபியன் குழாய் நன்கு வழுக்கும் தன்மை கொண்டது. அதனைக் கையுறை அணிந்த நிலையில் நசுக்குவதென்பது சாத்தியமான தொன்றல்ல. அவ்வாறு செய்ய முனைந்தாலும் கை வழுக்கவே செய்யும்.
பெலோபியன் குழாயை நசுக்கி கர்ப்பத்தடை செய்வதென்பது வைத்தியத்துறை வரலாற்றிலே இல்லாததொன்றாகும்.
சிசேரியன் செய்யும் போதோ அல்லது செய்த பின்னரோ தாய்மார் பாதிப்புக் குள்ளானதாக முறைப்பாட்டாளருக்கெதிராக இதுவரையும் எத்தகைய முறைப்பாடுகளும் இல்லை. அத்துடன் குருநாகல் போதனா வைத்தியசாலையில் கடமையாற்றும் 69 மருத்துவத் தாதிகள் முறைப்பாடுகளுக்கெதிராக குற்றவியல் விசாரணைத் திணைக்களத்தின் முன் சாட்சியமளித்துள்ளனர்.
பொதுவாக நரம்பியல் நோய் வைத்திய நிபுணரின் ஆலோசனைக்கமையவே சிசேரியன் சிகிச்சை மேற்கொள்ளப்படுகிறது.
நரம்பியல் நோய் வைத்திய நிபுணர் பேராசிரியர் ஹேமன்த சேனாரத்ன ‘டெய்லிமிரர்’ பத்திரிகைக்கு கருத்துத் தெரிவிக்கும்போது, கர்ப்பத்தடை மேற்கொள்வதற்கான சாத்தியக் கூறு மிகவும் அரிதாக உள்ளதென்றே தெரிவித்துள்ளார்.
டாக்டர் ஷாபி நரம்பியல் வைத்திய நிபுணர் 9 பேருக்குக் கீழே பணியாற்றியுள்ள போதும் அவர்களில் எவரும் அவருக்கெதிராக எத்தகைய முறைப்பாடுகளும் தெரிவித்ததில்லை.
முறைப்பாடு சுமத்தப்பட்டுள்ளவரோடு சுமார் 200 சத்திர சிகிச்சைகளில் பங்களிப்புச் செய்துள்ள வைத்தியர்களில் ஒருவரான டாக்டர் ரத்னாயக்க மேற்படி முறைப்பாட்டை நிராகரித்துள்ளார்.
Post a Comment