உயிர்த்த ஞாயிறு குண்டுத் தாக்குதல்களுக்கு முஸ்லிம் மக்கள் பொறுப்புக் கூற வேண்டிய அவசியம் கிடையாது. முஸ்லிம் குழுவொன்றினால் இந்த உயிர்த்த ஞாயிறு குண்டுத் தாக்குதல்கள் மேற்கொள்ளப்பட்டது என்பதை என்னால் ஏற்றுக்கொள்ள முடியாது. சர்வதேச தலையீட்டினால் மேற்கொள்ளப்பட்ட தாக்குதல்களாகவே இதனை நான் நம்புகிறேன்.
சர்வதேச அரசியல் நிகழ்ச்சி நிரலுக்கு முஸ்லிம் மக்கள் பயன்படுத்தப்படுகிறார்கள். எனவே சர்வதேச அதிகார சக்திகளுக்காக அடிப்படைவாதத்தை நோக்கி பயணிக்காமல் உண்மையான இஸ்லாமிய மத போதனைகளை பாதுகாக்க சகல முஸ்லிம் மக்களும் ஒன்றுபட வேண்டும் என பேராயர் மெல்கம் கர்தினால் ரஞ்சித் ஆண்டகை வேண்டுகோள்விடுத்தார்.
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் இடம்பெற்று நேற்று ஞாயிற்றுக்கிழமையுடன் மூன்று மாதங்கள் பூர்த்தியாவதை முன்னிட்டு கொழும்பு – கொச்சிக்கடை புனித அந்தோனியார் தேவாலயம் மற்றும் கட்டுவாப்பிட்டி புனித செபஸ்தியார் தேவாலயம் ஆகியவற்றில் இடம்பெற்ற விஷேட ஆராதனைகளில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே பேராயர் மேற்கண்டவாறு சுட்டிக்காட்டினார்.
அவர் அங்கு மேலும் குறிப்பிடுகையில்,
முஸ்லிம் தலைவர்களிடமும் ஒரு கோரிக்கையை முன்வைக்கிறேன். இஸ்லாத்தில் குறிப்பிடப்பட்டுள்ள விடயங்களை திரிபுபடுத்தி அடிப்படைவாத செயற்பாடுகளில் ஈடுபடுபவர்கள் இனங்காணப்பட்டால் அவர்களை சமூகத்திலிருந்து முற்றாக ஒதுக்கிவிட வேண்டும். ஆயுதங்களை உற்பத்தி செய்யும் முஸ்லிம் நாடுகள் அவற்றை விற்பனை செய்வதற்காகவும் தமது தவறான கொள்கைகளை ஏனையோர் மீது திணிப்பதற்கும் அப்பாவி இளைஞர்களை பயன்படுத்துகின்றனர். இதற்கு உள்நாட்டில் இடமளிக்கப்படக் கூடாது என்பதே எமது எதிர்பார்ப்பாகும்.
சர்வதேச ஆயுத வியாபாரத்துக்கு எமது நாட்டை இலக்காக்கி விடக் கூடாது. சர்வதேசத்தின் தேவைகளுக்காக புலனாய்வுத்துறையை வலுவிழக்கச் செய்து சகல பிரச்சினைகளையும் தோற்றுவித்தார்கள். ஆகவே எவரும் முஸ்லிம் மக்களுக்கு எதிராக செயற்படக் கூடாது. அதேபோன்று முஸ்லிம் மக்கள் அவர்களின் மத போதனைகளையும் அவர்களின் சமூகத்தையும் பாதுகாப்பது அவசியமாகும்.
இந்த தற்கொலை குண்டுத் தாக்குதல் சம்பவங்களுக்கு அடிப்படையாக இருந்த சம்வங்கள் தொடர்பில் அரசாங்கம் எந்த கவனமும் செலுத்தவில்லை. மாவனெல்லை, வணாத்தவில்லு ஆகிய பிரதேசங்களில் இடம்பெற்ற பிரச்சினைகள் தொடர்பில் அரசாங்கம் ஆழ்ந்த கவனம் செலுத்தியிருந்தால் இந்த இழப்புகளை சந்திக்க நேர்ந்திருக்காது. நாட்டை கொண்டு செல்ல முடியாவிட்டால் அரசாங்கம் ஆட்சியை வேறு எவரிடமாவது கையளிக்க வேண்டும்.
விசாரணைகளில் நம்பிக்கையில்லை :
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் ஆராய்வதற்கு சுயாதீனமான உறுப்பினர்களைக் கொண்ட ஆணைக்குழுவொன்று நியமிக்கப்பட வேண்டும். ஏனெனில் இதற்கு முன்னர் நியமிக்கப்பட்ட ஆணைக்குழுவின் மீதோ அவற்றினால் முன்னெடுக்கப்பட்ட விசாரணைகள் மீதோ எவ்வித நம்பிக்கையும் எமக்கு இல்லை. இது தொடர்பில் ஆராய்வதற்காக நியமிக்கப்பட்ட ஆணைக்குழுவொன்றின் அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டதாகக் கூறப்படுகின்றது. ஆனால் எமக்கு இதுவரையில் எந்த தகவலும் கிடைக்கப் பெறவில்லை. அந்த அறிக்கையின் மூலப்பிரதியைக் கூட நாம் பார்க்கவில்லை.
இந்த தாக்குதல்கள் குறித்து நாட்டில் அரசியல் தலைவர்கள் யாரும் கவனத்தில் கொள்ளாததோடு நாட்கள் செல்லச் செல்ல இதனைப் புறந்தள்ளிவிட்டார்கள். இது குறித்த விசாரணைகள் எதுவுமே ஆக்கபூர்வமாக முன்னெடுக்கப்படவில்லை.
அரசியல் தலைமைகள் இந்த விடயத்தில் இன்னமும் ஒருவரை ஒருவர் குறைகூறிக் கொண்டிருக்காமல் அனைவரும் ஒன்றிணைந்து இதன்பின்னரும் இவ்வாறான அடிப்படைவாத தாக்குதல் இடம்பெறாமல் பார்த்துக் கொள்வதோடு நாட்டில் அமைதியையும் சட்ட ஒழுங்கையும் நல்லிணக்கத்தையும் நிலைநாட்ட வேண்டும் என்று கோரிக்கை விடுக்கின்றோம். இது போன்றதொரு பயங்கரவாதத் தாக்குதல் இலங்கையில் மாத்திரமல்ல. உலகில் எந்த நாட்டிலும் இடம்பெற்று விடக் கூடாது என்பதே எமது எதிர்பார்ப்பாகும்.
புலனாய்வுப் பிரிவின் பலவீனம் :
பலம் வாய்ந்த புலனாய்வுப்பிரிவு அரசியல் தேவைகளுக்காகவும், புலம்பெயர் அமைப்புகளுக்காகவும் தொடர்ந்து பலவீனப்படுத்தப்பட்டமையின் காரணமாகவே சர்வதேச தீவிரவாதம் மிக இலகுவாக தமது மிலேச்சத்தனமான தாக்குதலை முன்னெடுத்து தமது குறுகிய நோக்கத்தை வெற்றி கொண்டுள்ளது.
உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பில் முன்கூட்டியே தகவல்கள் கிடைக்கப் பெற்றிருந்தும் முறையான செயற்திட்டங்கள் முன்னெடுக்கப்படாததன் மூலம் புலனாய்வுப்பிரிவின் இயலாமை வெளிப்படுத்தப்பட்டுள்ளது. சர்வதேசத்தின் விருப்பிற்காக எமது நாட்டு அரசியல் தலைமைகள் புலனாய்வுப்பிரிவை செயற்படவிடாமல் தடுத்தமையே இதற்கான பிரதான காரணமாகும்.
புலனாய்வுப்பிரிவின் அதிகாரிகள் யாரேனும் தவறு செய்திருந்தால் அவர்களுக்கு தண்டனை வழங்கப்படுவது ஒரு புறம். ஆனால் அதற்காக முழு புலனாய்வுப் பிரிவையும் கட்டுப்படுத்தி அவர்களது செயற்பாடுகளை முடக்குவது தவறாகும். நாம் ஐரோப்பா மற்றும் அமெரிக்கா போன்ற நாடுகளுக்கு ஏற்றாற் போல வாழ வேண்டியதில்லை. அந்த நாட்டு தலைவர்களுக்கு ஏற்றாற் போல எமது நாட்டை ஆட்சி செய்யவும் இடமளிக்க முடியாது. புலனாய்வுப்பிரிவு பலப்படுத்தப்பட வேண்டும். குற்றவாளிகள் கண்டறியப்பட்டு தண்டனை வழங்கப்பட வேண்டும். மாறாக உண்மைகளை மறைக்கவோ குற்றவாளிகளை பாதுகாக்கவோ யாரும் முயற்சிக்கக் கூடாது.
அரசியல் அதிகார போட்டி :
தாக்குல்தல்கள் இடம்பெறுவதற்கு முன்னதாக இந்திய தூதரகத்தால் நாட்டில் குண்டுத் தாக்குதல்கள் இடம்பெறவுள்ளதாக தகவல்கள் வழங்கப்பட்டிருந்தன. அந்த தகவல்களினூடாக தாக்குதல்களை தடுத்து நிறுத்தியிருக்க முடியும். ஆயினும் துரதிஸ்டவசமாக, அரசியல் அதிகாரப் போட்டியில் இந்த குண்டுத் தாக்குதல்களை தடுத்து நிறுத்த நடவடிக்கை எடுக்க வில்லை.
தற்போது ஒவ்வொருவரும் வெவ்வேறு ஆணைக்குழுக்களை நியமித்து அவர்களுக்கு ஏற்றவாறு அறிக்கைகளை தயாரித்துக் கொள்கிறார்கள். கட்சிகளுக்கும், கட்சித் தலைவர்களுக்கும் ஏற்றவகையில் அறிக்கைகள் உருவாக்கப்படுகின்றன. எனவே இவை அனைத்தும் தேர்தல்களை அடிப்படையாகக் கொண்ட செயற்பாடுகளாகும்.
Post a Comment