அக்கரைப்பற்று தபால் நிலையம் மாத்திரம் இயங்குகிறது : ஏனையவை முடக்கம்

NEWS
0
கோரிக்கைகள் சிலவற்றை முன்வைத்து ஒன்றிணைந்த தபால் சேவைகள் தொழிற் சங்கத்தினால் முன்னெடுக்கப்பட்ட ஒரு நாள் சுகவீன விடுமுறைப் போராட்டத்தினால் தபால் சேவைகளை நாடி வந்த பொதுமக்கள் பல்வேறு அசௌகரியங்களுக்கு முகம் கொடுத்தனர்.

இவ்வேலை நிறுத்தப் போராட்டத்தின் காரணமாக அம்பாறை மாவட்டத்தில் உள்ள தபால் அலுவலகங்களின் சேவைகள் முடங்கிக் காணப்பட்டன.

அக்கரைப்பற்று பிரதேச அஞ்சல் அத்தியட்சகர் காரியாலயத்திற்குட்பட்ட பதின்மூன்று அஞ்சல் அலுவலகங்களில் அக்கரைப்பற்று அஞ்சல் அலுவலகம் தவிரந்த ஏனைய அஞ்சல் அலுவலகங்களிலும் ஐம்பத்து மூன்று உப அஞ்சல் அலுவலகங்களிலும் மக்களுக்கான அஞ்சல் சேவை இன்றைய தினம் வழமைபோல் இடம்பெறவில்லை என பிரதேச அஞ்சல் அத்தியட்சகர் பி.எம்.அசாருதீன் தெரிவித்தார்.

அட்டாளைச்சேனை, அக்கரைப்பற்று மத்தி, ஆலையடிவேம்பு, திருக்கோவில், பொத்துவில், கல்முனை, சாய்ந்தமருது, மருதமுனை, சம்மாந்துறை, நிந்தவூர், ஒலுவில், பாலமுனை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் உள்ள பிரதான அஞ்சல் அலுவலகங்கள் மற்றும் உப அஞ்சல் அலுவலகங்களின் சேவைகளுக்காக வருகை தந்த பொதுமக்கள் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனர். நீண்ட தூரத்திற்கப்பால் இருந்து தபால் அலுவலக சேவையினை நாடி வந்த பெண்கள், வயோதிபர்கள் போன்றோர் இப்பணிப் பகிஷ்கரிப்பினால் பல்வேறு அசௌகரியங்களைச் சந்தித்தனர்.

இதேவேளை அம்பாறை மாவட்டத்தில் உள்ள ஒரு சில தபால் அலுவலங்களில் குறிப்பிட்ட சேவைகள் சில இடம்பெற்றதனை அவதானிக்க முடிந்தது. அக்கரைப்பற்று பிரதான தபால் அலுவலகத்தின் சேவை வழமைபோல் இடம்பெற்றது. இருந்தபோதிலும் உத்தியோகத்தர்கள் சிலர் கடமைக்கு சமூகமளிக்காமையால் இங்கு மந்த கதியிலேயே சேவைகள் இடம்பெற்றன. வழமை போல் இடம்பெற்று வந்த அனைத்து சேவைகளும் இவ் அலுவலகத்தில் இடம்பெற்ற போதிலும் அவை மந்தகதியில் இடம்பெற்றதனை அவதானிக்க முடிந்தது.

கடந்த வருடம் ஜுன் மாதம் 11 ஆம் திகதி முதல் 27 ஆம் திகதி வரை 16 நாட்கள் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட்ட தபால் ஊழியர்களின் பணிப் பகிஷ்கரிப்பினை அடுத்து கடந்த வருடம் செப்டம்பர் மாதம் தபால் ஊழியர்களின் கோரிக்கைகளுக்கான பரிந்துரைகள் அமைச்சரவைக்கு கொண்டு செல்லப்பட்டது. 

எனினும் அதற்கான அமைச்சரவை அனுமதி இதுவரை கிடைக்கவில்லை எனவும் அதற்கான அனுமதியினை வழங்க அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என சுட்டிக்காட்டியோ இப்பணிப்பகிஷ்கரிப்புப் போராட்டம் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.

கேசரி 

Post a Comment

0 Comments
Post a Comment (0)
6/grid1/Political
To Top