என்டர்பிரைஸ் ஸ்ரீலங்கா கருத்திட்டத்தில் இரண்டாது தேசிய கண்காட்சி, நாளை (24) ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பிரதமர் ரணில் விக்ரமசிங்க ஆகியோரின் தலைமையில் அநுராதபுரத்தில் ஆரம்பமாகவுள்ளது.
இக் கண்காட்சி 24 ஆம் திகதி மாலை 4.00 மணிக்கு பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையில் உத்தியோகவூர்வமாக திறந்துவைக்கப்படும். எனினும், 24 ஆம் திகதி காலை 9.00 மணிக்கு பொதுமக்களின் பார்வைக்காக கண்காட்சி ஆரம்பமாகவுள்ளது. இந்தக் கண்காட்சி காலை 10.00 மணி தொடக்கம் நள்ளிரவு 12.00 மணி வரை எதிர்வரும் 27 ஆம் திகதி வரை நடைபெறும்.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பிரதமர் ரணில் விக்ரமசிங்க ஆகியோர் இக்கண்காட்சியை உத்தியோகபூர்வமாக திறத்து வைப்பர். இதற்காக அநுராதபுரம் ஹரிஸ்சந்திர விளையாட்டு மைதானத்தில் 400 ற்கு மேற்பட்ட வர்த்தக கூடங்கள் நிறுவப்பட்டுள்ளன.
இலங்கை தொழில் முயற்சியாளர்களை ஊக்குவிக்கும் நோக்கில் நிதியமைச்சு, “என்டர்பிரைஸ் ஸ்ரீலங்கா” கண்காட்சியை ஏற்பாடு செய்துள்ளது.
அரச மற்றும் தனியார் வங்கிகள், அரச நிறுவனங்களினால் தொழில் முயற்சியாளர்களுக்குத் தேவையான கடன், ஆலோசனைகள், வழிகாட்டல்கள் மற்றும் பயிற்சிகளை வழங்குவதற்கான சந்தர்ப்பமாகவே இக்கண்காட்சி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
பிரதமரின் கீழ் செயற்படும் தேசிய கொள்கை அமைச்சின் கீழ் உள்ள, சிறிய வர்த்தக நடவடிக்கைகளை ஆரம்பிப்பதற்கான விடயங்களையும் இங்கு பெற்றுக்கொள்ள முடியும்.
07 கண்காட்சி வலயங்களைக் கொண்டதாக இந்தக் கண்காட்சி அமைந்துள்ளது. இதற்கு மேலதிகமாக புதிய தயாரிப்பாளர்களுக்கான வலயமொன்றும், புத்திஜீவிகள் மற்றும் அச்சு ஊடகத்துறையைச் சேர்ந்தவர்களைக் கொண்ட வலயமொன்றும் கண்காட்சியில் இடம்பெறுகிறது.
கண்காட்சியைப் பார்வையிட வரும் பொதுமக்கள், மலிவு விலையில் பொருட்களை கொள்வனவு செய்ய முடியும்.
இலங்கை முதலீட்டுச் சபையின் கீழ் உள்ள கைத்தொழிற்சாலையில் தயாரிக்கப்பட்ட ஆடைகள், ஆடைத்தொழில் துறையின் சுங்கவரியற்ற பொருட்களை கொள்வனவு செய்வதற்கும் சந்தர்ப்பம் வழங்கப்படும்.
அரச நிறுவனங்கள் பலவற்றின் நடமாடும் சேவைகளும் இங்கு இடம்பெறுகிறது.
சட்ட உதவியைப் பெற்றுக்கொள்ள நீதி நிவாரண உதவிகளைப் பெற்றுக்கொள்ளக் கூடிய சந்தர்ப்பமும் இதில் உண்டு. இதற்கு மேலதிகமாக, விமான ஆயுதங்களுடனான முப்படையினரின் கண்காட்சி கூடமும் இதில் இடம்பெறவுள்ளது. இவற்றின் செயற்பாடுகளுடனான கண்காட்சிகளையும் இதன் போது பார்வையிடமுடியும்.
இந்த கண்காட்சியில் ஒவ்வெரு நாளும் நாட்டின் பிரபல இசைக்குழுவினரின் மற்றும் முன்னனி பாடகர்களின் இசை நிகழ்ச்சிகளும் இடம்பெறவுள்ளது
என்டர்பிரைஸ் ஶ்ரீலங்கா வேலைத் திட்டத்தின் மூலம் இதுவரை 55000 விண்ணப்பதாரிகளுக்கு 88 பில்லியன் ரூபா நிவாரணக் கடன் வழங்கப்பட்டுள்ளதாக இராஜாங்க நிதியமைச்சர் எரான் விக்ரமரத்ன தெரிவித்தார். நிதியமைச்சில் நேற்று (22) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.
அங்கு தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர்,
''சீனா, பங்களாதேஸ், வியட்நாம் போன்ற நாடுகளுடன் ஒப்பிடும் போது, இலங்கையின் தொழில்முனைவர்களின் எண்ணிக்கை மிகக் குறைவாக இருக்கிறது. குறிப்பாக தொழில்புரிவோரின் எண்ணிக்கையுடன் இதனை ஒப்பிடும் போது இலங்கையில் 03 % வீதமாகவே இருக்கிறது. இதனை அதிகரிப்பதே எமது பிரதான இலக்கு. இதற்காகவே "என்டர்பிரைஸ் ஶ்ரீலங்கா" என்ற வேலைத் திட்டத்தை ஆரம்பித்துள்ளோம். இதனை நாடு முழுவதும் நடத்துகின்றோம்.
கொழும்பில் இதற்கான கண்காட்சியை நடத்தினால் நாட்டில் ஏனைய பிரதேசங்களில் உள்ள மக்கள் அனைவரும் கொழும்பிற்கு வருவது சிரமமாக இருக்கும். அதனால் மாவட்ட ரீதியாக இதனை நடத்தத் தீர்மானித்தோம். முதல் கண்காட்சியை மொனராகலை மாவட்டத்தில் நடத்தியிருந்தோம். என்டர்பிரைஸ் ஶ்ரீலங்கா வேலைத் திட்டத்தின் மூலம் இதுவரை, 55 00 விண்ணப்பதாரிகளுக்கு 88 பில்லியன் ரூபா கடன் வழங்கப்பட்டுள்ளது.
அநுராதபுரத்தில் எதிர்வரும் 24ஆம் திகதி முதல் 27ஆம் திகதி வரை இதற்கான கண்காட்சியை நடத்தவுள்ளோம். வங்கிக் கடன்களைப் பெறுவது, சந்தைப்படுத்தல் குறித்து தெளிவுபெறுவது உள்ளிட்ட தொழில்முனைவர்களின் தேவைகளைப் பூர்த்தி செய்ய முடியும். அநுராதபுரத்தில் 20 000 தொழில்முனைவர்களை உருவாக்குவதே எமது இலக்கு'' என்று அவர் மேலும் தெரிவித்தார்.
பர்வீன் சனூன்
Post a Comment