நாட்டில் இயங்கிவரும் அரபு மத்ரஸாக்களுக்குப் பொருத்தமான புதிய பாடத்திட்டமொன்று வடிவமைக்கப்படவுள்ளது.
இந்தப் பாடத்திட்டத்தை தயாரிப்பதற்கு பங்களாதேஷின் மத்ரஸா கல்விச் சபையின் உதவி பெற்றுக் கொள்ளப்படவுள்ளது.பங்களாதேஷிலிருந்து வருகை தரவுள்ள மத்ரஸா கல்விச் சபையின் நிபுணர்கள் இருவர் இலங்கையின் முஸ்லிம் சமய விவகார அமைச்சு மற்றும் கல்வி அமைச்சின் செயலாளர்கள் மற்றும் உயர் அதிகாரிகளைச் சந்தித்து இது தொடர்பில் கலந்துரையாடல்களை நடாத்தி அறிக்கை சமர்ப்பிக்கவுள்ளனர்.
கல்வி அமைச்சும், வெளிவிவகார அமைச்சும் இணைந்து இதற்கான ஏற்பாடுகளைச் செய்துள்ளன.
இந்தப் பணிகளுக்காக பங்களாதேஷ் மத்ரஸா கல்விச் சபையைச் சேர்ந்த கலாநிதி மொஹமட் ஹுசைன் மஹ்மூத் பாரூக் மற்றும் கலாநிதி மஹ்சூம் பில்லா ஆகிய இருவரும் நாளை 27 ஆம் திகதி இலங்கைக்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளனர். அவர்கள் இருவரும் எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் 7 ஆம் திகதி வரை இலங்கையில் தங்கியிருந்து இந்தப் பணிகளில் ஈடுபடவுள்ளனர்.
நாளை இலங்கை வருகை தரும் பங்களாதேஷ் மத்ரஸா கல்விச் சபையைச் சேர்ந்த கல்வி நிபுணர்கள் 28 ஆம் திகதி முஸ்லிம் சமய விவகார அமைச்சரின் தலைமை யிலான குழுவினரைச் சந்தித்து மத்ரஸா பாடத்திட்டம் தொடர்பில் கலந்துரை யாடவுள்ளனர். அத்தோடு அன்றைய தினமே கல்வி அமைச்சின் செயலாளர் உட்பட அதிகாரிகளைச் சந்திக்கவுள்ளனர். 30 ஆம் திகதி பயிற்சிப் பட்டறையொன்றும் இத்திஹாதுல் மதாரிஸ் அமைப்புடன் கலந்துரையாடலொன்றும் இடம்பெறவுள்ளது.
இக்கலந்துரையாடல் மற்றும் பயிற்சிப் பட்டறையில் பங்களாதேஷ் கல்வியலாளர்களுடன் முஸ்லிம் சமய விவகார அமைச்சு மற்றும் கல்வி அமைச்சின் அதிகாரிகள் கலந்து கொள்ளவுள்ளனர். இத்திஹாதுல் மதாரிஸ் நிறுவனம், இலங்கையின் மத்ரஸா கல்வி மற்றும் அக்கல்வி பாடத்திட்டம் தொடர்பான பரிந்துரைகளையும் முன்வைக்கவுள்ளது. எதிர்வரும் 31 ஆம் திகதி முதல் ஆகஸ்ட் 4 ஆம் திகதி வரை பங்களாதேஷ் மத்ரஸா கல்வியலாளர்கள் இருவரும் நாட்டின் பல பாகங்களிலுமுள்ள மத்ரஸாக்களுக்கு கல்வி கள விஜயத்தினை மேற்கொள்ளவுள்ளனர்.
எதிர்வரும் 5 ஆம் திகதி மத்ரஸா சீர்திருத்தங்கள் தொடர்பிலான பயிற்சிப்பட்டறையொன்று ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்தப் பயிற்சிப் பட்டறைக்கு கல்வி அமைச்சு மற்றும் முஸ்லிம் சமய விவகார அமைச்சின் அதிகாரிகள், உலமாக்கள், மத்ரஸாக்களின் நிர்வாகிகள் அழைக்கப்பட்டுள்ளனர்.
பங்களாதேஷின் கல்வி நிபுணர்கள் இருவரும் இலங்கை மத்ரஸாக்களுக்குப் பொருத்தமான பாடத்திட்டம் தொடர்பில் அறிக்கையொன்றினைத் தயாரித்து எதிர்வரும் 7 ஆம் திகதி பிரதமர் மற்றும் முஸ்லிம் சமய விவகார அமைச்சர், கல்வி அமைச்சர் ஆகியோரிடம் கையளிக்கவுள்ளனர்.
Post a Comment