அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள நோயாளர்களை பார்வையிடச் சென்றவர்கள், இன்று சனிக்கிழமை, வைத்தியசாலை நுழை வாயிலில் நீண்ட நேரம் தடுத்து வைக்கப்பட்டதாகவும், இதனால் பல்வேறு அசௌகரியங்கள் பொதுமக்களுக்கு ஏற்பட்டதாகவும் விசனம் தெரிவிக்கப்படுகிறது.
குறித்த வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள நோயாளர்களைக் காணச் செல்வோர், இவ்வாறு அடிக்கடி அசெளகரியங்களுக்கு முகம்கொடுப்பதாகவும் கூறப்படுகிறது,
ஈஸ்டர் தாக்குதலுக்கு பின்னர், அரசாங்கம் பாதுகாப்பை உறுதிப்படுத்தியுள்ள பிறகும், அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலை நிருவாகம் இன்னும் இந்த நாட்டில் அச்ச சூழல் இருப்பதாகவே காண்பிக்க முயற்சிப்பதாகவும் மக்கள் தெரிவிக்கின்றனர்.
வைத்தியசாலைக்கு வருவோர் தமது வாகனங்களை வைத்தியசாலைக்கு முன்பாக வெளியில் தரித்து நிறுத்த முடியாதவாறும், தலைக்கவசங்களை பாதுகாப்பாக தத்தமது கைகளில் வைத்திருக்க முடியாதவாறும் வைத்தியசாலை நிருவாகத்தினர் தடைகளை ஏற்படுத்தியுள்ளனர் என்றும் மக்கள் கூறுகின்றனர்.
ஏப்ரல் தாக்குதலுக்கு முன்னர், வைத்தியசாலைக்கு முன்பாக வாகனங்களை தரித்து நிற்க அனுமதித்த நிருவாகத்தினர், தற்போது அதற்கு தடை விதித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையிலேயே இன்று நோயாளர்களை பார்வையிடச் சென்றவர்கள் வைத்தியசாலையின் வாயிலில் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளனர். இதனால் வீதியால் பயணித்த வாகனங்களுக்கும் பாதசாரிகளுக்கும் பெரும் இடைஞ்சல் ஏற்பட்டதோடு, நோயாளர்களை பார்வையிட வந்த வயோதிபர்கள், பெண்கள் என பலரும் பல்வேறு சிரமங்களை எதிர்கொண்டுள்ளனர்.
எனவே குறித்த விடயம் தொடர்பில் வைத்திய அத்தியட்சகர் உடன் நடவடிக்கை மேற்கொண்டு பொதுமக்களின் அசெளகரியங்களை தவிர்க்க நடவடிக்கை மேற்கொள்ளுதல் அவசியம் எனச் சுட்டிக்காட்டப்படுகிறது.
மேற்குறித்த நடைமுறைகள் அம்பாறை, மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைகளிலே இல்லை என்றும் மக்கள் தெரிவிக்கின்றனர்.
source : puthithu
Post a Comment