நாட்டில் அடிப்படை உரிமைகளை விட்டுக் கொடுத்து அரசியல் செய்யமாட்டோம் என நாடாளுமன்ற உறுப்பினர் அப்துல்லா மஃறூப் தெரிவித்துள்ளார்.
கிண்ணியாவில் நேற்றைய தினம் மாலை அமான் வீதிக்கான காபட் இடும் அங்குரார்ப்பண நிகழ்வு இடம்பெற்றது. குறித்த நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே மேற்கண்டவாறு தெரிவித்தார்.
தொடர்ந்தும் அங்கு உரையாற்றுகையில்,
இங்கு வீதிகளை மாத்திரம் திறந்து விட்டு சென்று அபிவிருத்திகளை நடை முறைப்படுத்த வரவில்லை. மாறாக இன்றைய கால கட்டத்தில் முஸ்லிம்களின் உரிமைகள் பாதுகாக்கப்படுவதற்காக போராடுகிறோம்.
முஸ்லிம்களின் மத அனுஷ்டானங்கள், பாதுகாப்பு, வாழ்வாதாரம், காணி போன்ற விடயங்களை இழந்து வாழ்ந்து வருகிறோம்.
பேரினவாதிகளின் அடாவடித்தனங்களுக்கும், அட்டூழியங்களுக்குள்ளும் தள்ளப்பட்டு எமது குரல் வளைகளை நசுக்குகின்ற சதிகாரர்களாக நாட்டு நிலமைகள் படு மோசமாக மாறியிருக்கின்றன.
இரு வருட காலம் இருக்கும் போதே மஹிந்த அரசின் ஆட்சி கவிழ்க்கப்பட்டது. இருந்த போதிலும் அதிகூடிய வாக்குகளில் சுமார் இலங்கையில் காணப்படும் 166 தொகுதிகளில் இருந்தும் அதிகமான வாக்குகளை இந்த மாவட்டத்தில் உள்ள தொகுதியே அளித்து மைத்திரியை ஜனாதிபதியாக்கினோம்.
ஜனாதிபதி தேர்தலின் போது இரு பாலங்களை அமைத்து தருவதாக வாக்குறுதியளித்திருந்த நிலையில் அது இன்னும் நிறைவேறவில்லை, இதனை சவாலாக ஏற்றுக் கொண்டு இந்த வருடத்துக்குள் கிண்ணியா குறிஞ்சாக்கேணி பாலத்தை நிர்மாணிப்பேன்.
பொலன்னறுவையில் பல மில்லியன்களில் செலவு செய்யும் ஜனாதிபதிக்கு எமது பகுதி பால நிர்மாணத்தை ஏன் செய்ய முடியாது? எனவும் கேள்வியெழுப்பியுள்ளார்.
நாடாளுமன்ற தெரிவுக்குழுவின் முன் சாட்சியமளித்து, அரச புலனாய்வு பிரிவு உள்ளிட்ட பல விசாரணைகள் ஊடாக இன்று பல உண்மைகள் வெளிவந்து கொண்டிருக்கின்றன.
இலங்கை நாடாளுமன்றிலே இனவாதிகள் இருக்கிறார்கள். முதலில் இந்த உதய கம்மன்பில, அதுரலிய, எஸ்.பி.திஸாநாயக்க உள்ளிட்ட ஆறு இனவாதிகளை இல்லாதொழிக்க வேண்டும் எனவும் இதன் போது அவர் தெரிவித்தார்.
Post a Comment